”மருத்துவமனை உணவுப் பொட்டலங்களில், கடவுளின் படம் போடவேண்டும்” - பாஜக வலியுறுத்தல்
அரசு மருத்துவமனைகளில் எந்த இந்து ஆலயத்தின் பணத்தில், நோயாளிகளுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கப்படுகிறதோ, அந்த ஆலயத்தின் கடவுளின் படம், அந்த ஆலயத்தின் பெயர் இடம்பெற வேண்டும்
அரசு மருத்துவமனைகளில் எந்த இந்து ஆலயத்தின் பணத்தில், நோயாளிகளுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கப்படுகிறதோ, அந்த ஆலயத்தின் கடவுளின் படம், அந்த ஆலயத்தின் பெயர் இடம்பெற வேண்டும் என்று தமிழக பாஜக மாநில ஊடகப்பிரிவு தலைவர் ஏ.என்.எஸ் பிரசாத் கேட்டுக் கொண்டார். இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், "களப்பணிக்கு பெயர் பெற்ற தாங்கள் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரானது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. உங்களுக்கு இனிய நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
கொரோனாவால் மருத்துவமனைகள் நிரம்பி வழியும் இந்த இக்கட்டான நேரத்தில் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவரும் கொரோனா நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்களுக்காக இந்து ஆலயங்களின் சார்பில் உணவுப் பொட்டலங்கள் வழங்கிவருவது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக தங்களையும், முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களையும் பாராட்டுகிறேன்.
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகளில் இந்து ஆலயங்களின் சார்பில் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. உணவு பொட்டலங்கள் வழங்கப்படும் இடங்களில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள பேனர்களில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் படமும், அறநிலையத்துறை அமைச்சர் என்கிற முறையில் தங்களின் படம் இடம்பெற்றுள்ளது.
ஆனால் எந்த இந்து ஆலயத்தின் பணத்தில், இந்த உணவு பொட்டலங்கள் வழங்கப்படுகிறதோ, அந்த ஆலயத்தின் கடவுளின் படம், அந்த ஆலயத்தின் பெயர் இடம்பெறவில்லை. இது மிகவும் வேதனை அளிக்கிறது. இந்து சமய அறநிலையத்துறை என்பது அரசின் ஒரு துறையாக இருந்தாலும், மற்ற துறைகளைப் போல அதற்கு அரசு பணம் ஒதுக்கப் படுவதில்லை. இந்து ஆலயங்களில் இந்து பக்தர்கள் செலுத்தும் காணிக்கை, இந்து ஆலயங்களுக்கு சொந்தமான நிலங்கள் கட்டிடங்கள் உள்ளிட்ட சொத்துக்கள் மூலம் கிடைக்கும் வருமானம் மூலமே இந்து சமய அறநிலைத்துறை இயங்குகிறது அதன் ஊழியர்களுக்கும் இந்த பணத்திலிருந்துதான் ஊதியம் வழங்கப்படுகிறது. இந்து சமய அறநிலையத் துறையின் பணம் என்பது அரசின் பணம் அல்ல. பொதுமக்களின் பணமும் அல்ல . அது இந்து பக்தர்களின் பணம்.
ஆலயங்கள் என்பதே மக்களுக்காகத்தான். எனவே இந்த நெருக்கடியான நேரத்தில் இந்து ஆலயங்கள் மூலம் மக்களுக்கு எவ்வளவு உதவிகள் வேண்டுமானாலும் செய்யலாம். அப்படி செய்ய வேண்டும் என்று கடந்த 2020 மார்ச்சில் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே நாங்கள் வலியுறுத்தி வருகிறோம்.
ஆனால் இந்து ஆலயங்களின் பணத்திலிருந்து செய்யப்படும் உதவிகள் மக்களுக்கு நேரடியாக செய்யப்பட வேண்டும். அது கடவுளின் பெயரில் செய்யப்பட வேண்டும் என்பதே இந்துக்களின் கோரிக்கை. இதில் அரசியல் துளியும் கலக்கக் கூடாது. எனவே அரசு மருத்துவமனைகளில் உணவு பொட்டலங்கள் வழங்கப்படும் இடங்களில் கடவுளின் படங்கள் இடம்பெற வேண்டும். தாங்களும் ஒரு தீவிர பக்தர் என்ற முறையில் இந்து பக்தர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள் என்று நம்புகிறேன். அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கும் இந்த திட்டத்தை தமிழகம் முழுவதும் வாய்ப்புள்ள அனைத்து இடங்களிலும் விரிவுபடுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" என தெரிவித்தார்.
முன்னதாக, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கொரோனா நோய் பாதிப்பு குறையும் வரை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைகளில் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் பேருக்கு உணவு வழங்கும் திட்டத்தை சேகர்பாபு துவங்கி வைத்தார்.