AIADMK Meeting Update: திமுக சொன்னதை செய்யாவிட்டால், மாநிலம் தழுவிய போராட்டம் : அதிமுக எச்சரிக்கை..!
சட்டமன்றப் பொதுத் தேர்தலின்போது வழங்கிய வாக்குறுதிகள் பலவற்றை நிறைவேற்றுவது பற்றி வாய் திறக்காத தி.மு.க. அரசுக்குக் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது
அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் கழகத் தலைமை நிர்வாகிகள் மற்றும் மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் சென்னையில் உள்ள கட்சி அலுவலகத்தில் கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில் இயற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு..
தீர்மானம் -1
தமிழ் நாட்டின் இதயத் துடிப்பான காவிரி நதிநீர் பங்கீட்டில் தமிழ் நாட்டிற்கான உரிமையைக் காப்பீர் !
மேகதாதுவில் காவிரியின் குறுக்கே புதிய அணை கட்டப்படுவதைத் தடுப்பீர்!
தமிழக அரசுக்கு வலியுறுத்தல்.
காவிரி நதிநீர்ப் பங்கீட்டில் தமிழ் நாட்டிற்கான உரிமை நிலைநாட்டப்பட இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் மேற்கொண்ட கடும் முயற்சியில், நம் உரிமைகள் நிலைநாட்டப்பட்டதென்பது உலகறிந்த வரலாறு.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் தென்பெண்ணை ஆற்றில், துணை நதியான மார்கண்டேய நதியின் குறுக்கே எரகோள் என்னும் இடத்தில் கர்நாடக அரசு தடுப்பணையைக் கட்டி இருக்கிறது.
ஒரு நதியின் கீழ்பாசனப் பகுதியினரின் ஒப்புதல் இன்றி, மேல்பாசனப் பகுதியினர் அணை கட்டிக்கொள்ளக்கூடாது என்பது சர்வதேச நடைமுறையாகும். இதையே உலக நாடுகள் அனைத்தும் பின்பற்றுகின்றன. இதை மீறி, எரகோளில் கர்நாடக அரசு அணை கட்டி உள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் வேலையாக கர்நாடக அரசு மேகதாதுவில், காவிரி நதியின் குறுக்கே அணை கட்டும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறது. ஒன்றுக்கு இரண்டாக தடுப்பணைகள் கட்ட கர்நாடக அரசு நிதி ஒதுக்கி செயல்பட்டு வருகிறது.
"தமிழ் நாட்டின் இசைவைப் பெறாமல் புதிய அணையை கர்நாடக அரசு மேகதாட்டுவில் கட்ட இயலாது. அவ்வாறு கர்நாடக அரசு முயற்சிக்குமேயானால் தமிழகம் அதனை எந்தச் சூழ்நிலையிலும் அனுமதிக்காது" என்று 2012-ஆம் ஆண்டு மார்ச் மாதம் தமிழ் நாடு சட்டமன்றப் பேரவையில் முதலமைச்சராக வீற்றிருந்த புரட்சித் தலைவி அம்மா அவர்கள் உறுதிபட தெரிவித்தார்கள்.
மேகதாது விவகாரத்தில், தமிழ் நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் அணைகள் கட்டப்படுவதற்கு எதிராக வழக்கு தொடுத்திருப்பதை, 2015-16ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையைத் தாக்கல் செய்த போது, அப்போதைய நிதி அமைச்சர் திரு. ஒ. பன்னீர்செல்வம் அவர்கள் சுட்டிக்காட்டி, “அணைகள் கட்டப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்” என்று தமிழ் நாடு சட்டமன்றப் பேரவையில் உறுதி அளித்தார்.
