HBD Duraimurugan | முருகன்... Thug Life துரைமுருகன் ஆன கதை..!
அமைச்சர் துரைமுருகன் இன்று தனது 85-ஆவது வயதில் அடி எடுத்து வைக்கிறார். நகைச்சுவை வித்தகரான அவர் அரசியலுக்கு வர அவரது கிராமத்தில் நடந்த வன்முறை சம்பவமே காரணமாக அமைந்துள்ளது
2019ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரை களம் சூடு பிடித்திருந்த நிலையில் எப்போதும் வெயிலுக்கு பேர்போன வேலூரில் துரைமுருகன் மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறையினர் நடத்திய திடீர் ரெய்டு ஓட்டுமொத்த திமுகவினர் மத்தியிலும் அனலை கிளப்பியது. பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக செய்திகள் பரவத்தொடங்கிய நிலையில் வேலூர் தொகுதியில் எப்போது வேண்டுமானாலும் தேர்தல் நிறுத்தப்படலாம் என்ற தகவலும் ஊடகங்களில் வரத்தொடங்கின.
துரைமுருகனின் வீட்டின் உள்ளே என்ன நடந்தது? என்ற கேள்வி எல்லோரின் மனதிலும் எழுந்தநிலையில் முகத்தில் மூன்று கோட்டிங் பவுடர் பளபளக்க, அத்தர் மணமணக்க, சந்தன நிறச் சட்டை சகிதமாக வீட்டில் இருந்து வெளியே வந்த துரைமுருகன், வெளியே இருக்கும் கதவின் மீது தனக்கே உரிய பாணியில் சாய்ந்து கொண்டு செய்தியாளர்களிடம் பேச தொடங்கினார்.
அப்போது தொண்டர் ஒருவர் உணர்ச்சி வேகத்தில் ’’தலைவரே உங்களுக்காக தீக்குளிக்குறோம் தலைவரே.’... உள்ள என்ன நடந்துதுன்னு? சொல்லுங்க... என கத்த, தொண்டர்கள் மத்தியில் பரபரப்பு பற்றிக் கொண்டது. சட்டென இதனை சுதாரித்த துரைமுருகன், ’’தீக்குளிச்சா நீ செத்துபோய்டுவ’... ’’போய் டீ குடிச்சிட்டு எலெக்ஷன் வேலைய பாரு’’... என சொல்ல, கூடியிருந்த தொண்டர்களும் செய்தியாளர்களும் குலுங்கி குலுங்கி சிரிக்கத் தொடங்கினர். இறுக்கம் நிறைந்திருந்த அந்த இடத்தை சிரிப்பொலி ஆக்கிரமிக்கத் தொடங்கியது. இதுதான் துரைமுருகன்...
இன்றைய தினம் தனது 85-ஆவது வயதில் அடியெடுத்து வைக்கும் துரைமுருகன், அன்றைய வட ஆற்காடு மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள காங்குப்பம் கிராமத்தில்1938-ஆம் ஆண்டு விவசாயியான துரைசாமிக்கு மகனாக பிறந்தார். அவருக்கு பெற்றோர் முதலில் வைத்த பெயர் முருகன் என்பதுதான். பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது தனது தந்தை துரைசாமியின் முதல் எழுத்தை சேர்த்து து.முருகன் என ஆசிரியர்கள் அழைத்ததை சக நண்பர்கள் கேலி செய்ய தொடங்கினர். இதனால் ஆங்கிலத்தின் தனது ஊரான காங்குப்பத்தின் பெயரையும் தனது தந்தையின் பெயரையும் சேர்த்து K.D.முருகன் என மாற்ற நினைத்தார். ஆனால் தமிழில் அந்த பெயரை எழுதும்போதும் பேசும்போதும் கே.டி.முருகன் என வரும் என்பதால் தனது தந்தையிடம் இருந்து துரை என்ற வார்த்தையை தனது பெயரான முருகனுடன் இணைத்து துரைமுருகன் ஆனார்.
