Madurai Govt Hospital:தண்ணீர் என நினைத்து ஸ்பிரிட் கொடுத்த தாய்... பரிதாபமாக உயிரிழந்த சிறுமி!
மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த சிறுமிக்கு தண்ணீர் என நினைத்து ஸ்பிரிட் குடிக்க கொடுத்த நிலையில் சிறுமி உயிரிழந்து விட்டார்.
மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த சிறுமிக்கு தண்ணீர் என நினைத்து ஸ்பிரிட் கொடுத்த நிலையில் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
சிகிச்சை அறையில் ஸ்பிரிட்டை அலட்சியமாக செவிலியர்கள் வைத்ததால் தண்ணீர் என நினைத்து கொடுத்து விட்டேன் என தெரிவித்துள்ள சிறுமியின் தாயார், உரிய சிகிச்சை அளிக்காததால் மட்டுமே தனது மகள் உயிரிழந்ததாக குற்றம்சாட்டியுள்ளார்.
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் தாலுகாவிற்கு உட்பட்ட கோ. கண்டியன்கொல்லை கிராமத்தை சேர்ந்த தீபா (32. ஆனந்தகுமார் (43) தம்பதியினருக்கு ஆதனா, அகல்யா ஆகிய 2 பெண் குழந்தைகளும், ஆதிஷ் என்ற 2 வயது ஆண் குழந்தையும் உள்ளனர்.
இந்நிலையில் இத்தம்பதியினரின் 2 -வது மகளாகிய 8 வயதுடைய அகல்யாவிற்கு கடந்த ஆண்டு கிட்னி பிரச்சனை ஏற்பட்ட நிலையில் பாண்டிச்சேரி ஜிப்மர், மற்றும் சென்னை அரசு மருத்துவமனை, தஞ்சாவூர் மருத்துவமனை ஆகிய மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர். கடந்த 30-ஆம் தேதியன்று மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிறுமி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் கடந்த 15 நாட்களாக டயாலிசிஸ் செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதுபோன்று டயாலசிஸ் அளித்த பின்னர் மாலை 5 மணியளவில் அகல்யாவிற்கு திடிரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அப்போது தண்ணீர் தாகம் என கூறியதால் சிறுமியின் தாயார் தீபா, படுக்கையின் அருகில் இருந்த பாட்டிலில் உள்ள தண்ணீரை கொடுத்துள்ளார். உடனடியாக சிறுமி துப்பிய நிலையில் அருகில் இருந்த செவிலியர் அது தண்ணீர் அல்ல ; நோயாளிகளுக்கு பயன்படுத்தும் ஸ்பிரிட் என தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து மருத்துவக் குழுவினர் அவசர வார்டிற்கு சிறுமி அகல்யாவை மாற்றம் செய்து சிகிச்சை அளித்த சிறிது நேரத்திலயே சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.இது குறித்து தல்லாகுளம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இது குறித்து சிறுமியின் தாயார் பேட்டியில் தெரிவித்ததாவது:
”டயாலிசிஸ் அறையில் அலட்சியமாக ஸ்பிரிட் பாட்டிலை சிகிச்சை அளிக்கும் அறையில் வைக்கப்பட்டிருந்தது. அதன் காரணமாக அவசரத்தில் தண்ணீர் என நினைத்து கொடுத்தேன். ஆனால் எனது மகள் அதை முழுமையாக குடிக்கவில்லை. இருந்தபோதிலும் உரிய சிகிச்சை அளிக்காத நிலையில் எனது மகள் இறந்து விட்டாள். ஆனால் தற்போது மருத்துவர்கள் ஸ்பிரிட் குடித்ததன் காரணமாகத்தான் இருந்ததாக தெரிவிக்கின்றனர்” இவ்வாறு அவர் பேட்டியில் தெரிவித்தார்.
மேலும் படிக்க
Adipurush Review: பிரபாஸின் அவதாரம் ஆதிபுருஷ்! ரசிகர்களுக்கு சந்தோஷமா? சங்கடமா? இதோ விமர்சனம்!