Kilambakkam New Bus Stand: “இனி ஊருக்கு சீக்கிரம் போகலாம்” .. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறப்பு குறித்து வெளியானது அறிவிப்பு..!
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டு கட்டப்பட்டுள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் ஜூன் மாதம் திறக்கப்படும் என அமைச்சர் சேகர் பாபு சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டு கட்டப்பட்டுள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் ஜூன் மாதம் திறக்கப்படும் என அமைச்சர் சேகர் பாபு சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையமாக கோயம்பேடு பேருந்து முனையம் செயல்பட்டு வருகிறது. உள்ளூர், வெளியூர் பேருந்துகள் வந்து செல்லும் இந்த பேருந்து நிலையத்தில் நாள்தோறும் 2 லட்சம் பயணிகளை வந்து செல்கின்றனர். நாளொன்றுக்கு 2000 பேருந்துகள் இங்கிருந்து இயக்கப்பட்டு வருகிறது. இதனால் 24 மணி நேரமும் கோயம்பேடு பேருந்து நிலையம் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழியும்.
இதனிடையே பொங்கல், தீபாவளி மற்றும் தொடர் விடுமுறை நாட்கள் வந்தால் கோயம்பேடு மக்கள் கூட்டத்தால் திணறும். இதனால் அரசு மக்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகளை அறிவிக்கும் பட்சத்தில் கே.கே.நகர், பூந்தமல்லி, தாம்பரம், தாம்பரம் சானடோரியம் ஆகிய இடங்கள் தற்காலிக சிறப்பு பேருந்து நிலையமாக செயல்பட்டு ஒவ்வொரு மண்டலங்களுக்கு ஏற்ப பேருந்துகள் புறப்பட்டு செல்ல வழி வகை செய்யப்படும்.
அதேசமயம் இப்படியான நாட்களில் வழக்கத்தை விட சென்னை போக்குவரத்து நெரிசலால் திணறும். இதனை குறைக்கும் பொருட்டு, செங்கல்பட்டு மாவட்டம் சென்னை புறநகர் பகுதியான வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் ஒரே இடத்தில் அரசு, தனியார் பேருந்துகளையும் இயக்கும் வசதிகளுடன் புதிய பேருந்து முனையம் அமைக்கப்பட்டு வந்தது.
இந்த பேருந்து நிலையத்திற்கு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டிய நிலையில், 2021ஆம் ஆண்டில் பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டது. ஆனால் நிலம் கையகப்படுத்துதல், கொரோனா பெருந்தொற்று, ஊழியர்கள் பற்றாக்குறை, கட்டுமானப் பணிகளில் தாமதம் என பல்வேறு காரணங்களால் ஆட்சி மாற்றம் நிகழ்ந்த பின்னரும் இப்பேருந்து நிலையப் பணிகள் நிறைவடையாமல் இருந்தது.
393.74 கோடி மதிப்பீட்டில் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய வகையில் பணிகள் நிறைவடைந்துள்ள இந்த பேருந்து நிலையம் கடந்த பிப்ரவரி மாதம் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் முழுமையாக பணிகள் முடியாத காரணத்தால் திறக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் வரும் ஜூன் மாதம் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
இந்த பேருந்து நிலையத்திற்கு கருணாநிதி நூற்றாண்டு பேருந்து முனையம் என பெயரிடப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த புதிய பேருந்து நிலையத்தில் இருந்து திருச்சி, மதுரை, கன்னியாகுமரி, கோயம்புத்தூர், சேலம் போன்ற இடங்களுக்குச் பேருந்துகள் இயக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. அதேசமயம் இந்த பேருந்து நிலையத்தை இணைக்கும் வகையில் மெட்ரோ ரயில் சேவையும் அமைக்கப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: ABP Nadu Exclusive: கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் என்னதான் உள்ளது ? - ஹேப்பி நியூஸ் உள்ளே?