"நான் இனி வரமாட்டேன், நீ உன் குடும்பத்துடன் போய் இரு"- கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி இளம் பெண் தர்ணா
அக்கா வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற கார்த்தி வீடு திரும்பவில்லை. செல்போனில் பேச மறுத்த அவர், "நான் இனி வரமாட்டேன், நீ உன் குடும்பத்துடன் போய் இரு" என்று குறுஞ்செய்தி அனுப்பி உள்ளார்.
கரூரில் காதல் திருமணம் செய்து கொண்டு, பிரிந்து சென்ற கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி இளம் பெண் மகளிர் காவல் நிலையம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கரூர் அடுத்த வாங்கல் குப்புச்சிபாளையம், ஓடையூர் கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவரும் நாமக்கல் மாவட்டம், ஓலப்பாளையம் பகுதியை சேர்ந்த ரோசி என்பவரும் கரூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த பொழுது, ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த ஜனவரி 7ஆம் தேதி இருவரும் நண்பர்கள் உதவியுடன் காதல் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் பிப்ரவரி 7ஆம் தேதி கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதுகாப்பு வேண்டி புகார் மனு அளித்தனர். அதன் பேரில் பெற்றோர் மற்றும் உறவினர்களை அழைத்து சமரசம் செய்து வைத்துள்ளனர். அதில் கணவரின் பெற்றோருக்கு உடன்பாடு ஏற்படவில்லை.
இந்நிலையில் கோவை பி.என் புதூர் பெருமாள் கோயில் பகுதியில் இருவரும் வசித்து வந்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் 10-ஆம் தேதி திருச்சியில் உள்ள அக்கா வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற கார்த்தி வீடு திரும்பவில்லை. செல்போனில் பேச மறுத்த அவர், "நான் இனி வரமாட்டேன், நீ உன் குடும்பத்துடன் போய் இரு" என்று வாட்ஸ் அப் மூலம் குறுஞ்செய்தி அனுப்பி உள்ளார்.
இதனால் சந்தேகம் அடைந்து விசாரித்த போது, வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்து வைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக தகவல் அறிந்து, இன்று கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி ரோசி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
மேலும், கணவருடன் சேர்ந்து வாழ இடையூறாக இருக்கும் கார்த்தியின் உறவினர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனு அளித்துள்ளார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.