மருத்துவப்படிப்புகான 7.5 % இடஒதுக்கீட்டில் குளறுபடி ? - 18 அரசுப்பள்ளி மாணவர்களின் பெயர்கள் இடம்பெறாததாக புகார்
சேலம் மாவட்டத்தில் மட்டும் 18 மாணவர்களுக்கு தரவரிசைப் பட்டியலில் பெயர் விடுபட்டுள்ளது, இதுகுறித்து உயர் கல்வித் துறைக்கு தகவல் அளித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.
மருத்துவ படிப்புக்கான 7.5 சதவீத அரசு இட ஒதுக்கீட்டில் குளறுபடி நடந்துள்ளதாக சேலத்தைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவி ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். சேலம் மாவட்டத்தில் உள்ளது 18 மாணவர்களின் பெயர்கள் நீட் பட்டியலில் இடம் பெறவில்லை என புகார் எழுந்துள்ளது.
சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் அருகே உள்ள கரிக்கப்பட்டி பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி பழனிச்சாமியின் மகள் கஸ்தூரி, ஜலகண்டாபுரம் அரசு மகளிர் மேல் நிலைப் பள்ளியில் கடந்த 2020 ஆம் ஆண்டு பள்ளிப் படிப்பை முடித்து விட்டு 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் பங்கேற்று 252 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். இந்த நிலையில் நேற்று வெளியான தரவரிசை பட்டியலில் குளறுபடி நடந்துள்ளதாக கஸ்தூரி குற்றம் சாட்டி உள்ளார். அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டில் இடம் பெற எம்பிசி பிரிவில் 230 மதிப்பெண்கள் பெற்றாலே போதுமானது. ஆனால் கஸ்தூரி 252 மதிப்பெண்கள் பெற்றும் இவரது பெயர் அரசு இட ஒதுக்கீட்டில் இடம் பெறாமல் பொது பிரிவு பட்டியலில் இடம் பெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், 230 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் பெயர்கள் இட ஒதுக்கீடு பட்டியிலில் இடம்பெற்றுள்ள போது 252 மதிப்பெண்கள் பெற்ற தனது பெயர் இடம்பெறவில்லை என கூறி கஸ்தூரி தனது பெற்றேருடன் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். மருத்துவம் பயின்று ஏழை மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்கிற தனது கனவு நிறைவேற தமிழக அரசு அறிவித்த படி 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவம் படிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க கேட்டுக் கொண்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட மாணவி கஸ்தூரி கூறுகையில், சிறுவயதில் இருந்து மருத்துவராக வேண்டும் என இரவு பகல் பாராமல் படித்து வந்தேன். மருத்துவ படிப்பிற்கு தனியார் கல்லூரிகளில் பல லட்சம் செலவாகும். எனவே அரசு அறிவித்தபடி 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டில் எனது பெயர் சேர்த்து, அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் வழங்க வேண்டும். இல்லையென்றால் எனது மருத்துவ கனவு கலைந்துவிடும். எனவே நீட் புது பட்டியலில் இருந்து தனது பெயரை அரசு அறிவித்தபடி அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் பெயரை சேர்க்க வேண்டுமென கோரிக்கை வைத்தார். இதுகுறித்து சேலம் மாவட்ட முதன்மை உதவி கல்வி அலுவலரிடம் கேட்டபோது, சேலம் மாவட்டத்தில் மட்டும் 18 மாணவர்களுக்கு தரவரிசைப் பட்டியலில் பெயர் விடுபட்டுள்ளது, இதுகுறித்து உயர் கல்வித் துறைக்கு தகவல் அளித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.