(Source: ECI/ABP News/ABP Majha)
பொங்கல் பரிசு புகார் செய்தவர் தீக்குளித்து தற்கொலை: ‛குறை... தீர்வுக்கா? தற்கொலைக்கா?’ அண்ணாமலை கேள்வி!
Annamalai: வழக்கம் போல் இழப்பீடு என்று ஒன்றைத் தந்து இதைக் கடந்து போகலாம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைக்க வேண்டாம் - அண்ணாமலை
தமிழ்நாடு அரசு வழங்கிய பொங்கல் தொகுப்பில் புளியில் பல்லி இருந்ததாக கூறியதால் நந்தன் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்த நிலையில், அவரது மகன் மனஉளைச்சல் காரணமாக தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு அண்ணாமலை கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் தமிழ்நாடு அரசின் பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கியதில் புளியில் பல்லி இருந்ததாக நந்தன் என்பவர் கடைக்காரரிடம் கேட்டபோது முறையான தகவல் கிடைக்காதது குறித்து செய்தியாளர்களிடம் தகவல் தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து, அவதூறு பரப்பியதாக ரேஷன் கடை ஊழியர் கொடுத்த புகாரின் மீது நந்தன் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.இது திருத்தணி பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் நந்தன் மற்றும் அவரது குடும்பத்தார் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகினர்.
இந்நிலையில், நந்தனின் மகன் குப்புசாமி பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். உடனே வீட்டில் இருந்தவர்கள் அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து அவரை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது திருத்தணி பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், இந்த சம்பவத்திற்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், “குற்றம் சொல்லியதற்குக் கைது செய்வதா? நியாயமான குற்றச்சாட்டுகளை மக்கள் கூறுவது தீர்வை எதிர்நோக்கியே தவிர தீ குளித்து உயிரை மாய்த்துக் கொள்ள அல்ல.
ஒவ்வொரு பொங்கல் பரிசு பைக்கு 50 ரூபாய் லஞ்சமாக வாங்கியதாகச் சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சர் மீது பிரபல பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டது. அவரின் மேல் நடவடிக்கை எடுக்காமல், நீங்கள் செய்த குற்றத்திற்காக ஒரு குடும்பம் இன்று சிதைந்துள்ளது. வழக்கம் போல் இழப்பீடு என்று ஒன்றைத் தந்து இதைக் கடந்து போகலாம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைக்க வேண்டாம்” எனப் பதிவிட்டுள்ளார்.
மேலும், ‘காவல்துறை நண்பர்களை ஏவல் துறையாக மாற்றி, லஞ்சத்தை பற்றி யார் பேசினாலும் கூட அவருடைய குரல்வளையை அடக்க முயற்சி, லஞ்ச குற்றச்சாட்டுகளுக்கு ஆட்சியாளர்கள் சப்பைக்கட்டு . இதுதான் விடியல் ஆட்சியுடைய எட்டுமாத சாதனையோ?’ என்றும் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்