அதே போல், கழக இணை ஒருங்கிணைப்பாளர் திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் தமிழ் நாடு முதலமைச்சராக இருந்தபோது, மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களுக்கு அனுப்பிய கடிதங்களில், “கர்நாடகாவின் மேகதாது அணை திட்டத்திற்கு சுற்றுச் சூழல் அனுமதி வழங்கக் கூடாது எனவும், கர்நாடக அரசின் திட்ட அறிக்கையை மத்திய அரசின் சுற்றுச் சூழல், வனங்கள் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் முற்றிலும் நிராகரித்து திருப்பி அனுப்புமாறு ஜல்சக்தி அமைச்சகத்திற்கு அறிவுறுத்துமாறும்" வலியுறுத்தி கேட்டுக்கொண்டார். மேலும், பாரதப் பிரதமர் அவர்களை நேரில் இரண்டுமுறை சந்தித்தபோதும், மேகதாதுவில் கர்நாடகா அணை கட்ட அனுமதி வழங்கினால், தமிழ் நாட்டின் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகிவிடும் சூழ்நிலை ஏற்படும் என்றும் எடுத்துக் கூறினார்.
மேற்சொன்ன வரலாற்று உண்மைகளை நினைவில் கொண்டு தமிழ் நாடு அரசு விரைந்தும், துணிந்தும், விவேகத்துடனும் செயல்பட வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
கடந்த திமுக ஆட்சிக் காலங்களில், தமிழ்நாட்டின் வாழ்வாதாரங்களை பாதுகாக்கத்தவறியது போல் அல்லாமல், இப்பொழுதேனும் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு, தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை பாதுகாக்கும்படியாக மேகதாதுவில் அணைகள் கட்டப்படுவதைத் தடுத்து நிறுத்த இக்கூட்டம் தமிழ் நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் 2
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துக;
மக்கள் படும் துயரங்களை மனதிற்கொள்க !
மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை.
மனித குல வரலாற்றில் கொரோளா நோய்த்தொற்று காலம் போல், அனைத்துத் தரப்பு மக்களையும் ஒரே நேரத்தில் வாட்டி வதைக்கும் பல்முனைத் தாக்குதல்கள் இதற்கு முன் நடந்ததுண்டா? என்று கேட்கும் அளவுக்கு மக்கள் அனைவரும் சொல்லொண்ணா துன்ப, துயரங்களுக்கு ஆளாகி உள்ளனர்.
வேலை இன்மை, பண வீக்கம், வருமானம் இன்மை, விலைவாசி உயர்வு, எதிர்காலம் குறித்த கேள்விக்குறி என்று ஏழை, எளிய, நடுத்தர, உழைக்கும் மக்கள் துன்பத்தில் ஆழ்ந்திருக்கும் நேரத்திலும், ஒரு சில பிரிவினர் மக்களை மேலும் துயரத்தில் தள்ளும் வகையில் கொள்ளை லாபம் ஈட்டுவதில் ஈடுபட்டிருப்பது வேதனைக்குரியது.
மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு, ஆக்கப்பூர்வமான பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் எளியோர் நலன் சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு, மக்களின் கண்ணீரைத் துடைக்கும் வகையில், விலைவாசி உயர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்க உடனடியாக ஆவன செய்ய வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
விவசாய இடுபொருட்களின் விலை உயர்வு: சிமெண்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வு; ' மருத்துவத் தேவைகளுக்கான கட்டண உயர்வு என்று எட்டுத் திசையில் இருந்தும் கடுமையான தாக்குதல்கள் நடத்தப்படுவதால் தமிழ் நாட்டு மக்கள் படும் துயரம் பெரும் வேதனையைத் தருகிறது.
விரைந்து செயலாற்றி, விலைவாசியைக் கட்டுப்படுத்தி, வேலை வாய்ப்புகளைப் பெருக்கி, நம் மக்களின் துன்பம் துடைக்க முன் வருவீர் என்று அரசாள வந்திருப்போரை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் –3
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலைகளைக் குறைக்க மத்திய அரசு திட்டம் வகுக்க வேண்டும் !
ஆட்சிக்கு வந்தவுடன் இவற்றின் விலைகளைக் குறைப்பதாக
கொடுத்த வாக்குறுதியை மாநில ஆட்சியாளர்கள் நிறைவேற்ற வேண்டும்!
