TN Weather Alert: அடுத்தடுத்து உருவாகிறது புயல் சின்னம்.! நவம்பரில் தமிழகத்திற்கு ஸ்கெட்ச்- வெதர்மேன் அலர்ட்
நவம்பர் 20ம் தேதிக்கு பின்பு அடுத்தடுத்த காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாகி தமிழக கடற்கரை நோக்கி நகர வாய்ப்பு உள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை
வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் ஆரம்பமே அசத்தலாக தொடங்கியுள்ளது. அந்த வகையில் அக்டோபர் 16 ஆம் தேதியன்று வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தொடங்கியது. இதன் காரணமாக காற்றழுத்தமும், வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும் காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்தது. குறிப்பாக தமிழகத்தை நோக்கி வந்த மோன்தா புயல் ஆந்திராவில் விசாகப்பட்டினம் அருகே கரையை கடந்தது.இருந்த போதும் தமிழகத்தில் பரவலாக நல்ல மழை பெய்தது. இதனையடுத்து தமிழகத்திற்கு சில நாட்களுக்கு ஓய்வு கொடுத்திருந்த மழை மீண்டும் தற்போது தொடங்கியுள்ளது.
தென் மாவட்டங்களில் மழை
அந்த வகையில், இன்று (9-11-2025) தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் மாவட்டங்களாக திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களின் மலைப்பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
நாளை (10-11-2025) தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டாவெதர்மேன் ஹேமச்சந்தர் வெளியிட்டுள்ள வானிலை தகவலில், தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இன்று இடி,மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும். திருநெல்வேலி, கன்னியாகுமரி மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளார்.
காவிரி டெல்டா மற்றும் வடமாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும். ஒரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை வாய்ப்பு இருப்பதாகவும், வடமாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்ட விவசாயிகள் இன்று முதல் மூன்று நாட்களுக்கு (நவம் 10 வரை) அனைத்து விதமான வேளாண்மை பணிகளையும் மேற்கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
பருவமழை எப்போது?
- முழுமையான வடகிழக்கு காற்று நவம் 12ம் தேதி தான் ஊடுருவுகிறது. தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் நவம் 11,12 தேதிகளில் பரவலாக மழை எதிர்ப்பார்க்கலாம்.
- நவம்பர் 15 முதல் 20 ம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் தாழ்வு நிலையுடன் இணைந்த கிழைக்காற்றினால் கடலோர மாவட்டங்கள், காவிரி டெல்டா மாவட்டங்கள் மற்றும் தெற்கு மற்றும் உள் மாவட்டங்கள் என பரவலாக வடகிழக்கு பருவமழை தீவிரமடையும்.
- நவம்பர் 20ம் தேதிக்கு பிறகு அடுத்தடுத்த காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாகி தமிழக கடற்கரை நோக்கி நகர வாய்ப்பு உள்ளது.
- நவம்பரில் நல்ல மழை காத்திருக்கிறது, நம்பிக்கையும் மற்றும் பொறுமை தான் அவசியம்.
- தற்போது கிடைக்கும் இடைவெளியை பயன்படுத்தி வேளாண் பணிகளை முடித்துக்கொள்ளுங்கள் என டெல்டா வெதர்மேன் தெரிவித்துள்ளார்.





















