Governor RN Ravi: அமைச்சரவையில் மாற்றமா?ஆளுநரை சந்திக்கும் அமைச்சர் துரைமுருகன்.!
தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக கூறப்பட்டு வரும் நிலையில் ஆளுநர் மாளிகை செல்கிறார் அமைச்சர் துரைமுருகன்.
ஆளுநர் ஆர்.என். ரவியை சந்திக்க சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனுக்கு அமைச்சர் துரைமுருகன் செல்கிறார். தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக கூறப்பட்டு வரும் நிலையில் ஆளுநர் மாளிகை செல்கிறார்.
திமுக ஆட்சி அமைந்து இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்து மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது. இந்த சூழலில் அமைச்சரவையில் புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கவும் சரியாக செயல்படாதவர்களை மாற்றவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே, இரண்டு முறை அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டிருக்கும் நிலையில், 3வது முறையாக செய்யப்படவுள்ள மாற்றம் முக்கியமானதாக இருக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். முதலில் அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது புகார் எழுந்த நிலையில், துபாயில் இருந்தபடியே அவர் வகித்த போக்குவரத்துத் துறையை அமைச்சர் சிவசங்கருக்கு வழங்கி, சிவசங்கர் கவனித்து வந்த பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையை ராஜகண்ணப்பன் வசம் தந்தார் முதல்வர் ஸ்டாலின், இரண்டாவதாக, உதயநிதி ஸ்டாலினை அமைச்சரவைக்குள் கொண்டுவரும்போது 10 அமைச்சர்களின் இலாக்காக்களில் மாற்றம் செய்யப்பட்டது. குறிப்பாக, வனத்துறையை கவனித்து வந்த அமைச்சர் ராமசந்திரனிடமிருந்து அந்த துறை பிடுங்கப்பட்டு, சுற்றுலாத்துறையை கவனித்து வந்த அமைச்சர் மதிவேந்தனுக்கு தரப்பட்டது. மதிவேந்தன் வகித்த சுற்றுலாத்துறை ராமசந்திரனுக்கு மாற்றி வழங்கப்பட்டது.
இந்த நிலையில் மூன்றாவது முறையாக அமைச்சரவை மாற்றம் செய்யப்படும் என்ற தகவல் அமைச்சர்கள் மத்தியில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக இருக்கும் கயல்விழி செல்வராஜ் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக அதே சமூகத்தை சேர்ந்த மற்றொரு எம்.எல்.ஏ அமைச்சர் ஆக்கப்படுவார் என கூறப்படுகிறது. அதேபோல, சுற்றுலாத்துறை அமைச்சராக இருக்கும் ஊட்டி ராமசந்திரன் மீது அடுக்கடுக்கான புகார்கள் முதல்வர் அலுவலகத்திற்கு சென்றிருப்பதாலும் அவரின் இலாக்கவும் மாற்றப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது. இவர்கள் இருவர் மட்டுமில்லாமல், பால்வளத்துறை அமைச்சர் நாசரின் செயல்பாடுகளிலும் சர்ச்சைகள் இருப்பதால் அவரிடமிருந்து அமைச்சர் பொறுப்பை திரும்ப பெற வேண்டும் என முதல்வரிடம் அதிகாரிகள் தரப்பில் இருந்து அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது.
கயல்விழி, ஊட்டி ராமசந்திரன், நாசர் உள்ளிட்ட அமைச்சர்கள் மாற்றப்படலாம் என கூறப்படும் நிலையில் மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினரான டி.ஆர்.பி ராஜாவிற்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி பரபரப்பான அரசியல் சூழலில் அமைச்சர் துரைமுருகன், சென்னை கிண்டியில் இருக்கும் ஆளுநர் ஆர்.என் ரவியை சந்தித்து மாற்றம் செய்யப்பட்ட அமைச்சரவை பட்டியலை வழங்குவார் என தகவல் வெளியாகியுள்ளது.
CM Speech :பெண்களை அதிக அளவில் பணியமர்த்தும் நிறுவனங்களை வரவேற்கிறது தமிழ்நாடு- முதலமைச்சர் ஸ்டாலின்
Aavin Cow Milk : இன்று முதல் செறிவூட்டப்பட்ட ஆவின் பசும் பால்.. ஆவினின் புதிய அறிமுகம்..