Kiruthiga Udhayanidhi: செய்திதான் போலி.. போட்டோவாச்சும் நல்லா வைங்க.. ட்வீட் போட்ட கிருத்திகா.. அமைச்சர் உதயநிதி ரீ ட்வீட்..
M/S உதயநிதி அறக்கட்டளை என அமலாக்கத்துறை பதிவிட்டு இருந்ததால் அது உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா உதயநிதி ஸ்டாலினின் சொத்துகள் என செய்திகள் பரவியது.
உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளையை சார்ந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை முடக்கியதாக இன்று அமலாக்கத்துறை தெரிவித்தது. அதன்படி, அறக்கட்டளைக்கு சொந்தமான 36.3 கோடி ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துகளும், வங்கிக் கணக்கில் இருந்த 34.7 லட்சமும் முடக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது
இதுதொடர்பாக அமலாக்கத்துறை தனது ட்விட்டர் பக்கத்தில், “25/5/2023 அன்று தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை தற்காலிகமாக பறிமுதல் செய்துள்ளது. M/S உதயநிதி அறக்கட்டளைக்கு சொந்தமான ரூ. 36.3 கோடி மதிப்பிலான அசையா சொத்துகள் மற்றும் அதுதொடர்பான வங்கிக் கணக்கில் இருந்த ரூ.34.7 லட்சமும் முடக்கப்பட்டுள்ளது. கல்லல் க்ரூப் உள்ளிட்ட நிறுவனங்கள் மீதான வழக்குகள் தொடர்பாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என பதிவிடப்பட்டு இருந்தது.
அறக்கட்டளை பங்குதாரர்கள் யார்?
M/s உதயநிதி அறக்கட்டளையில், பங்குதாரர்கள் யார்? உறுப்பினர்கள் யார்? என்பதைக் குறித்து எந்த விவரத்தையும் அமலாக்கத்துறை வெளியிடவில்லை.
முன்னதாக, M/S உதயநிதி அறக்கட்டளை என அமலாக்கத்துறை பதிவிட்டு இருந்ததால் அது உதயநிதி ஸ்டாலின் மனைவி கிருத்திகா உதயநிதி ஸ்டாலினின் சொத்துகள் என பல்வேறு ஊடகங்கள் தவறாக புரிந்துகொண்டு செய்திகளை வெளியிட்டது.
— Udhay (@Udhaystalin) May 27, 2023
இந்த நிலையில், இதுகுறித்து கிருத்திகா உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில், “என்னைப் பற்றி போலிச் செய்திகளைப் பரப்புவோருக்கு ஒரு வேண்டுகோள்... குறைந்தபட்சம் எனது ஒரு நல்ல புகைப்படத்தையாவது பயன்படுத்துங்கள்.” என வேடிக்கையாக பதிவிட்டு இருந்தார்.
தொடர்ந்து இந்த ட்வீட்டை ரீ-ட்வீட் செய்த உதயநிதி ஸ்டாலின், வயிறு வலிக்க சிரிக்கும்படியான ஒரு எமோஜியை பதிவிட்டு இருந்தார். இதை பார்த்த பலரும் இந்த பதிவை ரீ-ட்வீட் செய்து வருகின்றனர்.