கும்பகோணம் பள்ளி தீ விபத்து 19-வது ஆண்டு நினைவுதினம் இன்று.. மனதை உடைத்த நாள் நினைவிருக்கா?
அன்று ஆடி வெள்ளி என்பதால் பள்ளிக்கு சற்று தள்ளி ஒரு கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்து கொண்டிருந்தது. இதையறிந்த ஸ்ரீ கிருஷ்ணா தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் சிலர் ஒன்றாக கோவிலுக்கு செல்ல முடிவு செய்துள்ளனர்.
கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் உயிரிழந்த 94 குழந்தைகளின் 19வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. ஜூலை 16, 2004, காலை தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் நடந்த சம்பவம் தமிழ்நாட்டிற்கே ஒரு துக்க நாள். கும்பகோணம் நகரில் உள்ள தொடக்கப்பள்ளியில் 94 அப்பாவி குழந்தைகள் எரிந்து சாம்பலான கோர சம்பவம் நடைபெற்ற தினம் அது.
பள்ளி அமைப்பு
ஸ்ரீ கிருஷ்ணா அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி, கும்பகோணம் காசிராமன் தெருவில் உள்ள சரஸ்வதி மழலையர் பள்ளி மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகியவை ஒரே கட்டிடத்தில் மூன்று வெவ்வேறு பகுதிகளில் இயங்கி வந்தன. 2004 ஆம் ஆண்டில், இந்த மூன்று பள்ளிகளிலும் மொத்தம் 782 குழந்தைகள் படித்து வந்தனர். பள்ளி வளாகம் குடியிருப்பு பகுதியில் இருந்ததால், இடவசதி அதிகம் இல்லாத இடமாக இருந்தது. வகுப்பறைகள் சரியான காற்றோட்டம் இல்லாததால், வகுப்பறைகளுக்குச் செல்லும் படிக்கட்டுகள் மிகவும் குறுகலாக இருப்பதால் குழந்தைகள் ஏறி இறங்குவதற்கு வசதியாக இல்லாமல் இருந்த பள்ளி அது. இந்த சம்பவத்தின் மோசமான விஷயம் என்னவென்றால், வகுப்பறைகள் பிரிக்கப்படாமல், பல வகுப்புகளைச் சேர்ந்த குழந்தைகள் ஒரு நீண்ட அறையில் அருகருகே அமர்ந்திருந்தனர். வகுப்பறைக்கு மிக அருகில் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு பரிமாறும் சமையலறை இருந்தது. 16 ஜூலை 2004 அன்று காலை 9.15 மணியளவில் பள்ளியின் அனைத்து வகுப்பறைகளும் வழக்கம் போல் இயங்கின.
மாணவர்களை பூட்டிவிட்டு கோயிலுக்கு சென்ற ஆசிரியர்கள்
அன்று ஆடி வெள்ளி என்பதால் பள்ளிக்கு சற்று தள்ளி ஒரு கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்து கொண்டிருந்தது. இதையறிந்த ஸ்ரீ கிருஷ்ணா தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் சிலர் ஒன்றாக கோவிலுக்கு செல்ல முடிவு செய்துள்ளனர். இவர்கள் அனைவரும் எல்.கே.ஜி முதல் ஐந்தாம் வகுப்பு வரை கற்பிக்கும் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களாக இருந்தனர். ஆசிரியர்கள் இல்லாமல் குழந்தைகள் வெளியில் செல்லாமல் இருப்பதற்காக, வகுப்பறை கதவுகளை நன்கு பூட்டிவிட்டு சென்றுள்ளனர். அடுத்து நடக்கப்போகும் பயங்கரங்களை அறியாத குழந்தைகள், ஆசிரியர் இல்லாத அந்த பூட்டிய வகுப்பறைக்குள் மகிழ்ச்சியுடன் விளையாடிக் கொண்டிருந்தனர்.
சமையல் அறையில் இருந்து பற்றிய தீ
அப்போது, மேல்மாடியில் இயங்கி வந்த வகுப்பறைக்கு கீழே இருந்த சமையலறையில் தீ கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. அப்போது அங்கு பணிபுரிந்து வந்த சமையல்காரர் வசந்தி என்பவர் அருகில் உள்ள வீட்டிற்கு சென்றதால் தீயை அணைக்கவோ, கட்டுப்படுத்தவோ யாரும் இல்லை. பூட்டிய வகுப்பறை கூரைகளால் வேயப்பட்டிருந்ததால் கீழே கொழுந்துவிட்டு எரிந்த தீ வேகமாக மேல்நோக்கிப் பரவியது. இடைநிலை மேல்நிலை பள்ளியை சேர்ந்த மாணவி ஒருவர் தீப்பற்றி எரிவதைக் கண்டு தனது வகுப்பில் இருந்த ஆசிரியையிடம் தெரிவித்ததையடுத்து, அவர் உடனடியாக அனைவருக்கும் தகவல் அளித்து குழந்தைகளை வெளியேற்ற முயன்றார். ஆனால் அதற்குள் தீ மளமளவென பரவியதால் பள்ளி கட்டிடம் முழுவதும் கரும் புகை பரவியது. இதனால் வகுப்பறைகளில் குழந்தைகள் வெளியே வரத் தெரியாமல் தவித்தனர்.
19ஆம் ஆண்டு நினைவுதினம்
தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். ஆனால் அப்போது அவ்வளவு பெரிய தீ கட்டுப்பாட்டு வசதிகள் இல்லாததால், தீயை அணைப்பது அவர்களுக்கு கடும் சவாலாக இருந்தது. ஒருவழியாக தீயை அணைத்த பிறகுதான், பள்ளியின் இரண்டாவது தளத்தில் பூட்டிய வகுப்பறையை திறக்க முடிந்தது. அதில் சிக்கியிருந்த அனைத்து குழந்தைகளும், ஒருவர் மிச்சமின்றி தீக்கு இரையாகினர் என்ற வேதனையான செய்தி வந்தது. 'நாங்கள் பொறியாளர்களாகப் போகிறோம். "டாக்டர் ஆகப் போகிறோம்" என்று காலையில் பள்ளிக்குக் கிளம்பிய அந்த சிறுவர்கள், பெரும் தீயின் எரியும் நாக்குகளுக்கு இரையாகினர். ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 16 ஆம் தேதி கும்பகோணம் காசிராமன் தெருவில் உள்ள இந்த பள்ளி முன், இறந்த 94 குழந்தைகளின் புகைப்படங்கள் வைக்கப்பட்டு, குழந்தைகளை இழந்த பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள், ஊர்மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்துகிறார்கள். விபத்து நடந்து 18 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், ஒவ்வொரு ஆண்டும் இந்த நினைவு தினத்தில், நினைவிடத்தில் மலர்கள் வைத்து, குழந்தைகளின் நினைவாக ஊர்வலம் நடத்தப்படுகிறது. மேலும் ஒவ்வொரு ஆண்டும் குழந்தைகளை அடக்கம் செய்யும் இடுகாட்டிலேயே குழந்தைகளுக்கு விருப்பமான உணவுகளை தயாரித்து குழந்தைகளின் குடும்பத்தினர் தங்கள் அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், 19வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.