Mekedatu Dam Project: மேகதாது அணை விவகாரம்: தமிழ்நாடு அனைத்துக் கட்சி குழு நாளை டெல்லி பயணம்!
நாளை மதியம் டெல்லி செல்லும் தமிழ்நாடு அனைத்துக் கட்சிகளின் குழு நாளை மறுநாள் பிரதமரை சந்திக்கிறது.
மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க அனைத்துக் கட்சி குழு நாளை டெல்லிக்கு பயணம் மேற்கொள்கிறது. நாளை மதியம் டெல்லி செல்லும் தமிழ்நாடு அனைத்துக் கட்சிகளின் குழு நாளை மறுநாள் பிரதமரை சந்திக்கிறது. மேகதாது அணை கட்ட மத்திய அரசு அனுமதி கொடுக்கக் கூடாது உள்பட மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த தீர்மானங்களை அனைத்து கட்சிகளின் குழு மத்திய அரசிடம் வழங்க உள்ளது.
தமிழ்நாட்டிற்கும், கர்நாடகாவிற்கும் இடையே நீண்ட காலமாக காவிரி நீர் பங்கீடு குறித்த பிரச்சினை உள்ளது. இந்த நிலையில், கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது எனும் இடத்தில் அணை கட்டுவதற்கு தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது. கர்நாடக அரசின் இந்த நடவடிக்கைக்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த சூழலில், கடந்த 12ஆம் தேதி மேகதாது அணை விவகாரம் குறித்து ஆலோசிப்பதற்காக சென்னை, தலைமை செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க., உள்ளிட்ட 13 சட்டமன்ற கட்சிகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர். இந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் மூன்று முக்கிய தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டன.
உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரியின் கீழ்படுகை மாநிலங்களின் முன் அனுமதியை பெறாமல் மேகதாதுவில் எந்தவொரு கட்டுமானப்பணியையும் மேற்கொள்ள கூடாது. அதை தற்பொழுது மேகதாதுவில் அணை கட்டுவதற்கான முயற்சிகளை கர்நாடக அரசு முழு முனைப்புடன் செய்து வருவது மிகவும் கண்டனத்திற்குரியது. இத்திட்டத்தினால் தமிழ்நாடு விவசாயிகளுக்கு தேவையான நீர் கிடைப்பது பாதிப்படையும். உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக இத்தகைய முயற்சி, இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் மாட்சிமைக்கு விடப்படும் சவாலாகும் எனவே கர்நாடக அரசின் இத்திட்டத்திற்கு, இதில் தொடர்புடைய ஒன்றிய அரசின் அமைச்சகங்கள் எந்தவிதமான அனுமதியையும் வழங்க கூடாது என ஒன்றிய அரசை கேட்டுக் கொள்வதாக முதல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.
இந்த அணை அமைப்பதற்கான முயற்சிகளை தடுப்பதில் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் மாநிலத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் தங்களுடைய முழு ஆதரவையும், முழு ஒத்துழைப்பையும் வழங்கும் என இரண்டாவது தீர்மானமும், தமிழ்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த எதிரொப்பை முழுமையாக பிரதிபலிக்கும் வகையில், இக்கூட்டத்தின் தீர்மானங்களை ஒன்றிய அரசிடம் அனைத்து கட்சியினரும் நேரில் சென்று முதற்கட்டமாக வழங்குவது, அதன்பிறகு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்கு உள்ளிட்ட சட்டபூர்வ நடவடிக்கைகள் மற்றும் தேவைப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. பிரதமரிடம் முறையிட்ட பின், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்ய அனைத்து கட்சிகள் சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.