’வசூல்ராஜா எம்பிபிஎஸ்’ பட பாணி; சென்னை சுங்கத் துறை தேர்வில் முறைகேடு- 30 வட மாநிலத்தவர் கைது
வசூல்ராஜா பட பாணியில், புளூடூத், கேட்ஜெட்டுகளைப் பயன்படுத்தி சென்னை சுங்கத் துறை தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 30 வட மாநிலத்தவர்கள், தமிழக காவல் துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
’வசூல்ராஜா எம்பிபிஎஸ்’ பட பாணியில், புளூடூத், கேட்ஜெட்டுகளைப் பயன்படுத்தி சென்னை சுங்கத் துறை தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 30 வட மாநிலத்தவர்கள், தமிழக காவல் துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை சுங்கத் துறை அலுவலகத்தில் கேன்ட்டீன் உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணிகளுக்கான 17 காலியிடங்களுக்காக தேர்வு அறிவிக்கப்பட்டு, இந்தியா முழுவதிலும் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன. எழுத்துத் தேர்வு இன்று (அக். 14) சென்னையில் உள்ள சுங்கத் துறை அலுவலகத்தில் நடைபெற்றது.
வட மாநிலத் தேர்வர்களும் பங்கேற்பு
இன்று காலை நடைபெற்ற தேர்வில் தமிழக தேர்வர்கள் மட்டுமின்றி, வட மாநிலத் தேர்வர்களும் பங்குபெற்று தேர்வை எழுதினர். 1600 பேர் இந்தத் தேர்வை எழுதிய நிலையில், தேர்வில் சிலர் முறைகேட்டில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்தது. தேர்வு எழுதியவர்களில் சிலர் புளூடூத், கேட்ஜெட்டுகளைப் பயன்படுத்தி, முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இது கடுமையான சர்ச்சைகளை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், ஹரியானா மற்றும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த வட மாநிலத்தவர்கள் பலரிடம் காவல்துறை மற்றும் சுங்கத் துறையினர் விசாரணை நடத்தினர். சோதனை செய்ததில் சிலர் கால் மற்றும் இடுப்புப் பகுதி உள்ளிட்ட உடலின் பல்வேறு பகுதிகளில்ல் சில கருவிகளை மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. குறிப்பாக ப்ளூடூத், கேட்ஜெட்டுகளை அவர்கள் பயன்படுத்தியது தெரிய வந்தது. விசாரணையின் முடிவில் 30 வட மாநிலத்தவரை சென்னை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து புளூடூத், சிம் கார்டுகள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.
குற்றவாளிகளுக்கு உதவிய நபர் குறித்து விசாரணை
ஒரு மணி நேரத் தேர்வின் ஆரம்பத்தில் 15 நிமிடங்களுக்கு உள்ளாகவே அவர்கள் அனைவரும் பிடிபட்டனர். வெளியில் இருந்து குற்றவாளிகளுக்கு உதவிய நபர் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.
நடிகர் கமல்ஹாசன் ’வசூல்ராஜா எம்பிபிஎஸ்’ என்னும் படத்தில், ப்ளூடூத்தைப் பயன்படுத்தி மருத்துவ நுழைவுத் தேர்வை எழுதுவார். அத்தகைய பாணியில் வட மாநிலத்தவர் தேர்வு எழுதி, உடனே பிடிபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.