Actor Vijay: 'விஜய் நல்ல மனிதர்..ஆனால் பாவமா இருக்கு..’ அரசியல் வருகை குறித்து துரைமுருகன் கருத்து..!
விஜய் அரசியல் கட்சி தொடங்கப்போவது குறித்து தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்த கருத்து இணையத்தில் வைரலாகியுள்ளது.
விஜய் அரசியல் கட்சி தொடங்கப்போவது குறித்து தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்த கருத்து இணையத்தில் வைரலாகியுள்ளது.
விஜய்யின் அரசியல்
தமிழ்நாடு அரசியலுக்கும், திரைத்துறைக்கும் காலம் காலமாக நல்ல பிணைப்பு உள்ளது. முன்னாள் முதலமைச்சர்களான கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோர் திரைத்துறையிலும் மகத்தான சாதனைப் படைத்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளனர். அந்த வகையில் விரைவில், தமிழ் சினிமா ரசிகர்களால் தளபதியாக கொண்டாடப்படும் நடிகர் விஜய்யும் அரசியலுக்கு வரப்போகிறார் என்பது கிட்டதட்ட உறுதியாகி விட்டது.
2008 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் தனது ரசிகர் மன்றத்தை விஜய் மக்கள் இயக்கமாக மாற்றினார். தொடர்ந்து 2011 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்தார். பின்னர் கடைசியாக நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் தனது மக்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களை சுயேட்சையாக போட்டியிட அனுமதியளிக்க, விஜயே எதிர்பாராத அளவுக்கு அவரது வேட்பாளர்கள் வெற்றி பெற்று அசத்தினர்.
இதனைத் தொடர்ந்து கடந்த 1 ஆண்டுகளாகவே விஜய் அரசியலுக்கு வருவதற்கான அடியை எடுத்து வைத்து வருகிறார். அந்த வகையில் ஏழை மாணவர்களுக்கு பால்,ரொட்டி வழங்குவது, விஜய் பயிலகம், விஜய் விழியகம் என ஏகப்பட்ட திட்டங்களை முன்னெடுத்து வருகிறார். இப்படியான நிலையில் கடந்த ஜூன் மாதம் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வில் தொகுதி வாரியாக முதல் 3 மதிப்பெண்களை எடுத்த மாணவ, மாணவிகளை நேரில் அழைத்து ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
இது பொன் விளையுற பூமி இல்லை
அவரது அரசியல் வருகை பிற அரசியல் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் வரவேற்றும், எதிரான விமர்சனங்களை தெரிவித்தும் வருகின்றனர். இப்படியான நிலையில் தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நேர்காணல் ஒன்றில் பங்கேற்றார். அப்போது அவரிடம், “விஜய் அரசியல் கட்சி தொடங்கப்போகிறார் என்று செய்தி வருகிறதே?” என கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு துரை முருகன், ‘பாவமா இருக்கு. ஏன் சொல்கிறேன் என அப்புறமாக தெரியும். விஜய் நல்ல மனிதர். கஷ்டப்பட்டு இரவு, பகலா உழைக்கிறாரு. அவங்க அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரை எனக்கு தெரியும். என் பையனோட கிளாஸ்மேட் தான் விஜய். என்னமோ அவருக்கு அரசியலுக்கு வர வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது. அரசியல் களம் பொன் விளையுற பூமி என நினைத்து வருகிறார்கள். ஆனால் அதான் இல்லை. அரசியலில் 50 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த நிலை மாறி இப்போது மக்கள் அதிக விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள்.
எப்படி சொல்கிறேன் என்றால், 20 வருடத்துக்கு முன்னாடி கரண்ட் போயிடுச்சி என்றால், கரண்ட் போயிடுச்சின்னு பேசாம தூங்குவாங்க. ஆனால் இப்ப நிலைமை அப்படி இல்லை. அந்த துறை அமைச்சர்களின் போன் நம்பரை வைத்துள்ள அளவுக்கு உள்ளார்கள். எங்களை தூங்க விட மாட்டார்கள். இது ஆரோக்கியமான விஷயம் தான்” என தெரிவித்துள்ளார்.