"என்னையே மதமாற்றம் செய்ய முயற்சிகள் நடந்தது"... மதுரை ஆதீனம் பகீர் குற்றச்சாட்டு!
என்னையே மதமாற்றம் செய்ய முயற்சிகள் நடந்ததாக மதுரை ஆதினமாக புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஹரிஹர தேசிகர் பரமாச்சாரிய சுவாமிகள் பகீர் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே தனியார் மேல்நிலைப் பள்ளியில் ப்ளஸ் 2 படித்த மாணவி பள்ளி அருகே உள்ள விடுதியில் உள்ள அறைகளை சுத்தம் செய்ய வார்டன் வற்புறுத்தியதாகவும், இதனால் மன உழைச்சல் ஏற்பட்டு பூச்சி மருந்து குடித்து தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த மாதம் 19 ம் தேதி மாலை உயிரிழந்தார். இது தொடர்பாக மாணவி சிகிச்சையின்போது அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீஸார் விசாரித்து வார்டன் சகாயமேரியை (62) கைது செய்தனர்.
இதற்கிடையில் மருத்துவமனையில் சிகிச்சையின் போது, அவரிடம் எடுக்கப்பட்ட வீடியோ மதமாற்றம் செய்வது தொடர்பான சர்ச்சை தகவல்கள் வெளியானதால், இதில் தலையிட்டு பாஜகவினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில், என்னையே மதமாற்றம் செய்ய முயற்சிகள் நடந்ததாக மதுரை ஆதினமாக புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஹரிஹர தேசிகர் பரமாச்சாரிய சுவாமிகள் பகீர் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து, மதுரை ஆதினம் தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், "மதுரை ஆதீனமாக பொறுப்பேற்று முதல் மடத்தை மேம்படுத்துவதற்வாக பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறேன்.
மடம் மற்றும் கோவில் பூஜை ஆகியவற்றில் தமிழ்நாடு அறநிலையத்துறையின் தலையீடு அதிகமாக உள்ளது. இவற்றையெல்லாம் விரைவில் கலைக்கப்பட வேண்டும் என்பதில் மாற்று கருத்தே இல்லை. இந்து கோயில்கள் மற்றும் மடங்களுக்கு மட்டும் அறநிலையத்துறையின் மூலம் கடிவாளம் போடப்பட்டு இருக்கிறது. ஆனால், பிற மதங்களுக்கு இப்படியான கட்டுப்பாடு கிடையாது.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்தபிறகு, அறநிலையத்துறை சார்பில் பிரார்த்தனை எல்லாம் சரியாக நடக்கிறது. திமுகவினர் சிலர் தெய்வங்களை வழிபடுவதையும் நம்மால் பார்க்க முடிகிறது. இப்பொழுது யாராவது இந்து என்று சொன்னாலே இந்துவா என்றே பொருள் ஆகிவிட்டது. மடங்கள் தமிழ்நாட்டில் சுயமாக இயங்க அனுமதிக்கப்பட வேண்டும்.
அமெரிக்காவில் எப்படி போப் சொல்வது தெய்வ வாக்குகளாக கருதப்படுகிறது. ஆனால் நமது நாட்டில் அப்படி எதுவும் இல்லை. தஞ்சை மாணவியின் செய்தி கேட்டு துடித்து போனேன். அதேபோல், கன்னியாகுமரியில் உள்ள ஒரு கிறிஸ்தவ பள்ளியில் பயின்ற மாணவி விபூதியிட்டு சென்றதற்காக தலைமையாசிரியர் ஒருவரால் தாக்கப்பட்டார். அதை அறிந்து நான் நேரடியாக சென்று போராட்டம் நடத்தி அவர்கள் மன்னிப்பும் கேட்டார்கள்.
ஒருவரின் மதமாற்றம் என்பது கொள்கை பிடித்து மாறவேண்டுமே தவிர, பணம், சலுகைக்காக மாறக் கூடாது. அதிகளவில் பள்ளிக்கூடங்களில் மதமாற்றம் நடக்கிறது. ஒரு கட்டத்தில் என்னையே மதமாற்றம் செய்ய முயற்சி செய்தார்கள். பகவதி இலட்சுமணன் என்ற எனது பெயரையே மாற்ற முயற்சிசெய்து, அதிலிருந்து தப்பித்து வந்து விட்டேன். உடனடியாக தமிழ்நாடு அரசு தலையிட்டு கட்டாய மதமாற்றத்தை தடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்