![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
TN Rain Alert: உஷார் மக்களே.. 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..!
தமிழ்நாட்டில் இன்று 4 மாவட்டங்களில் அதி கனமழை பெய்யக்கூடும் என்பதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் 21 மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
![TN Rain Alert: உஷார் மக்களே.. 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..! met department has announced red alert for 4 districts due to extreme rainfall in tamilnadu TN Rain Alert: உஷார் மக்களே.. 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/22/a1e2dcc92a4daae0d5f466d83d1187371716363977403589_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூர், நீலகிரி, தேனி, திருப்பூர் ஆகிய 4 மாவட்டங்களில் அதி கனமழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் 21 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுகப்பட்டுள்ளது.
அதேபோல் நாளை 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேனி, தென்காசி, தூத்துக்குடி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என்பதால் நாளை ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
வடதமிழக - தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று காலை 0530 மணி அளவில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது வடகிழக்கு திசையில் நகர்ந்து, 24- ஆம் தேதி காலை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக, மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவக்கூடும். அதன் பிறகு, இது மேலும் வலுப்பெற்று வடகிழக்கு திசையில் நகர்ந்து, வடகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் 25 - ஆம் தேதி மாலை நிலவக்கூடும்.
தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, தர்மபுரி, கரூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், நாமக்கல் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
அதேபோல் நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், இராமநாதபுரம், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
வரும் மே 24 ஆம் தேதி, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
அடுத்த ஐந்து தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:
22.05.2024 முதல் 26.05.2024 வரை:
அடுத்த 5 தினங்களுக்கு, அதிகபட்ச வெப்பநிலை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக 2-3° செல்சியஸ் படிப்படியாக உயரக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)