ஆட்சியில் பங்கா? கூட்டணியில் இருப்பது அவர்களின் விருப்பம் - அமைச்சர் பேச்சால் அதிரும் கூட்டணிக் கட்சிகள்!
கூட்டணி என்பது திராவிட முன்னேற்ற கழகத்தை பொறுத்தவரை ஒத்த கருத்துடைய இயக்கங்கள். கூட்டணியில் இருக்காங்க. அது அவர்களின் விருப்பம்
ஆட்சியில் பங்கு என்பது எப்போதும் கிடையாது எனவும் கூட்டணியில் இருப்பது அவர்களின் விருப்பம் எனவும் அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “கூட்டணி என்பது திராவிட முன்னேற்ற கழகத்தை பொறுத்தவரை ஒத்த கருத்துடைய இயக்கங்கள். கூட்டணியில் இருக்காங்க. அது அவர்களின் விருப்பம். கூட்டணியில் இருப்பதால் ஆட்சியில் பங்கு வழங்கியது எப்போதும் கிடையாது.
ஒரு சின்ன பிரச்சினையாக இருந்தாலும் தனி கவனம் செலுத்துகிறார். ஒரு சாதாரண குடிமகன் பாதிக்கப்பட்டிருந்தால் யாராக இருந்தாலும் எவ்வளவு பெரிய அந்தஸ்தில் இருந்தாலும் உனடடியாக நடவடிக்கை எடுக்கக்கூடிய ஒரே முதல்வர் ஸ்டாலின் மட்டும்தான். பாராபட்சம் பார்க்க மாட்டார். சட்ட ஒழுங்கை நிலைநாட்டுவதில் நிலையாக இருக்கிறார். முந்தைய ஆட்சி காலத்தில் ஆட்சியாளர்களே குட்கா வழக்கில் இருக்கிறார்கள். ஆட்சிக்கு வந்தவுடன் அவர்களின் சொத்துக்களை எல்லாம் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்த அரசு திமுக அரசு.
முன்பு போதைப்பொருள் விற்றவர்கள் இப்போது அந்த பழக்கத்தை விட்டுவிட்டார்கள். அதற்கு காரணம் கடுமையான நடவடிக்கை.
எள் முனை அளவு கூட நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் தயங்கியதில்லை. நூற்றுக்கு 99 சதவீதம் நன்மை நடக்கிறது. அதையும் பார்க்கணும். எங்கேவது ஒரு சின்ன விஷயம் நடந்தாலும் அதற்கும் நடவடிக்கை எடுக்கத்தான் செய்யுது திமுக அரசு. அவரது ஆட்சியில் சிறு கரும்புள்ளி கூட விழுந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்” எனத் தெரிவித்தார்.
தவெக மாநாட்டில் விஜய் கொளுத்தி போட்ட நெருப்பு திமுகவில் புகைந்து கொண்டே இருக்கிறது. கூட்டணிக் கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு என்று வாக்குறுதி கொடுத்தார் விஜய். அன்று முதல் திமுகவில் இடம்பெற்றிருக்கும் விசிக உள்ளிட்ட கூட்டணிக்கட்சிகளின் எதிர்பார்ப்புகள் எகிறி வருகின்றன என திமுக வட்டாரங்கள் கருதுகின்றன.
திருமாவின் நீண்ட நாள் கோரிக்கையை விஜய் மேடையில் பேசியிருந்தாலும் அதை திருமாவளன் விமர்சிக்கவே செய்தார். ”ஆசைவார்த்தை கூறினால் நாங்கள் கூட்டணிக்கு வந்துவிடுவோம் என விஜய் நினைப்பதாக தெரிவித்திருந்தார். நான் அரசியல் களத்தில் அடியெடுத்து வைக்கும்போது அடித்தட்டு மக்கள் அதிகாரமிக்கவர்களாக வர வேண்டும் என நினைத்தேன். முதல்வர் கனவு உண்டு என்று சொன்னதும் நான் அந்த பதவியில் உட்கார வேண்டும் என்று அர்த்தமல்ல” எனக் குறிப்பிட்டார்.