Kongunadu Controversy: தமிழ்நாட்டில் இருந்து கொங்கு நாட்டை பிரிக்கும் எண்ணம் இல்லை - பாஜக ஊடக பிரிவு விளக்கம்
தமிழகத்தை இரண்டு மாநிலமாக பிரிக்கவேண்டும் என்பது குறித்தும், அது குறித்து பரிசீலனை செய்யப்படுகிறது என்பதும் பாஜகவின் நிலைப்பாடு அல்ல என பாஜக ஊடகபிரிவு செயலாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் விளக்கம்
தமிழ்நாட்டில் இருந்து கோயமுத்தூரை தலைமை இடமாக கொண்டு புதிய மாநிலத்தை உருவாக்க மத்திய பாஜக அரசு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியான நிலையில் கொங்குநாடு குறித்த விவாதம் சமூகவலைதளங்களில் பேசுபொருளானது.
பாஜகவின் தேசிய மகளிர் அணி செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் கொங்குதேர் வாழ்க்கை என்ற பாடலைப் பதிவிட்டிருந்தார். இந்த நிலையில் பாஜக ஊடகபிரிவு தலைவர் ஏ.என்.எஸ் பிரசாத் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில், கொங்குநாடு குறித்தும் தமிழகத்தை இரண்டு மாநிலமாக பிரிக்க வேண்டும் என்பது குறித்தும், அது குறித்து பரிசீலனை செய்யப்படுகிறது என்பதும் பாஜகவின் நிலைப்பாடு அல்ல என விளக்கம் அளித்துள்ளார்.
நேற்றைய தினம் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக பொதுச்செயலாளர் கரு.நாகராஜன், அந்தந்த பகுதி மக்கள் என்ன நினைக்கிறார்களோ, அதனை நிறைவேற்றுவது அரசின் கடமை என பேசி இருந்தார். இந்த நிலையில் பாஜக ஊடக பிரிவு தலைவர் ஏ.என்.எஸ்.பிரசாத் தமிழகத்தை இரண்டாக பிரிப்பது பாஜகவின் நிலைப்பாடு இல்லை என விளக்கம் அளித்துள்ளார்.