“நீர் இன்றி அமையாது உலகு" என்று வள்ளுவப் பெருந்தசை கூறியதுபோல, எரிபொருள் இன்றி அமையாது இன்றைய வாழ்க்கை.
அனைத்துத்தொழில்களுக்கும் அடிப்படையாக விளங்கும்
எரிபொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டிருப்பதால், நம் நாட்டின் பணவீக்கம் அதிகரிக்கிறது; விலைவாசி உயர்கிறது; மக்கள் படும் துன்பம் கூடிக் கொண்டிருக்கிறது.
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றில் இந்தியாவின் மொத்தத் தேவையில் 80 விழுக்காடு வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது என்பதாலும்; மத்திய, மாநில அரசுகளின் வரிவிதிப்பினாலும் இவற்றின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டிருக்கிறது.
எத்தகைய பொருளாதார மற்றும் வரிவிதிப்பு மாற்றங்களைச் செய்தால் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த முடியும் என்பது குறித்து ஆராய்ந்து முடிவெடுக்குமாறு இக்கூட்டம் மத்திய அரசைக் கேட்டுக்கொள்கிறது.
ஆட்சிக்கு வந்தவுடன் பெட்ரோல் விலையை 5 ரூபாயும், டீசல் விலையை 4 ரூபாயும் குறைப்பதாக வாக்குறுதி அளித்த தி.மு.க., உடனடியாக இந்த விலை குறைப்பை அமல்படுத்துவது தான் நாணயமான செயல் என்பதை இக்கூட்டம் சுட்டிக்காட்டுகிறது.
எரிவாயு சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியமாக வழங்கப்படும் என்று அளித்த வாக்குறுதியை இதுவரை அமல்படுத்தாததற்கு தி.மு.க. அரசை இக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது. இந்த வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்றாவிடில் மக்களை ஒன்று திரட்டி மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று இக்கூட்டம் எச்சரிக்கிறது.
தீர்மானம் 4
சட்டமன்றப் பொதுத் தேர்தலின் போது வழங்கிய வாக்குறுதிகள் பலவற்றை நிறைவேற்றுவது பற்றி வாய் திறக்காத தி.மு.க. அரசுக்குக் கண்டனம்; வாக்குறுதிகளை உடனே நிறைவேற்ற வலியுறுத்தல்!
தமிழ் நாட்டின் உரிமைகளைப் பாதுகாப்பதிலும், தமிழக மக்களின் நலன்களைப் பேணுவதிலும் தன்னிகரில்லாது செயல்பட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொற்கால ஆட்சியைப் பற்றி அவதூறு பரப்பியும், நூற்றுக்கணக்கான வாக்குறுதிகளை அளித்தும், தேர்தலில் சொற்ப வாக்கு வித்தியாசத்தில் ஆட்சிக்கு வந்திருக்கும் தி.மு.க., அந்த வாக்குறுதிகளை செயல்படுத்துவது குறித்து இன்னும் வாய் திறக்காதிருப்பதை இக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது.
தனது தேர்தல் அறிக்கையில் அளித்திருக்கும் நூற்றுக்கணக்கான கால் அட்டவணையை வெளியிட வேண்டும். வழங்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தையும், குறிப்பாக, பெண்கள் நலன் சார்ந்து அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தையும் விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
வாக்குறுதிகளை நிறைவேற்ற தி.மு.க. அரசு உடனடியாகச் செயல்படவேண்டும்.
சட்டம், ஒழுங்கை காக்கும் பணியின்போது உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும்" என்று தி.மு.க. அளித்த வாக்குறுதியை உடனடியாக நடைமுறைக்குக் கொண்டுவர வேண்டும் என்று இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் – 5
தமிழ் நாட்டில் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 1,000/- ரூபாய் வழங்கப்படும் என்று தேர்தல் பிரச்சாரத்தின்போது, தமிழ் நாட்டு மக்களுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதியை திமுக நிறைவேற்ற வேண்டும். இல்லையேல், தமிழ் நாட்டு மக்களின் பேராதரவோடு, தாய்மார்களின் பங்கேற்போடு மாபெரும் போராட்டத்தை நடத்துவோம்.
