மாற்றுத்திறனாளிகளுக்கு சலுகை மனுவை நிராகரித்த மத்திய அரசின் உத்தரவு ரத்து
’’மாற்றுத்திறனாளிகள் ஆணையர் நீதிமன்றம் அரசுக்கு பரிந்துரை மட்டுமே செய்துள்ளது, உத்தரவு பிறப்பிக்கவில்லை என்று எனது விண்ணப்பத்தை மத்திய அரசு நிராகரித்ததுள்ளதாக மனுவில் புகார்’’
நாகர்கோவில் குருசடியைச் சேர்ந்த கே.பரந்தாமன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், "நான் 100% மாற்றுத்திறனாளி அரசு உயர் நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறேன். மாற்றுத்திறனாளிகள் கார் வாங்க ஜிஎஸ்டி, சாலை வரி, டோல் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் ஆணைய நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
இந்த உத்தரவின் அடிப்படையில் எனக்கு கார் வாங்க ஜிஎஸ்டி, சாலை வரி, டோல் கட்டண விலக்கு கேட்டு மத்திய அரசுக்கு விண்ணப்பித்தேன். ஆனால், எலும்பியல் தொடர்பான மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டுமே சலுகை வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகள் ஆணையர் நீதிமன்றம் அரசுக்கு பரிந்துரை மட்டுமே செய்துள்ளது, உத்தரவு பிறப்பிக்கவில்லை என்று எனது விண்ணப்பத்தை மத்திய அரசு நிராகரித்தது. இந்த உத்தரவை ரத்து செய்து எனக்கு கார் வாங்க ஜிஎஸ்டி, சாலை வரி, டோல் கட்டண சலுகை அளிக்க உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி எம்.சுந்தர் முன்பு விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு சார்பில், மாற்றுத்திறனாளிகள் வாகனம் வாங்க சலுகை அளிக்கும் பரிந்துரைகள் தற்போது ஏற்கப்பட்டு அமலுக்கு வந்துள்ளது. 21 வகையான மாற்றுத்திறனாளிகளுக்கு சலுகை வழங்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி, மனுதாரரின் விண்ணப்பத்தை நிராகரித்து பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனுதாரர் விண்ணப்பத்தை பரிசீலித்து 31.1.2022-க்குள் உரிய அனுமதி வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டார்.