வாரம் வாரம் நடைபெறும் குறைதீர் கூட்டம் - குறையாத மனுக்களின் எண்ணிக்கை.. கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு முதலிடம்..!
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு தொடர்பாக அதிக மனுக்கள் குவிந்துள்ளது.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் இன்று நடைபெற்ற வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருந்த பொதுமக்களிடமிருந்து மொத்தம் 327 கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், நேரில் பெற்றுக்கொண்டார்.
மக்கள் திரண்ட குறைதீர்க்கும் நாள் கூட்டம்
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரகத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை அன்று நடைபெறும் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்டத்தின் கடைக்கோடி கிராமங்களில் உள்ள சாமானிய மக்களின் குறைகளைத் தீர்க்கும் முக்கியத் தளமாக விளங்கி வருகிறது. அந்த வகையில் இன்று காலை மாவட்ட ஆட்சியர் தலைமையில் கூட்டம் தொடங்கியது. மாவட்டத்தின் பல்வேறு வட்டாரங்களில் இருந்தும் வந்திருந்த முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கள் குறைகளை மனுக்களாக சமர்ப்பித்தனர்.
பெறப்பட்ட மனுக்களின் விவரம்:
கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு முதலிடம்
இன்றைய கூட்டத்தில் பெறப்பட்ட 327 மனுக்களில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக மட்டும் 84 மனுக்கள் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதர மனுக்களின் வகைப்பாடுகள் பின்வருமாறு:
* இலவச வீட்டுமனைப் பட்டா மற்றும் பட்டா மாறுதல் - 35
* முதியோர், விதவை மற்றும் மாற்றுத்திறனாளி உதவித்தொகை - 36
* வேலைவாய்ப்பு வேண்டி விண்ணப்பம் - 12
* அடிப்படை வசதிகள் (குடிநீர், சாலை, மின்சாரம்) - 22
* நில அபகரிப்பு மற்றும் நிலப் பிரச்சினைகள் - 18
* ஆக்கிரமிப்பு அகற்றக் கோருதல் - 15
* தொழிற்கடன் மற்றும் வங்கிக் கடன்கள் - 23
* இலவச கான்கிரீட் வீடு கோருதல் - 14
* மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் - 12
* மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை & உபகரணங்கள் - 10
* குடும்ப அட்டை, சட்டம் ஒழுங்கு & இதர புகார்கள் - 46
அதிகாரிகளுக்கு ஆட்சியரின் அதிரடி உத்தரவு
மனுக்களைப் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், அந்தந்த மனுக்களைச் சம்பந்தப்பட்ட துறைச் சார்ந்த அலுவலர்களிடம் (வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித் துறை, காவல்துறை மற்றும் சமூக நலத்துறை) நேரடியாக ஒப்படைத்தார்.
அப்போது அவர் பேசுகையில், "பொதுமக்கள் மிகுந்த நம்பிக்கையுடன் ஆட்சியரகத்திற்கு வருகிறார்கள். எனவே, பெறப்பட்ட மனுக்கள் மீது எந்தவித காலதாமதமும் இன்றி சட்டத்திற்குட்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். குறிப்பாக, அடிப்படை வசதிகள் மற்றும் உதவித்தொகை கோரும் மனுக்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். எடுக்கப்பட்ட நடவடிக்கையின் விபரத்தை மனுதாரர்களுக்கு எழுத்துப்பூர்வமாகத் தெரியப்படுத்த வேண்டும்" என்று அதிகாரிகளுக்குக் கண்டிப்பான உத்தரவுகளைப் பிறப்பித்தார்.
கலந்துகொண்ட முக்கிய அதிகாரிகள்
இந்தக் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்டத்தின் முக்கிய உயர் அதிகாரிகள் பங்கேற்று, அந்தந்த துறை சார்ந்த மனுக்கள் குறித்து ஆலோசனைகளை வழங்கினர்.
* மாவட்ட வருவாய் அலுவலர் பூங்கொடி
* துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) கீதா
* மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சித்ரா
* மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் மலைமகள்
* மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) மாணிக்கண்ணன்
உள்ளிட்ட பல அரசுத் துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.
கூட்டத்தின் ஒரு பகுதியாக மாற்றுத்திறனாளிகள் ஆட்சியரகத்தின் கீழ் தளத்திலேயே மனுக்களை வழங்கும் வகையில் சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.
மனு அளித்த பொதுமக்கள் கூறுகையில், "எங்கள் கோரிக்கைகளை மாவட்ட ஆட்சித்தலைவரிடம் நேரடியாகத் தெரிவித்தது திருப்தி அளிக்கிறது. விரைவாக எங்கள் பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைக்கும் என நம்புகிறோம்" என்று தெரிவித்தனர்.






















