வெடிக்குறோம் கலக்குறோம்... குல்பி ஐஸ், டால்பின், டோரிமோன்... தீபாவளிக்கு விதவிதமான பட்டாசுகள் அறிமுகம்
டோரிமோன் பட்டாசுகள் உற்பத்தி செய்யப்பட்டு தற்போது சந்தையில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினர் மத்தியிலும் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.
தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில் சிவகாசியில் சிறுவர்களை கவரும் வகையிலான குல்பி ஐஸ், கடலில் துள்ளிக் குதிக்கும் டால்பின், பேருந்து வடிவ பட்டாசுகள் அறிமுகமாகி அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
குட்டி ஜப்பான் என அழைக்கப்படும் சிவகாசியில் தீபாவளி பண்டிகைக்கான பட்டாசு உற்பத்தி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு தீபாவளி பண்டிகையின்போதும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் கவரும் வகையிலான புதிய ரக பட்டாசுகள் அறிமுகம் செய்வது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் பல்வேறு யுக்திகளை கையாண்டு புதிய வடிவிலான சிறுவர்களை கவரும் பல்வேறு வகையான பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்களை, அதிலும் குறிப்பாக குழந்தைகளையும், சிறுவர், சிறுமிகளையும், இளைஞர்களையும் ஏன் முதியவரென அனைத்து தரப்பினர்களையும் கவரும் வகையில், இந்த ஆண்டு வண்ணத்துப்பூச்சி வடிவில் வண்ணக் கலரில் தீப்பொறியை வெளிப்படுத்தி துள்ளிக்குதித்து சுழலும் பன் பட்டர்ஃபிளை, குழந்தைகளுக்கு பிரியமான குல்பி ஐஸ்கிரீம் வடிவமைப்பில், கையில் பிடித்து வெடிக்கும் போது வண்ண கலரில் சடசடவென தீப்பொறி பறக்கும் குல்பி கிங்டாம், கடலில் துள்ளிக் குதிக்கும் டால்பின் வாயிலிருந்து தண்ணீரை பீய்ச்சியடித்து மலைச்சாரல் போல தீப்பொறி வெளிவரும் டால்ஃபின் ஷோ, கார்ட்டூன்முயல் வாயிலிருந்து வெவ்வேறு கலர்களில் தீப்பொறி வெளியாகும் லூனிடூன்ஸ், திரியில் தீப்பற்ற வைத்தவுடன், விசில் சத்தத்தோடு மஞ்சள் கலரில், தீப்பொறி பறக்கும் பேபிமான்ஸ்டர், திரைப்படமாக வெளிவந்துள்ள டாய் ஸ்டோரி, ஐஸ்ஏஜ் என்ற பட்டாசுகளின் பொம்மை வடிவ தலையிலிருந்து கலர், கலராக தீப்பொறி வெளிவருவது, பேருந்து வடிவ அட்டைப்பெட்டியில் உருவாக்கப்பட்டுள்ள பிளிக்கர் பட்டாசு, இரவு நேர பேருந்து இயக்கத்தின் முகப்பு விளக்கை டிம்-பிரைட் டாக ஒளி ஏற்படுத்துவது போல தோன்றும். ராணுவ பீரங்கி வடிவிலான பட்டாசு திரிகளில் தீயை பற்றவைத்தவுடன், தீப்பொறிகள் பீரங்கியிலிருந்து ஆங்காங்கே வெளியேறி, போர்க்களத்தில் பல்வேறு திசைகளிலிருந்து எதிரிகளை தாக்குவது போலுள்ள டேங்க் பட்டாசு, பொம்மைகளின் தலையில் காற்றாடி சுழல்வது போலவும், சக்கரம் சுழல்வது போன்றும் தயாரிக்கப்பட்டுள்ளது. டோரிமோன் பட்டாசுகள் உற்பத்தி செய்யப்பட்டு தற்போது சந்தையில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினர் மத்தியிலும் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.
சிறுவர்கள் பார்த்தவுடன் அவர்களது மனதை கவரும் வகையில் பட்டாசுகளை தயாரிப்பதில் அதிக கவனம் செலுத்துவதாக கூறும் பட்டாசு உற்பத்தியாளர்கள், பட்டாசு பேக்கிங் செய்யப்பட்டுள்ள அட்டைகளை அவர்கள் தொடர்ந்து விளையாடுவதற்காக பயன்படுத்திக் கொள்ளும் வகையில் தரமான முறையில் பட்டாசு பேக்கிங் செய்யப்பட்டுள்ளதாகவும் அதே நேரம் பாதுகாப்பான முறையில் பட்டாசுகளை வெடித்து தங்களது தீபாவளி கொண்டாட்டத்தை வெளிப்படுத்தவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.