அரசியலில் விளையாட்டாக நடந்து கொள்பவராக துரைமுருகன் இருக்கிறார் என்ற பார்வை அனைவரிடத்திலும் உள்ளது. ஆனால் துரைமுருகன் அரசியலுக்கு வரக் காரணம் அவர் கிராமத்தில் நடந்த சீரியஸான சம்பவம்தான்.
காங்குப்பம் கிராமத்திற்கு அருகே நடந்த கூட்டம் ஒன்றில் ஏன் வேண்டும் திராவிட நாடு என்ற தலைப்பில் பேசிய நாவலர் நெடுஞ்செழியனின் பேச்சை கேட்ட பிறகு, துரைமுருகனின் சிந்தனை தனிநாடு கேட்டு போராடிய திராவிடர் கழகம் நோக்கி சென்றது. அப்போது காங்குப்பம் கிராமம் முழுக்க காங்கிரஸ்காரர்கள் நிறைந்திருந்த நிலையில் 1954ஆம் ஆண்டில் நடந்த ஊர் திருவிழாவின் போது ஊரில் சிலர் கருப்புசட்டை அணிந்ததால் அவர்கள் ஊர்க்காரர்களால் தாக்கப்பட்டு அவர்களுடைய கருப்பு சட்டை சாலையில் போட்டு எரிக்கப்பட்டது. இதனை கண்டு வெகுண்டெழுந்த துரைமுருகன், சத்தியவாணி முத்துவை தனது ஊருக்கு அழைத்து முதன்முறையாக தனது கிராமத்தில் திமுக கிளை கழகத்தை தொடங்கி அதன் செயலாலரானார்.
தனது கல்லூரி காலத்தில் 1965ஆம் ஆண்டில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் மிகத்தீவிரமாக ஈடுபட்ட துரைமுருகன், 1971 ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை நடந்த 13 தேர்தல்களில் போட்டியிட்டு 11 முறை வென்று தற்போதய சட்டப்பேரவையின் மிக மூத்த உறுப்பினராக உள்ளார்.
1989, 1996, 2006 ஆண்டுகளில் கருணாநிதி தலைமையிலான அமைச்சரவையில் பொதுப்பணித்துறை அமைச்சராகவும், சட்டத்துறை அமைச்சராகவும் இருந்த துரைமுருகன், தற்போது அமைந்துள்ள ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் நீர்வளம் மற்றும் கனிம வளத்துறை அமைச்சராக உள்ளார். தனது 16 வயதில் திமுகவின் கிளைக்கழக செயலாளராக தொடங்கிய துரைமுருகனின் அரசியல் பயணம் 85-ஆவது வயதில் திமுகவின் அதிகாரம் மிக்க பொறுப்புகளில் ஒன்றான பொதுச்செயலாளராக தொடர்கிறது.
துரைமுருகன், காட்பாடி மக்களுக்கு எம்.எல்.ஏ, திமுகவினருக்கு பொதுச்செயலாளர், தமிழக மக்களுக்கு நீர் வளத்துறை அமைச்சராக இருக்கலாம். இந்த பதவிகள் எல்லாம் அவருக்கு வரலாம் போகலாம் ஆனால் மீம்ஸ் கிரியேட்டர்களின் மனதில் எப்போதும் அவர் THUG LIFE துரைமுருகனாகவே வாழ்ந்து வருகிறார். பிரஸ் மீட்டுகளில் அவர் அடிக்கும் கமெண்ட் ஜோக்குகளும் மேடைகளில் பேசும் போது சிரிப்பை ஏற்படுத்தும் முகபாவனைகளும் நிறைந்த வீடியோக்கள் சமூகவலைதளங்களில் இருக்கும்வரை இந்த பட்டத்தை யாராலும் எப்போதும் மீம்ஸ் கிரியேட்டர்களிடம் இருந்து எப்போதும் பிரிக்க முடியாது. வாழ்த்துக்கள் அமைச்சர் துரைமுருகன்.