அடப்பாவிங்களா.. மணமகனின் மதுபோதை நண்பர்களால் மணமேடையில் நின்ற கல்யாணம் - கிருஷ்ணகிரியில் சோகம்
கிருஷ்ணகிரியில் மணமகனின் மதுபோதை நண்பர்களால் பாதியிலே திருமணம் நின்று போன சம்பவம் பலருக்கும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைந்துள்ளது பர்கூர். இந்த பகுதிக்குட்பட்ட கிராமம் ஒன்றில் வசித்து வரும் இளைஞர் ரமேஷ் ( பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கும் ப்ரியா ( பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு கடந்த 27ம் தேதி நடைபெறுவதாக முடிவு செய்திருந்தனர்.
வில்லங்கமாக மாறிய ஆட்டம் பாட்டம்:
இதையடுத்து, இவர்கள் திருமணம் காவேரிப்பட்டிணத்தில் நடைபெற அனைத்து ஏற்பாடுகள் நடந்து இருந்தது. திருமணத்திற்கு முதல் நாள் இரவான கடந்த 26ம் தேதி இரவு திருமண வரவேற்பு நடக்கிறது. இந்த வரவேற்பு நிகழ்ச்சியின்போது பாடல் ஒளிபரப்பப்பட்டு திருமண வீட்டார் உற்சாகமாக இருந்துள்ளனர்.
அப்போது, மணமகனின் நண்பர்கள் மதுபோதையில் இருந்துள்ளனர். அவர்கள் திருமண வீட்டில் ஒளிபரப்பப்பட்ட பாடல்களுக்கு நடனம் ஆடியுள்ளனர். அப்போது, மணமகனின் நண்பர்கள் உற்சாக மிகுதியில் மணமகனையும் நடனமாட அழைத்துள்ளனர்.
மதுபோதை நண்பர்கள்:
அவரும் தனது நண்பர்களுடன் இணைந்து நடனம் ஆடியுள்ளார். பின்னர், மணமகனின் நண்பர்கள் மணமகளையும் நடனமாட அழைத்துள்ளனர். அப்போது, மணமகள் தனக்கு நடனமாட விருப்பமில்லை என்று கூறியுள்ளார். ஆனாலும், மணமகனின் நண்பர்கள் தொடர்ந்து நடனமாட வலியுறுத்தியுள்ளனர்.
இதனால், கோபம் அடைந்த மணமகள் தனக்கு நடனமாட விருப்பமில்லை என்று கோபம் அடைந்துள்ளார். இதனால், வாக்குவாதம் உண்டாகியுள்ளது. அப்போது, மணமகனின் நண்பர்கள் பெண் வீட்டாரை தாக்கியுள்ளனர். இதனால், மணமகள் உள்ளிட்ட மணமகள் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
நின்று போன திருமணம்:
இந்த குடும்பத்தினர் இப்போதே இப்படி என்றால் திருமணத்திற்கு பிறகு தன்னை எப்படி நடத்துவார்கள்? தான் எவ்வளவு கஷ்டப்பட வேண்டும்? என்று கூறி தனக்கு இந்த திருமணமே வேண்டாம் என்று மணமகள் கூறியுள்ளார். பின்னர், மணமகளையும், மணமகள் வீட்டாரையும் சமாதானப்படுத்த இரு தரப்பில் இருந்தும் பேச்சுவார்த்தை நடந்தது.
ஆனால், அந்த பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்படாததால் திருமணம் நின்று போனது. இதனால், இரவோடு இரவாக திருமண மண்டபத்தில் இருந்த பேனர்கள், அலங்காரங்கள் அகற்றப்பட்டது. திருமணம் நின்று போனதை அறியாமல் திருமணத்திற்கு வந்தவர்கள் நடந்ததை அறிந்து வேதனையுடன் வீடு திரும்பினர்.
மணமகனின் மதுபோதை நண்பர்களால் பரிதாபமாக இந்த திருமணம் நின்றுபோனது மணமகனுக்கு பெரும் சோகத்தையும், வேதனையும் ஏற்படுத்தியது. இன்றைய காலகட்டத்தில் பலருக்கும் திருமணம் நடப்பது மிகப்பெரிய சவாலாக இளைஞர்களுக்கு மாறியுள்ள நிலையில், திருமணம் வரை சென்று திருமணம் நின்றதற்கு சமூக வலைதளத்தில் பலரும் அந்த மதுபோதை நண்பர்களை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்





















