Praggnanandhaa: உலகக்கோப்பை செஸ் தொடரில் இரண்டாம் இடம்: பிரக்ஞானந்தாவுக்கு குடியரசுத் தலைவர், முதலமைச்சர் பாராட்டு
செஸ் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் நார்வே நாட்டைச் சேர்ந்த வீரர் கார்ல்சன் இந்தியாவைச் சேர்ந்த பிரக்ஞானந்தாவை வீழ்த்தி உலகக்கோப்பையை வென்றுள்ளார்.
செஸ் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் நார்வே நாட்டைச் சேர்ந்த வீரர் கார்ல்சன் இந்தியாவைச் சேர்ந்த பிரக்ஞானந்தாவை வீழ்த்தி உலகக்கோப்பையை வென்றுள்ளார்.
செஸ் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி கிளாசிக்கல் சுற்றில் பிரக்ஞானந்தா மற்றும் கார்ல்சன் மோதிய இரண்டு ஆட்டங்களும் டிராவில் முடிந்தது. இந்தநிலையில், உலக போப்பை செஸ் போட்டியில் யார் சாம்பியன் என்பதை தீர்மானிக்கும் வகையில் இன்று குறுகிய சுற்று போட்டியை கொண்ட டை-பிரேக்கர் நடைபெற்றது.
போட்டி தொடங்கியது முதல் இருவரும் சிறப்பாக ஆடிவந்தனர். மிகவும் விறுவிறுப்பாக சென்ற இந்த சுற்றில் நார்வே வீரர் கார்ல்ஸன் வெற்றி பெற்று முன்னிலை வகித்தார். மூன்று சுற்றுகள் வரை திட்டமிடப்பட்டுள்ள இந்த டை-பிரேக்கர் போட்டியில் முதல் சுற்றில் கார்ல்சன் முன்னிலை வகித்தார். இதனால் இரண்டாவது சுற்றில் பிரக்ஞானந்தா வெல்ல வேண்டும் அல்லது டிரா செய்ய வேண்டும். மாறாக பிரக்ஞானந்தா தோல்வியைத் தழுவினால் நார்வே வீரர் கார்ல்சன் உலகச் சாம்பியனாவார் என்ற நெருக்கடியில் பிரக்ஞானந்தா களமிறங்கினார்.
இரண்டாவது சுற்றில் பிரக்ஞானந்தா முதல் சுற்றைப் போலவே நேரத்தை வீணடித்துக்கொண்டு போக, இதனை தனக்கு சாதகமாக கார்ல்சன் பயன்படுத்திக்கொண்டார். இதனால் இரண்டாவது சுற்றிலும் கார்ல்சன் வெற்றி பெற்றார். இதனால் 2023ஆம் ஆண்டு நடைபெற்ற செஸ் உலகக்கோப்பை தொடரின் சாம்பியனாக நார்வேவைச் சேர்ந்த கார்ல்சன் மகுடம் சூடியுள்ளார். இவர் ஏற்கனவே சர்வதேச செஸ் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் இடம் பிடித்த பிரக்ஞானந்தாவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், ”பதினெட்டு வயது கிராண்ட்மாஸ்டர் ரமேஷ்பாபு பிரக்ஞானந்தா இறுதிப் போட்டிக்கு வந்து FIDE இன் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்ததன் மூலம் ஒவ்வொரு இந்தியனின் இதயத்தையும் வென்றுள்ளார். விளையாட்டின் எல்லா நேரங்களிலும் சிறந்த வீரர்களில் ஒருவரை எதிர்கொள்ளும் போது அவர் மிக உயர்ந்த அளவிலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த அற்புதமான பயணத்திற்காக அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார். அவரது தாயார் நாகலட்சுமி, வேலம்மாள் பள்ளி மற்றும் அவரது அனைத்து வழிகாட்டிகள் மற்றும் பயிற்சியாளர்கள் சவால்கள் மற்றும் கஷ்டங்களுக்கு மத்தியில் அவரது பயணத்திற்கு பங்களித்ததற்காக அனைவரையும் பாராட்டுகிறேன். வருங்காலத்தில் பிரக்ஞானந்தா இன்னும் மேன்மை பெற வாழ்த்துகிறேன்” என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சென்னையைச் சேர்ந்த பிரக்ஞானந்தாவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் வாழ்த்துகளை ஊக்கம் அளிக்கும் வகையிலும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், ”சென்னையின் பெருமைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள், 2023ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பை செஸ் தொடரில் உங்கள் சிறந்த செயல்திறன் பாராட்டக்குரியது. உலக செஸ் புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ள நகமுரா மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ள கருவானாவை தோற்கடித்து, இறுதிப் போட்டிக்கான உங்கள் பயணம் எங்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இறுதி முடிவு எதிர்மறையாக இருந்தபோதிலும், உங்கள் சாதனை 140 கோடி கனவுகளுடன் எதிரொலிக்கிறது. நாடு முழுவதும் உங்களை நினைத்து பெருமை கொள்கிறது, பிரக்ஞானந்தா உங்கள் வெள்ளிப் பதக்கம் மற்றும் கேண்டிடேட்ஸ் போட்டிக்கான நுழைவு ஆகியவை வரவிருக்கும் தலைமுறையினரை ஊக்குவிக்கும் மைல்கற்கள்” என குறிப்பிட்டுள்ளார்.