மழையால் மீண்டும் மீண்டும் பாதிப்புக்குள்ளாகும் மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள்
மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடரும் கனமழை காரணமாக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் பணிகள் நிறுத்தியுள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் தாளடி மற்றும் சம்பா நெல் அறுவடை பணி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் மயிலாடுதுறை, குத்தாலம், தரங்கம்பாடி, சீர்காழி ஆகிய நான்கு தாலுகாக்களில் சுமார் 1.70 ஏக்கர் நிலப்பரப்பில் சம்பா மற்றும் தாளடி பயிர்கள் இந்தாண்டு பயிரிடப்பட்டிருந்தது. நிலத்தடி நீர் அது மட்டும் இன்றி மேட்டூர் அணையில் உரிய நேரத்தில் திறக்கப்பட்ட காவிரி நீர் என தண்ணீர் கை கொடுத்ததன் விளைவாக மாவட்டம் முழுவதும் அதிக அளவில் சம்பா தாளடி பயிர் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த நவம்பர் மாதம் 11-ஆம் தேதி வடகிழக்கு பருவ மழை தீவிர தாக்கத்தால் சீர்காழி மற்றும் தரங்கம்பாடி தாலுகாக்களில் 50 ஆயிரம் ஏக்கரில் நெல் பயிர் மழைநீரில் முழுவதும் மூழ்கி சேதம் ஆனது. அதற்கு அரசு இடுபொருள் நிவாரணமாக ஹெக்டேருக்கு 13,500 ரூபாயும், இன்சூரன்ஸ் தொகையும் 8,000 ரூபாயும் வழங்கியுள்ளது. மேலும், விவசாயம் பாதிக்கப்பட்ட பல்வேறு இடங்களில் மீண்டும் நேரடி நெல் விதைப்பு மற்றும் நாற்று நடவும் செய்யப்பட்டிருந்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக 1.40 ஏக்கரில் சம்பா மற்றும் தாளடி பயிர் செய்யப்பட்டு தற்பொழுது அறுவடைக்கு தயாராக உள்ளது. குத்தாலம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த பத்து தினங்களாக அறுவடை பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் தற்போது சம்பா அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், மழை காரணமாக தற்போது அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. அறுவடை செய்யப்படும் நெல்லை கொள்முதல் செய்வதற்காக மாவட்டம் முழுவதும் 150 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது. ஆனால் தற்போது வரை 90 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மட்டுமே துவங்கி கொள்முதல் செய்யப்பட்டுகிறது. இந்த சூழலில் கடந்த திங்கட்கிழமை முதல் மாவட்ட முழுமையும் பரவலாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு துவங்கி மயிலாடுதுறை மாவட்டத்தின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொண்டு வந்து வைக்கப்பட்டுள்ள அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகளை விவசாயிகள் பாதுகாப்பாக மூடி வைத்துள்ளனர். மேலும், மழை காரணமாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லை கொள்முதல் செய்யாமல் நிறுத்தி வைத்துள்ளனர்.
தற்போது 17 சதவீத ஈரப்பதம் உள்ள நெல்லை மட்டுமே கொள்முதல் செய்து வரும் நிலையில், பருவம் தவறி பெய்து வரும் மழை காரணமாக நெல்லின் ஈரப்பதத்தை 20 சதவீதமாக உயர்த்தி கொள்முதல் செய்ய வேண்டும் என்று இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக கடந்த 24 மணி நேரத்தில் மயிலாடுதுறை மாவட்டத்தில் சராசரியாக 17.77 மில்லிமீட்டர் மழையும், மயிலாடுதுறையில் 13 மில்லிமீட்டர், மணல்மேடு 13 மில்லிமீட்டர், சீர்காழி 19.60 மில்லிமீட்டர், தரங்கம்பாடி 17 மில்லிமீட்டர், செம்பனார்கோயில் 13.60 மில்லிமீட்டர் மழையும், அதிகப்பட்சமாக கொள்ளிடத்தில் 29.40 மில்லிமீட்டர் மழையும், குறைந்த பட்சமாக மயிலாடுதுறை மற்றும் மணல்மேடு பகுதி 13 மில்லிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.