TN Weather Update: விடிய விடிய கொட்டிய மழை.. காலை 10 மணி வரை 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..
தமிழ்நாட்டில் காலை 10 மணி வரை 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
அதேபோல் தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரம் வரை, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், ராமநாதபுரம் மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நேற்று மாலை முதல் சென்னையில் பல்வேறு இடங்களில் இடி மின்னலுடன் கூடி பலத்த காற்றுடன் கனமழை பதிவானது. அதனை தொடர்ந்து நேற்று இரவு முழுவதும் விடிய விடிய மழை பெய்தது. அவ்வப்போது கனமழையும், மிதமான மழையும் பதிவாகியுள்ளது. இன்று அதிகாலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு அவ்வப்போது சாரல் மழையும் பெய்து வருகிறது.
மடிப்பாக்கம், மேடவாக்கம், ஆதம்பாக்கம், ஆலந்தூர், கிண்டி, சைதாப்பேட்டை, சின்னமலை, அண்ணாநகர், கோயம்பேடு, அடையாறு, போரூர், பூந்தமல்லி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நல்ல மழை பதிவாகியுள்ளது. தொடர் மழையால் உஷ்ணம் தணிந்து வெப்பநிலை வெகுவாக குறைந்துள்ளது. அதேபோல் தொடர் மழை காரணமாக வாகன ஓட்டிகள், அலுவலகம் செல்லும் நபர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும் மழைநீர் வடிகால் பகுதிகளுக்காக ஆங்காங்கே தோண்டப்படும் நிலையில் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.