Minister Duraimurugan :கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவதை தமிழக அரசு அனைத்து நிலைகளிலும் எதிர்க்கும் - அமைச்சர் துரைமுருகன்
கர்நாடக அரசு மேகதாதுவில் அணைகட்ட திட்டமிடுவதை தமிழக அரசு அனைத்து நிலைகளிலும் எதிர்க்கும் என்றும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
![Minister Duraimurugan :கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவதை தமிழக அரசு அனைத்து நிலைகளிலும் எதிர்க்கும் - அமைச்சர் துரைமுருகன் Minister Duraimurugan said Tamil Nadu government will oppose the construction of a dam in mekedatu by the karnataka government Minister Duraimurugan :கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவதை தமிழக அரசு அனைத்து நிலைகளிலும் எதிர்க்கும் - அமைச்சர் துரைமுருகன்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/31/f5d0f3bcc1e1f8101a11843f9aa4a7381685528128262333_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கர்நாடக அரசு மேகதாதுவில் அணைகட்ட திட்டமிடுவதை தமிழக அரசு அனைத்து நிலைகளிலும் எதிர்க்கும் என்றும் காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்புகளில் மேகதாது பற்றி குறிப்பிடப்படவில்லை என்றும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
”மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என்றும் அதற்காக 1,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கம் செய்யப்பட்டுள்ளது என்றும் கர்நாடக மாநில நீர்வளத்துறை அமைச்சர் சிவக்குமார் அவர்கள் தெரிவித்ததாக இன்று காலை பத்திரிக்கையில் செய்தி வந்துள்ளது.
பெரும் போராட்டத்திற்கு பிறகு வெற்றி பெற்றிருக்கிற திரு சிவக்குமார் அவர்கள் மக்களின் வாழ்த்துக்களை பெறுவதில் பரபரப்பாக சுழன்று கொண்டிருப்பதால், கொஞ்சம் நிதானித்து நேரில் வந்து வாழ்ந்து கூறலாம் என்று நினைத்திருந்தேன். இருப்பினும் இந்த அறிக்கையின் வாயிலாக முதற்கண் என்னுடைய வாழ்த்துக்களை அவருக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
சிவக்குமார் அவர்கள் பதவிப் பிரமானம் எடுத்த சில நாட்களுக்குள்ளாகவே அண்டை மாநிலத்தை உரசிப் பார்க்கிற காரியத்தை செய்வது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. மேகதாது பற்றிய முழு விவரத்தை அதிகாரிகள் இன்னும் அவருக்கு சொல்லியிருக்க மாட்டார்கள் என்று கருதுகிறேன்.
காவிரிப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக அமைக்கப்பட்ட காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புகளில் மேகதாது பற்றி குறிப்பிடப்படவில்லை. மேகதாதுவோ அல்லது அனுமதிக்கப்படாத கட்டுமானங்களோ தமிழ்நாட்டின் நலனை பாதிக்கும். எனவே, தமிழ்நாட்டிற்கு உரிமையுள்ள கட்டுப்பாடற்ற நீர்பிடிப்புப் பகுதியில் (uncontrolled intermediate catchment) மேகதாதுவில் அணை கட்டுவோம் என்று கூறுவது வரவேற்கத்தக்கதல்ல.
கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட திட்டமிடுவதை தமிழ்நாடு அனைத்து நிலைகளிலும் எதிர்க்கும். விரைவில் தங்களை நேரில் சந்திக்கின்ற வாய்ப்பு எனக்கு கிடைக்கும். அப்போது இந்த பிரச்சினையை பற்றி விரிவாக பேசலாம் என்று கருதுகிறேன். அமைச்சர் சிவக்குமார் அதுவரை பொறுமை காப்பார் என நினைக்கிறேன்”. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கர்நாடகாவில் கடந்த 10-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடந்த நிலையில், காங்கிரஸ் பெரும்பான்மையான தொகுதிகளில் வென்று ஆட்சி அமைத்தது. காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் வாக்குறுதியில், காவிரியின் குறுக்கே தமிழ்நாட்டுக்கு எதிராக மேகதாது அணை கட்டுவதற்கு ரூ. 9,000 கோடி நிதி ஒதுக்குவோம் என உறுதி அளித்தது. தற்போது அம்மாநில நீர்வளத்துறை அமைச்சர் மேகதாதுவில் அணை கட்ட 1000 கோடி நிதி ஒதுக்கி உள்ளதாகவும், அணை கட்டியே தீருவோம் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)