ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேர் விடுதலை.. - இலங்கை மன்னார் நீதிமன்றம்!
ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேரை நிபந்தனைகளுடன் விடுதலை செய்து இலங்கை மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேரை நிபந்தனைகளுடன் விடுதலை செய்து இலங்கை மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, விடுதலை செய்யப்பட்ட 15 பேரும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
முன்னதாக, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக சிறுவன் உட்பட 15 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கடந்த 5ம் தேதி கைது செய்தனர்.
தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி அடிக்கடி இலங்கை கடற்படையினர் பிடித்து செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். நடுக்கடலில் இலங்கை கடற்படையினர் செய்யும் அட்டூழியத்தால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். இதுபோன்று இலங்கை மீனவர்களாலும் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதும், படகுகள், மீன்பிடி உபகரணங்கள் பறித்துக்கொள்வதுமாக இந்த பிரச்சனை காலம் காலமாக தொடர்ந்தாலும் கூட இன்றளவும் முழுமையாக தீர்வு காணப்படவில்லை.
ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று சுமார் 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 1,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளனர். இந்த நிலையில், கடற்பகுதியில் இந்திய நாட்டிற்குரிய எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் தமிழகத்தை சேர்ந்த 14 மீனவர்கள் நடுக்கடலில் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்களது படகும் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட14 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் பருத்தித்துறை கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
15 மீனவர்கள் கைது செய்யப்பட்டதற்கு முன்னதாக ராமேஸ்வரத்திலிருந்து கடந்த நவம்பர் 14 ஆம் தேதி அந்தோணியார் அடிமை என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் மீதும் இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி விரட்டி அடித்துள்ளனர். அந்த விசைப்படகில் மீன் பிடிக்கச் சென்ற 8 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கடுமையாக தாக்கியுள்ளனர். இலங்கை கடற்படையினரின் தாக்குதலில் தங்கச்சிமடத்தை சேர்ந்த ஜான்சன் என்ற மீனவரின் கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டு உள்ளது. அவருக்கு தற்போது மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.