TN Mega Screening | வீட்டுக்கே வந்து பிபி, சுகர் டெஸ்ட்.. மாதம்தோறும் மாத்திரை.. தமிழ்நாடு அரசின் அடுத்த அதிரடி!
சத்தமில்லாமல் உயிர்பலி வாங்கும் இணை நோய்கள் மீது கவனம் செலுத்த தொடங்கியுள்ளது தமிழ்நாடு அரசு.
கொரோனா என்ற வார்த்தை ஒலிக்கத்தொடங்கி ஒரு வருடத்தை கடந்துவிட்டது. ஆனாலும் அதன் வீரியமும், அதன் தாக்கமும் நீர்த்துபோகவில்லை. இரண்டாம் அலை, அதிக வீரியம் என பொதுமக்களை பாடாய்ப்படுத்தியது கொரோனா. குறிப்பாக இந்தியாவில் கொரோனாவின் இரண்டாம் அலை கோரதாண்டவம் ஆடியது. வயது வித்தியாசமின்றி பாதிப்பும் உயிரிழப்பும் ஏற்படுத்தியது. தமிழ்நாட்டில் நாள் ஒன்றுக்கு 30ஆயிரத்துக்கும் அதிகமாக இருந்த கொரோனா பாதிப்பு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட பிறகு குறைந்து தற்போது கட்டுக்குள் வந்துள்ளது. கொரோனா என்பது தற்போது வந்த பெருந்தொற்று என்றாலும் வழக்கமான சில நோய்கள் சத்தமில்லாமல் பொதுமக்களின் ஆரோக்கியத்தை பெரிதும் பாதித்து வருகிறது.
கிராமம், நகரம் என்ற பாகுபாடு இல்லாமல் பொதுவான நோயாக மாறியுள்ள நோய்கள் என்றால் நீரிழிவும், ரத்தக் கொதிப்பும் தான். 35+ என்ற வயது என்றாலே நீரிழிவு என்ற பொதுவான எண்ணம் வரும் அளவிற்கு அந்த நோய் பரவிக் கிடக்கிறது. இந்த கொரோனா காலத்திலும் உயிர்ப்பலியை அதிகப்படுத்தியதில் நீரிழிவு, ரத்தக் கொதிப்பு போன்ற இணை நோய்களுக்கு அதிக பங்கு உண்டு. சத்தமில்லாமல் உயிர்பலி வாங்கும் இந்த இணை நோய்கள் மீது கவனம் செலுத்த தொடங்கியுள்ளது தமிழ்நாடு அரசு.
மக்களைத் தேடி மருத்துவம்:
தமிழ்நாட்டில் வருடத்துக்கு 5 லட்சம் பேர் இணை நோய்களால் இறக்கின்றனர். அதற்கான மூலகாரணமாக இருப்பது நீரிழிவு மற்றும் ரத்தக்கொதிப்பு. பலருக்கு தனக்கு நீரிழிவு இருக்கிறது என்பதே தெரியாமல் உள்ளன. அதற்கான சோதனை எடுக்காமல் வழக்கமாக இருப்பதே அதற்கு காரணமாகிறது. இதனைக் கட்டுக்குள் கொண்டவர தமிழக அரசு தற்பொது மக்களைத் தேடி மருத்துவம் என்ற திட்டத்தை கையில் எடுத்துள்ளது. தமிழகம் முழுவதும் மக்களின் இல்லங்களுக்கே செல்லும் சுகாதார ஊழியர்கள் ரத்த மாதிரியை எடுத்து நீரிழிவு சோதனை செய்வார்கள். அதேபோல் ரத்தக்கொதிப்பு சோதனையும் செய்யப்படும். இதன் சோதனை முடிவுகள் அறியப்பட்ட பின்னர் நோய்கள் உறுதிசெய்யப்பட்டவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கவும் மாத்திரைகள் வழங்கவும் சுகாதாரத்துறை ஏற்பாடு செய்துள்ளது. அவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுவார்கள். அடுத்த 10 நாட்கள் முழுவதும் இந்த மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் செயல்படுத்தபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்த இணை நோய்கள் தொடர்பாக 20 லட்சம் பேர் அரசு மருத்துவமனையை நாடும் நிலை உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்த நிலையில், தமிழ்நாட்டில் சுமார் 1 கோடி பேருக்கு இணை நோய்கள் இருக்குமென்றும், அவர்களுக்கு சிகிச்சை தேவை எனவும் சுகாதாரத்துறை கணித்துள்ளது.
சோதனை முடிவுகளுக்கு ஏற்ப மாதத்திற்கு ஒரு முறை மாத்திரைகள் வழங்கப்படும் என தெரிவித்துள்ள சுகாதாரத்துறை தொடர் சிகிச்சை, உடற்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடு மூலம் நிச்சயம் இந்த இணை நோய்கள் கட்டுக்குள் வரும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது. மேல் சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கு மருத்துவர்களின் கண்காணிப்பின் கீழும் சிகிச்சைகள் நடைபெறவுள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள சுகாதாரத்துறை, இன்னும் 6 மாதங்களில் இணை நோய்கள் தொடர்பான முழு விவரம் தயாராகி விடும். எத்தனை பேர் பாதிக்கப்பட்டவர்கள், எத்தனை இறப்புகள் ஏற்படுகின்றன போன்ற விவரங்கள் சேகரிக்கப்படும். இந்த விவரங்கள் மூலம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து இணை நோய்களால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கவே அரசு முயற்சி எடுக்கிறது எனக் குறிப்பிட்டது.