பாலியல் புகாரா? உடனடியாக சொல்ல வாட்ஸ் அப் எண்.! கரூரில் உருவான 'நிமிர்ந்து நில் துணிந்து செல்!
தமிழ்நாட்டில் முதல் முறையாக கரூரில் பள்ளி மாணவிகளுக்காக "நிமிர்ந்து நில் துணிந்து செல்" என்ற அமைப்பை உருவாக்கி அதற்கான வாட்ஸ்அப் எண்ணை அறிமுகம் செய்தார் மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி.
கரூர் மாவட்டத்தில் தமிழகத்தில் முதல்முறையாக பள்ளி மாணவிகளுக்காக "நிமிர்ந்து நில் துணிந்து செல்" என்ற அமைப்பை உருவாக்கி அதற்கான அலைபேசி மற்றும் வாட்ஸ்அப் எண்களை அறிவித்துள்ளனர்.
பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு ஆசிரியர் மற்றும் குடும்ப உறுப்பினர்கள், மற்றவர்கள் யாராயினும் பாலியல் தொந்தரவு செய்தால் அந்த குற்றவாளிகளை யார் என்று சமுதாயத்திற்கு அடையாளம் காட்ட வேண்டுமென புதிய முயற்சியில் கரூர் மாவட்ட நிர்வாகம் தற்போது வாட்ஸ்அப் எண்களை அறிவித்துள்ளது. அந்த வாட்ஸ்அப் எண்ணுக்கு பாதிக்கப்பட்ட அல்லது தொந்தரவு செய்து வரும் நபர்களின் தகவல்களைத் தெரிவித்தால் அந்த குறிப்புகள் பாதுகாக்கப்பட்டு பாலியல் தொந்தரவில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு தகுந்த நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் முனைப்பு காட்டி வருவதாக தெரிவித்தனர்.
கரூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளிலும், பசுபதீஸ்வரர் பெண்கள் பள்ளியிலும் பயிலும் மாணவிகளுக்கு மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி அவர்கள் தலைமையில் பாலியல் தொந்தரவு செய்யும் நபர்களை அடையாளம் காட்டும் விதமாக மாணவிகளுக்கு சிறப்பு கருத்து கேட்பு கூட்டம், மாணவிகள் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் எனவும், குறிப்பாக பேட் டச், குட் டச் உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை ஆசிரியர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் வி செந்தில் பாலாஜி உள்ளிட்ட அனைவரும் பல்வேறு கருத்துக்களை வழங்கினார்.
இதைத் தொடர்ந்து பேசிய மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி தமிழ்நாடு அரசு சிறப்பான முறையில் மாணவர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கி வரும் நிலையில் பாலியல் சீண்டல் குற்றவாளிகளை நீங்கள் அடையாளம் காண இந்த தொடர்பு எண்ணை பயன் படுத்திக்கொண்டு தமிழகத்தில் இனி ஒரு பாலியல் தொந்தரவுக்கு மாணவிகள் தற்கொலை செய்து கூடாது என வேண்டுகோள் வைத்தார்.
விளையாட்டுத்துறையில் ஆர்வம் உள்ள மாணவிகளுக்கு வெளியூர் மற்றும் வெளிநாட்டு பயணத்திற்கு பெற்றோரிடம் பயணப்படி கேட்க வேண்டாம் எனவும், நீங்கள் பயிற்சி எடுக்க வெளியூர் மற்றும் விளையாட வெளியூர் சென்றால் பள்ளியின் தலைமையாசிரியரிடம் ஒப்புதல் கடிதம் பெற்று கரூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் கொடுத்தால் தாங்கள் பயணப்படி எனது நிதியிலிருந்து தருகிறேன் என மாணவிகள் மத்தியில் வாக்குறுதி அளித்தார்.
மாவட்ட ஆட்சித் தலைவர் பேசுகையில் கரூர் மாவட்டத்தில் உள்ள 201 பள்ளிகளில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு படித்து வரும் 26,167 மாணவர்களுக்கு இந்த அமைப்பு பாதுகாப்பு மற்றும் தன்னம்பிக்கை அளிக்கும் வகையில் குழுக்களாக பிரித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அப்பொழுது மாணவிகளுக்கு ஒரு படிவம் வழங்கி அவர்கள் இதுவரை பாலியல் தொந்தரவுக்கு உட்பட்டு இருந்தால் அவர்களை அடையாளம் காணும் விதமாக கடிதத்தில் பூர்த்தி செய்து கொடுத்தால் அவர்கள் பூர்த்திசெய்யும் கடிதம் பாதுகாக்கப்பட்டு குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை வழங்கப்படும் என மாணவிகள் மத்தியில் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபு சங்கர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியின் இறுதியாக மாணவிகளுக்கு "நிமிர்ந்து நில் துணிந்து செல்" என்ற அமைப்பின் வால்போஸ்டர் ஐ அளித்தனர். அதில் மூன்று அலைபேசிகள் எண்கள் உள்ளன பிரத்யேகமாக 890 333 1098 என்ற பிரத்தியேக வாட்ஸ்அப் எண்ணையும், கல்வி உதவி வழிகாட்டி மையம் 14417 என்ற தொடர்பு எண்ணையும், குழந்தைகள் உதவி எண் 1098 என்று எண்ணையும் வழங்கியுள்ளனர்.
தமிழ்நாட்டில் முதல்முறையாக தற்போது துவங்கப்பட்டுள்ள இந்த விழிப்புணர்வு அமைப்பிற்கு மாணவிகளும், பெற்றோர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.