Kovai Selvaraj ADMK: "சுயநலத்துக்காக சண்டை போடும் இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ்..." அ.தி.மு.க.வில் இருந்து விலகினார் கோவை செல்வராஜ்..!
அதிமுகவில் இருந்து விலகுவதாக ஓ.பி.எஸ். அணியைச் சேர்ந்த கோவை செல்வராஜ் அறிவித்தார்.
அதிமுகவில் இருந்து விலகுவதாக ஓ.பி.எஸ். அணியைச் சேர்ந்த கோவை செல்வராஜ் அறிவித்தார்.
"முன்னாள் முதல்வர்கள் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் தங்கள் சுயநலத்துக்காக சண்டை போட்டு வருகின்றனர். அதிமுக என்ற பெயரில் சுயநலத்திற்காக செயல்படுவோர் மத்தியில் இருக்க விரும்பவில்லை" என்று அவர் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், "திராவிட பாரம்பரியத்தை விட்டு விலக மாட்டேன். விரைவில் நல்ல முடிவை எடுப்பேன். அரசியலை விட்டு விலக மாட்டேன். ஆனால், துரோகிகளோடு சேர்ந்து ஒரு நாளும் பணியாற்ற மாட்டேன்.
ஜெயலலிதாவின் உயிரைவிட பதவிதான் முக்கியம் என பன்னீர் செல்வமும் பழனிசாமியும் இருந்தனர்.
சுயநலவாதிகளுடன் இணைந்து பணியாற்ற என் மனசாட்சி இடம்கொடுக்கவில்லை என்று அவர் தெரிவித்தார்.
முன்னதாக, கோவை சிவானந்தா காலனி பகுதியில் திமுக அரசைக் கண்டித்து, அதிமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. கோவையில் குண்டும் குழியுமான சாலைகளை சீரமைக்க கோரியும், சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு உள்ளிட்டவற்றை கண்டித்தும் இந்த போராட்டம் நடத்தப்பட்டது.
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உண்ணாவிரத போராட்டத்தை நேற்று தொடங்கி வைத்தார். கருப்பு சட்டை அணிந்தபடி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்றனர்.
இப்போராட்டத்தின் போது பேசிய எடப்பாடி பழனிசாமி, “விடியா திமுக ஆட்சியில் மக்கள் படும் துன்பங்கள் அத்தனையும் கண்டித்து உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது. மக்கள் வயிற்றெரிச்சல், கோபத்தை இந்த உண்ணாவிரத போராட்டம் மூலம் வெளிக்காட்டுகின்றனர். 18 மாத திமுக ஆட்சிக் காலத்தில் என்ன நன்மை நடந்துள்ளது? என்ன புதிய திட்டம் கொண்டு வந்தார்கள்? 18 மாத அலங்கோல ஆட்சியில் மக்கள் துன்பப்பட்டு கொண்டிருக்கிறார்கள் என்றார் எடப்பாடி பழனிசாமி.