“உயிர் இருக்கும் வரை தமிழ்நாடு மக்களுக்காக, தமிழுக்காக போராடுவேன்” - ஆளுநருக்கு எதிரான பொதுக்கூட்டத்தில் வைகோ
திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் சார்பில் ஆளுநரை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் மூத்த நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் சார்பில் ஆளுநரை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் மூத்த நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
கிடப்பில் போடப்பட்டுள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கப்படாததாலும், ஸ்டெர்லைட் பிரச்சினைக் குறித்தும் மற்றும் சனாதன ஆதரவு பேச்சுக்கள் குறித்து எந்தவிதமான வருத்தமும் - விளக்கமும் அளிக்காத காரணத்தினாலும் , தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் சார்பில் சென்னை சைதாப்பேட்டை தேரடித் திடலில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது.
முதலில் இந்த நிகழ்வு ஆளுநர் மாளிகை முன்பு கண்டன ஆர்ப்பாட்டமாக நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்ததால் கண்டன பொதுக்கூட்டமாக மாற்றப்பட்டது.
கண்டன பொதுக்கூட்டம்
இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, ‘தமிழக சட்டபேரவையில் நிறைவேற்றப்படும் அனைத்து மசோதாக்களுக்கும் ஆளுநர் கையெழுத்து போட வேண்டும். ஆன்லைன் மசோதாக்கு கையெழுத்து போட்டால் நாங்கள் உங்களுடன் ஒத்துழைத்து செல்வோம் என்ற அர்த்தமில்லை. தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்ட 2 மணி நேரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆன்லைன் ரம்மி மசோதாவுக்கு கையெழுத்து போட்டார். எனவே ஆளுநர் முறையாக அனைத்து மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும்” என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், ‘சில ஐ.ஏ.எஸ் , ஐ.பி.எஸ் அதிகாரிகள் ஆர்.எஸ்.எஸ்க்கு ஆதரவாக செயல்படுகின்றனர். திமுக அரசு ஆளுநரை டிஸ்மிஸ் செய்ய வலியுறுத்திருக்க வேண்டும்’ என தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் மோடியின் தில்லாலங்கடி வேலை நடைபெறாது. ஆளுநர் ஆர்.என். ரவி 7 கோடி மக்கள் தேர்ந்தெடுத்த கட்சியினை அவமதித்துள்ளார். சூடு சொரனை இல்லாமல் நம்மை சீண்டுபவர்களை ஒதுக்கி வைக்க வேண்டும்’ என கூறினார்.
வைகோ பேச்சு
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசும்போது, ‘திராவிட இயக்கத்தை எந்த சக்தியாலும் அழிக்க முடியாது. ஆளுநர் ஆர்.என்.ரவி ஆர்.எஸ்.எஸ் வடிவம் கொண்டவர். அதனை ஆளுநர் பகிரங்கமாக சொல்கிறார்.அதனால் தான் அம்பேத்கர், பெரியார் அண்ணா, ஸ்டாலின் பெயரை உச்சரிக்க மாட்டேன் என்று ஆளுநர் தவிர்த்தார். மேலும் திராவிட மாடல் ஆட்சியை தவிர்த்து பேசினார். இது மாதிரி இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லை. இதனை போராடி வெல்ல வேண்டும்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நான் வாழ்க்கையை அர்ப்பணித்தவன். 14 உண்ணாவிரதம், 4 நடைபயணம், 3 மறியல் செய்துள்ளேன். உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் சென்று போராடினேன். என்னிடம் ஒருவர் நீங்கள் முதலமைச்சரானால் எப்படி இருக்கும் என்று கேட்டார். அப்புறம் தான் தெரிந்தது அவர் ஸ்டெர்லைட் நிறுவனத்தினர் என்று தெரிந்தது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் பற்றி கருத்து தெரிவித்த ஆளுநர் மன்னிப்பு கேட்க வேண்டும்’ என தெரிவித்தார். அப்போது, “என் உயிர் இருக்கும் வரை தமிழ்நாடு மக்களுக்காக தமிழுக்காக போராடுவேன்” என வைகோ கூறினார்.