மேகதாது விவகாரம் | காங்கிரஸ் நிர்வாகிகள் இடையே முற்றும் கருத்து மோதல்..!
ஒருவேளை, உங்கள் நிலைப்பாடு சரியாக இருந்தால் சீனா, வங்கதேசம், திபெத், நேபால் போன்றவைகளுடன் இந்தியா நதிநீர் பங்கீடு செய்துகொள்ள முடியாது
மேகதாது அணை தொடர்பான தமிழ்நாடு- கர்நாடகா காங்கிரஸ் நிர்வாகிகள் இடையே கருத்து மோதல்கள் எழுந்துள்ளன. கர்நாடகா மேகதாதுவில் அணை கட்ட வேண்டும் என்ற உந்துதல் முதல்வர் எடியூரப்பாவுக்கு இல்லை என கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவரின் கருத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகி பீட்டர் அல்போன்ஸ் காட்டமாக பதிலளித்துள்ளார்.
முன்னதாக கர்நாடகாக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.சிவகுமார், தனது ட்விட்டர் பதிவில்," ஒரு மாநிலம் தனது வடிகால் நிலப்பகுதிக்குள் தனது திட்டங்களை அமைத்துக்கொள்ள, இதர ஆற்றுப்படுகை மாநிலத்திடம் அனுமதி கேட்கத் தேவையில்லை என்பதை உச்சநீதிமன்ற அரசியலமைப்பு அமர்வு தெளிவாக கூறியுள்ளது. இந்நிலையில், மேகதாது அணைக்கு கர்நாடக முதல்வர் தமிழ்நாடு முதல்வரிடம் அனுமதி கோருவது மூர்க்கத்தனமாக உள்ளது. இது, தெளிவாக எடியூரப்பாவின் அரசியல் விருப்பமின்மையை பிரதிபலிக்கிறது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில், மேகதாது திட்டப் பணிகளுக்கான டெண்டர் தொடங்குவதற்கான ஆயத்தப் பணிகள் இறுதி செய்யப்பட்டன. தற்போதைய முதல்வர், அதை ஏன் தொடரக்கூடாது. அறியாமையில் இருப்பது வேறு, ஆனால், நோக்கமே இல்லை என்பது வேறு" என்று பதிவிட்டார்.
மார்கண்டேய நதியின் குறுக்கே கர்நாடக அரசு கட்டிய புதுஅணை - அமைச்சர் துரைமுருகன் அறிக்கை
சிவகுமாரின் இந்த கருத்துக்கு,தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மூத்த நிர்வாகியும், மாநில சிறுபான்மையினர் நல ஆணையத் தலைவருமான பீட்டர் அல்போன்ஸ் பதிலளித்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், " உங்களின் இந்த நிலைப்பாடு இயற்கை நீதிக்கும், இருதரப்பு மாநில உறவுகளுக்கு எதிரானது என்பதை பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். கீழ் ஆற்றுப்படுகை நிலப்பரப்புகள் (Lower Riparin States) சட்டரீதியாக பாதுகாக்கப்பட்டவை. ஒருவேளை, உங்கள் நிலைப்பாடு சரியாக இருந்தால் சீனா, வங்கதேசம், திபெத், நேபால் போன்றவைகளுடன் இந்தியா நதிநீர் பங்கீடு செய்து கொள்ள முடியாது" என்று தெரிவித்தர்.
With all respects to you shivakumarji your stand is against law ,natural justice ,inter state relationship. Lower riparian rights are well protected legally. If you are right India will loose all its water from China ,Tibet ,nepal, Bangladesh. @CMOTamilnadu @INCTamilNadu https://t.co/0WcjebsBLV
— S.Peter Alphonse (@PeterAlphonse7) July 5, 2021
முன்னதாக, கர்நாடகா முதல்வர் பி.எஸ் எடியூரப்பா முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு எழுதிய கடிதத்தில், " மேகதாது அணை கட்டப்படும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல், முழு ஒத்துழைப்பு தரவேண்டும். இரு மாநிலங்களுக்கு இடையே நல்ல உறவை மேம்படுத்தவே விரும்புகிறேன். முரண்பாட்டுக்கு உரிய தீர்வு கிடைக்கும் வகையில் இருமாநில அதிகாரிகளையும் உள்ளடக்கி பேச்சுவார்த்தையை தொடங்கலாம்" என்று தெரிவித்தார்.
இதற்குப் பதிலளித்த தமிழக முதல்வர்," திட்டம் செயல்படுத்தப்பட்டால் தமிழ்நாட்டுக்கு வரும் தண்ணீர் வரத்து பாதிக்கப்படும். அணைகட்டும் விவகாரத்தில் பல விதிகள் மீறப்பட்டுள்ளன. குடிநீர் தேவைக்காகத்தான் அணைதிட்டம் என்கிற காரணத்தை ஏற்கமுடியாது" என்று தெரிவித்தார். மேகதாது அணை விவகாரம் குறித்து பேச்சு நடத்த கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா விடுத்துள்ள அழைப்பை தமிழக அரசு நிராகரிக்க வேண்டும் என தமிகத்தை சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.