Aavin Price: ஒரு கிலோ பன்னீர் விலை இவ்வளவா..? அதிரடியாக உயர்ந்த ஆவின் பால் பொருட்களின் விலை..!
ஆவின் பால் பொருட்களின் விலை ரூ. 20 முதல் ரூ.100 வரை உயர்த்தி ஆவின் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
ஆவின் பால் பொருட்களின் விலை ரூ. 20 முதல் ரூ.100 வரை உயர்த்தி ஆவின் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. ஒரு கிலோ பன்னீர் ரூ. 450 க்கு விற்கப்பட்ட நிலையில் தற்போது ரூ. 550 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
"ஆவின் பன்னீர், பாதாம் பவுடர் விலை உயர்வு"
தமிழக அரசின் பொதுத்துறை கூட்டுறவு பால் நிறுவனமான ஆவின் கடந்த 2022 ம் ஆண்டு மூன்று முறை பால் பொருட்களின் விற்பனை விலையை உயர்த்தியது. அதிலும் குறிப்பாக கடந்தாண்டு டிசம்பர் மாதம் 16ம் தேதி ஆவின் பாதம் பவுடர் மற்றும் பன்னீர் விற்பனை விலை ஒரு கிலோவுக்கு 100 ரூபாய் உயர்த்தப்பட்ட நிலையில் நடப்பாண்டில் அதன் விற்பனை விலை மீண்டும் ஒரு கிலோவுக்கு 100 ரூபாயாக உயர்த்தப்பட்டு அதன் விலை உயர்வு இன்று (25.07.2023) முதல் அமலுக்கு வந்துள்ளது. இது வாடிக்கையாளர்கள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2021 ம் ஆண்டு மே மாதம் திமுக ஆட்சி பொறுப்பேற்றது. இந்த பொறுப்பேற்ற இரண்டரை ஆண்டுகளில் பால் உற்பத்தியாளர்களுக்கான கொள்முதல் விலை லிட்டருக்கு வெறும் 3 ரூபாய் மட்டும் உயர்த்தப்பட்ட நிலையில், பால் பொருட்களின் விற்பனை விலை மட்டும் வரலாறு காணாத வகையில் தொடர்ந்து உயர்த்திக் கொண்டே செல்வது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வலியுறுத்தல்:
மக்கள் நலன் கருதி ஆவின் பாதாம் பவுடர் மற்றும் பன்னீர் விற்பனை விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெறுவதோடு, பால் கொள்முதல் விலையை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை ஆவின் நிர்வாகமும், தமிழக அரசும் மேற்கொள்ள வேண்டும் எனவும், பால் கொள்முதல் உயர்வுக்கேற்ற வகையில் பால் மற்றும் பால் பொருட்களின் விற்பனை விலையை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.