Jack Russell Terrier Dog: கரூரில் இருந்து Jack Russell Terrier நாய்களை வாங்கிச் சென்ற கேரள போலீஸ் - காரணம் என்ன..?
உக்ரைன் போரில் இந்த வகையான நாய்கள் வெடி குண்டுகளை கண்டு பிடிக்க உதவியதாகவும், அதனால் இதனை தேடி கேரள போலீசார் வந்துள்ளனர்.
இந்தியாவிலேயே முதன்முறையாக கேரள காவல்துறையில் Jack Russell Terrier நாய்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த அரியவகை நாய்கள் நான்கை கரூரில் இருந்து கேரள காவல்துறையினர் வாங்கிச் சென்றனர்.
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட எல்.ஜி.பி நகர் பகுதியில் வசிப்பவர் சரவணன். நாய்கள் வளர்ப்பிலும், அதற்கு பயிற்சி கொடுப்பதிலும் ஆர்வம் கொண்டவர். தமிழகத்தில் எங்கு நாய்கள் கண்காட்சி நடந்தாலும் ஆர்வமுடன் பங்கு பெற்று பரிசுகளை வென்று வருகிறார். கடந்த 20 ஆண்டுகளாக நாய்களை வளர்த்தும், அதற்கு பயிற்சிகள் அளித்தும், விற்பனை செய்தும் வருகிறார். அதற்கென தனியாக வெப்சைட் மற்றும் சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்து வருகிறார்.
கடந்த 10 ஆண்டுகளாக Jack Russell Terrier வகை நாய்களை ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்து அவற்றை பராமரித்தும், விற்பனை செய்தும் வருகிறார். இந்நிலையில், கடந்த 2 நாட்களாக கேரளாவில் இருந்து வந்த காவல் துறை அதிகாரிகள் குழுவினர் கரூரில் முகாமிட்டிருந்தனர். இன்று காலை அவரை தேடி வந்த கேரள போலீஸ் அதிகாரிகள் குழுவினர் சரவணனின் வளர்ப்பு நாய்களை பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளனர். அதில், டாக்டர், வெடிகுண்டு நிபுணர் ஆகியோர் சான்றிதழ், ஊசி போடப்பட்டுள்ள விபரங்களை கேட்டறிந்த அவர்கள் இதில் 2 ஆண் குட்டி நாய்களையும், 2 பெண் குட்டி நாய்களையும் வாங்கிச் சென்றுள்ளனர்.
இந்தியாவிலேயே முதன்முறையாக கேரள போலீஸ் தான் இந்த வகையான நாய்களை காவல் துறையில் பயன்படுத்த வாங்கியுள்ளனர். இதனை கேரள போலீசார் சமூக ஊடகத்தில் பகிர்ந்துள்ளனர். இது தொடர்பாக சரவணன் பேசும் போது, Jack Russell Terrier நாய்களை கடந்த 10 ஆண்டுகளாக வளர்த்து வருவதாகவும், உக்ரைன் போரில் இந்த வகையான நாய்கள் வெடி குண்டுகளை கண்டு பிடிக்க உதவியதாகவும், அதனால் இதனை தேடி கேரள போலீசார் வந்துள்ளனர். இதனை பராமரிப்பது எளிது என்றும், உயரம் 13 அங்குளம் வரை உயரம் வளரும் என்றும், 10 கிலோ வரை எடை இருக்கும், அறிவு மிகுந்ததாகவும், எளிதாக நம்மிடம் பழகி விடும் எனவும் தெரிவித்தார்.