Solar Bike: அரசு இலவச சைக்கிளை இ பைக்காக மாற்றிய கல்லூரி மாணவர்.. குவியும் பாராட்டு!
அரசாங்கம் பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் இலவச சைக்கிளை மதுரை அமெரிக்கன் கல்லூரியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் இ பைக்காக மாற்றியுள்ளார்.
அரசாங்கம் பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் இலவச சைக்கிளை மதுரை அமெரிக்கன் கல்லூரியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் இ பைக்காக மாற்றியுள்ளார். இந்த பைக்கை ஒருமுறை சார்ஜ் செய்து 40 கி.மீ வரை பயணிக்கலாம் எனக் கூறுகிறார் மாணவர் தனுஷ் குமார்.
மதுரை அமெரிக்கன் கல்லூரியைச் சேர்ந்த மாணவர் தனுஷ் குமார். இவர் அங்கு முதுநிலை இயற்பியல் முதலாம் ஆண்டு பயின்று வருகிறார். இவருக்கு இதுபோன்ற கண்டுபிடிப்புகள் ஒன்றும் புதிதல்ல. இதற்கு முன்னதாகவும் இவர் சோலார் பைக் கண்டுபிடித்துள்ளார். ஆனால் இப்போது கண்டுபிடித்துள்ள இபைக் தனது முந்தைய கண்டுபிடிப்பை விட சிறப்பானது என்று அவரே கூறுகிறார்.
அவர் அளித்தப் பேட்டியிலிருந்து..
உலகம் முழுவதுமே மரபு சாரா எரிசக்திக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. மக்களுக்கும் நாளுக்கு நாள் சூழல் நட்போடு செயல்படுவது குறித்த விழிப்புணர்வும் ஏற்பட்டுள்ளது. அதனை மனதில் கொண்டு தான் நான் இதற்கு முன்னதாக சோலார் பவர்ட் பைக் கண்டுபிடித்தேன். இப்போது இ பைக் வடிவமைத்துள்ளேன். இது எனது சோலார் பைக்கைவிட மூன்று மடங்கு அதிகமான திறன் வாய்ந்தது. இதில் பெடல் செய்யும் முறையும் உள்ளது. ஆகையால் நீங்கள் பெடல் செய்யும் போது வாகனம் தானாகவே ரீச்சார்ஜ் ஆகும். இதற்காக கார்களில் பயன்படுத்தப்படும் ஆல்டர்னேட்டர்களைப் பயன்படுத்தியுள்ளேன்.
இதை பெடலிங் செயினுடன் சேர்த்துள்ளேன். அதனால் எப்போதுமே சார்ஜ் ஆகும் என்பதால் நம் பயணம் தடைபடுமே என்ற பிரச்சினையே இருக்காது. மேலும், ஒரு முறை சார்ஜ் செய்துவிட்டால் இந்த வாகனத்தை வைத்து 40 கிலோ மீட்டர் வரை தடைபடாமல் பயணத்தை மேற்கொள்ளலாம். இந்த இ பைக் மணிக்கு 100 கிமீ வேகத்தில் செல்லக் கூடியது. 40 கி.மீ பயணத்திற்குப் பின்னர் சார்ஜ் குறைந்துவிட்டால் வாகனம் தானாகவே பெடலிங் மோடுக்கு மாறிவிடும். சோலார் பைக்கில் சோலார் பேனரை பொருத்த நிறைய இடம் தேவைப்பட்டது. ஆனால் இதில் அப்படி ஏதும் இடம் அடைக்கும் பிரச்சனையே இல்லை. இந்த இ பைக் சுற்றுச்சூழலுக்கு மட்டுமல்ல உடலுக்கும் ரொம்பவே நல்லது.
எனது தங்கைக்கு பள்ளியில் கொடுக்கப்பட்ட இலவச சைக்கிளைக் கொண்டுதான் இதை நான் செய்துள்ளேன்.
இவ்வாறு தனுஷ் குமார் கூறினார்.
மாணவர் தனுஷ் குமார் தற்போது கோயம்புத்தூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றுடன் இணைந்து இந்த இ பைக்கை வணிக ரீதியாக பயன்பாட்டுக்குக் கொண்டுவருவது குறித்து முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.
இவரது முயற்சி குறித்து தமிழக கிராமப்புற தொழில்துறை அமைச்சர் தாமோ அன்பரசன் மாணவரின் திறமையைப் பாராட்டியுள்ளார். மாணவரை மட்டுமல்ல மதுரை அமெரிக்க கல்லூரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபரையும் இதற்காக அவர் பாராட்டியுள்ளார்.