தமிழ் நாடு அரசுக்கு எச்சரிக்கை !
தமிழ் நாட்டில் உள்ள குடும்பத் தலைவிகளுக்கும், மற்ற மகளிருக்கும் பலவகையான பணப் பயன்களை அளிப்பதாக திமுக வாக்குறுதி அளித்து, சட்டமன்றப் பொதுத் தேர்தலில் திமுக ஆட்சியைக் கைப்பற்றி இருக்கிறது.
குறிப்பாக,
மகளிருக்கு மாதந்தோறும் 1,000/- ரூபாய் வழங்கப்படும். என்றும்
முதியோர் உதவித் தொகை 1,000/- ரூபாயில் இருந்து 1,500/
ரூபாயாக உயர்த்தப்படும் என்றும்; மகளிர் சுயஉதவிக் குழுக்கள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய
கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்றும்; கல்லூரிகளில் பட்டப் படிப்பை மேற்கொள்ள வங்கிக் கடன் பெற்ற 30 வயதுக்குட்பட்ட இளைஞர்களின் கல்விக் கடன்களை அரசே ஏற்று திருப்பி செலுத்தப்படும் என்றும்;
கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய 5 பவுனுக்குட்பட்ட நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்றும்; திமுக அரசு அளித்த வாக்குறுதிகள் விரைந்து செயல்படுத்தப்படும் என்று தமிழ் நாட்டு மக்கள், குறிப்பாக பெண்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு உள்ளனர்.
தமிழ் நாட்டு குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 1,000/- ரூபாய் வழங்கும் திட்டத்தை திமுக அரசு உடனே செயல்படுத்த வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகிறது. இத்திட்டத்தையும், பெண்களுக்கு அளித்த மற்ற வாக்குறுதிகளையும் திமுக அரசு விரைந்து செயல்படுத்தாவிட்டால், தமிழ் நாட்டு மக்களின் பேராதரவோடும், தாய்க்குலத்தின் பங்கேற்போடும். மாநிலம் தழுவிய மாபெரும் போராட்டத்தை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒருங்கிணைத்து நடத்தும் என்று இக்கூட்டம் எச்சரிக்கிறது.
தீர்மானம் – 6
விவசாயிகள், தாங்கள் விளைவித்த நெல்லை குறித்த நேரத்தில் கொள்முதல் செய்யாமல் காலம் தாழ்த்தி விரயம் ஏற்படுவதற்குக் காரணமான தமிழக அரசை வன்மையாகக் கண்டிப்பதோடு, உடனடியாகக் கொள்முதல் செய்ய வலியுறுத்தல் !
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில், விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல்லை அரசிடம் விற்பனை செய்வதற்காக கொள்முதல் நிலையங்களுக்குக் கொண்டுசென்ற நிலையில், தொடர்ந்து மூன்று நாட்கள் பெய்த கனமழையின் காரணமாக, நெல்மணிகள் நனைந்து முளைத்து வருகின்றன. சில கொள்முதல் நிலையங்கள் அருகே குளம் போல் தண்ணீர் தேங்கி உள்ளன. ஒவ்வொரு கொள்முதல் மையத்திலும் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் குவிந்துள்ளன. இதுமட்டுமல்லாமல், மூன்று மடங்கு நெல் அவரவர் வீடு மற்றும் வயல்களில் குவித்து வைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக விவசாயிகள் பெருத்த பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.
விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல்லை உடனடியாகக் கொள்முதல் செய்யாமல் அலட்சியம் காட்டிவரும் தமிழக அரசை வன்மையாகக் கண்டிப்பதோடு; விவசாயிகள் தாங்கள் விளைவித்து கொண்டுவந்த நெல்லை உடனுக்குடன் கொள்முதல் செய்து, அதற்குண்டான உரிய விலையை உடனடியாக வழங்குவதற்கான நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.
Also Read: கமல் நடிப்பில் லோகேஷ் கனகராஜின் ’விக்ரம்’ : நாளை பர்ஸ்ட் லுக்..!