50 வயது ஆளுக்கு 23 வயசு பெண் கேக்குதா? .. அதுவும் 6வது கல்யாணமாம்.. அதிர்ந்த திருச்சி!
மணமகன் யாரென ஆசையில் பார்த்த அவருக்கு மிகப்பெரிய அதிர்ச்சி ஏற்பட்டது. அதாவது மணமகன் மாரியப்பனுக்கு 50 வயதுக்கும் மேல் இருந்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் ஏழைப் பெண்ணை ஏமாற்றி 50 வயதுள்ள நபருக்கு திருமணம் செய்து வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் பின்னால் ஒரு கும்பலே செயல்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
திருமணம் என்ற பெயரில் நடைபெறும் மோசடி சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே திருமணமான நபருடன் திருமணம், பணத்திற்காக மணமகளை விற்பது போன்ற கொடூரமான குற்றங்கள் அரங்கேறி வருகிறது. திருமணம் என்பது ஒவ்வொருவரின் வாழ்க்கையின் மிகப்பெரிய கனவாகும். அத்தகைய கனவை சிதைக்கும் நோக்கம் கொண்ட நபர்களும் இதே சமூகத்தில் வாழ்ந்து வருகின்றனர் என்பது தான் வேதனையான விஷயமாகும்.
ஏழைப்பெண்ணை ஏமாற்றி கல்யாணம்
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடை ரோடு பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண் தனது தந்தை மற்றும் தங்கையுடன் வசித்து வந்துள்ளார். இவரின் அம்மா சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். மிகவும் ஏழ்மை குடும்பத்தைச் சேர்ந்த அந்த பெண்ணுக்கு 23 வயதாகியும் திருமணம் ஆகவில்லை. ஆனால் இவரின் தங்கைக்கு முன்கூட்டியே திருமணமாகி குழந்தை இருக்கிறதால் அவர்களை பார்த்துக்கொள்ள சகோதரி வீட்டில் இந்த பெண் தங்கியிருந்துள்ளார்.
இப்படியான நிலையில் பொன்நகரம் பகுதியைச் சேர்ந்த முருகேஸ்வரி என்பவர் இந்த பெண்ணுக்கு பரீட்சையமாகியுள்ளார். அவரின் ஏழ்மையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முடிவெடுத்தார். தனக்கு தெரிந்த பணம் படைத்த ஒருவர் திருச்சியில் இருக்கிறார், உனக்கு விருப்பம் இருந்தால் திருமணம் செய்துக் கொள் என கூறியுள்ளார்.
இதனால் உன் குடும்பம் கஷ்டம் தீர்ந்து மகிழ்ச்சியுடன் வாழலாம் என ஆசை வார்த்தைக் காட்டியுள்ளார். தனக்கு திருமணம் ஆனால் போதும் என நினைத்த அந்த இளம்பெண்ணோ இதனை நம்பி சம்மதித்துள்ளார். இப்படியான நிலையில் உன்னுடைய கல்யாணம் பற்றி யாரிடமும் சொல்ல வேண்டாம். உன் அப்பா மற்றும் தங்கையிடம் எல்லாம் முடிந்த பிறகு சொல்லிக் கொள்ளலாம் என சொல்ல அப்பெண் அமைதி காத்திருக்கிறார்.
கடந்த டிசம்பர் 6ம் தேதி காலை 5.30 மணியளவில் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் இருந்து திருச்சிக்கு முருகேஸ்வரியும், அப்பெண்ணும் ரயிலில் சென்றிருக்கின்றனர். அங்கு ஒரு ஹோட்டலில் காலையில் சாப்பிட்டு விட்டு பின்னர் கரூர் மாவட்டம் பேட்டைவாய்த்தலை பகுதியில் உள்ள ஒரு லாட்ஜில் தங்கியுள்ளனர். அதே லாட்ஜில் மணமகன், அவரது நண்பர்கள் இருந்துள்ளனர். மறுநாள் காலையில் இவர்கள் திருமணம் நடைபெறுவதாக இருந்தது.
மணமகனுக்கு 6வது திருமணம்
இப்படியான நிலையில் திருமணத்திற்காக எடுக்கப்பட்ட புடவையை அணிந்துக் கொண்டு அந்த பெண் அங்கிருக்கும் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலுக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு மணமகன் யாரென ஆசையில் பார்த்த அவருக்கு மிகப்பெரிய அதிர்ச்சி ஏற்பட்டது. அதாவது மணமகன் மாரியப்பனுக்கு 50 வயதுக்கும் மேல் இருந்துள்ளது. அவர் அப்பெண் கழுத்தில் தாலி கட்டியுள்ளார். இதனால் தன்னை முருகேஸ்வரி ஏமாற்றி விட்டதாக நினைத்த அந்த பெண் கேள்வியெழுப்ப, திருமணம் முடிந்து விட்டதால் இனி எதுவும் பேசக்கூடாது என பதிலளித்துள்ளார்.
இந்த நிலையில் திருமணம் என்ற பெயரில் தன்னை முருகேஸ்வரி விலைபேசி விற்று விட்டது தெரிய வந்துள்ளது. இதற்காக மாரியப்பனிடம் பல லட்சம் பணமும் பெற்றுள்ளார். ஆனால் அந்த தொகையை பிரிப்பதில் முருகேஸ்வரி மற்றும் அவருடன் வந்தவர்கள் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த கேப்பில் அப்பெண் தனது தங்கைக்கு போன் செய்து விஷயத்தை கூறியுள்ளார். மாலையில் மணமகன் வீட்டுக்கு செல்லலாம் என சொல்லப்பட்ட நிலையில் அங்கிருந்து அப்பெண் தப்பி திண்டுக்கல் வந்தார்.
இதனால் கோபமடைந்த மாரியப்பன் தனது கூலியாட்களை ஏவி அப்பெண் வீட்டிற்கு சென்று மிரட்டியுள்ளார். இதனைத் தொடர்ந்து அந்த பெண் குடும்பத்தினர் நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையம் மற்றும் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அதில், தனது அறியாமை மற்றும் ஏழ்மையை பயன்படுத்தி திருச்சியில் வசிக்கும் மாரியப்பனுக்கு என்னை 6வது திருமணம் செய்து வைத்து விட்டனர். இதனைத் தொடர்ந்து இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்ட மாரியப்பன், முருகேஸ்வரி மற்றும் தரகர்கள் என பலரையும் கைது செய்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.





















