கரூரில் கோயிலுக்குள் அனுமதிக்கப்படாத பட்டியல் இன இளைஞர் - கோயிலுக்கு பூட்டு போட்ட அதிகாரிகள் - நடந்தது என்ன..?
இந்த சம்பவம் காரணமாக காளியம்மன் கோவில் தற்காலிகமாக இழுத்து பூட்டப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டம் கடவூர் அருகே வீரணம்பட்டியில் உள்ள காளியம்மன் கோவில் திருவிழாவில் பட்டியல் இன சமூக இளைஞரை கோவிலுக்குள் அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், ஏற்பட்ட பிரச்சனையை தொடர்ந்து தற்காலிகமாக கோவிலை அதிகாரிகள் இழுத்துப் பூட்டியுள்ளனர்.
கரூர் மாவட்டம், கடவூர் அருகே வீரணம்பட்டியில் காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் வைகாசி திருவிழா தற்போது நடைபெற்று வருகிறது. கோவிலைச் சுற்றியுள்ள 8 ஊர் கிராமங்களை சேர்ந்த மக்கள் கொண்டாடும் திருவிழாவில், கோவில் அமைந்திருக்கும் உள்ளூர் வீரணம்பட்டியில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த 80 குடும்பத்தினர் சிறுபான்மையினராக வசித்து வருகின்றனர். பெரும்பான்மையாக வாழும் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த மக்கள் 200 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
அப்பகுதியில் தொடர்ச்சியாக சாதிய பிரச்சனைகள் இருந்து கொண்டே இருக்கிறது. பட்டியல் இன சமூகத்தினர் கோவிலுக்குள் நுழைவதை அனுமதிப்பதில்லை. திருவிழாவில் அந்த கோவிலுக்குள் சென்ற பட்டியல் இன இளைஞரை கோவிலுக்குள் வரக்கூடாது என்று தடுத்து வெளியே தள்ளியிருக்கிறார்கள் என்றும், சாமி கும்பிட்டு விட்டு திருநீர் கேட்ட போதும் கொடுக்க மறுத்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தை அடுத்து இரு பிரிவினருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த கடவூர் வட்டாட்சியர் முனிராஜ், கரூர் மாவட்ட ஏடிஸ்பி மோகன், குளித்தலை டிஸ்பி ஸ்ரீதர் தலைமையில் அதிகாரிகள் அங்கு சென்று இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது குறிப்பிட்ட அந்த சமூகத்தினர் பட்டியல் இன மக்களை கோவிலுக்குள் வழிபாடு செய்ய அனுமதிக்க மாட்டோம் என்றும் கூறியுள்ளனர். இதனைத்தொடர்ந்து, கோவில் திருவிழாவை நிறுத்தி கோவிலை பூட்டுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அப்போது குறிப்பிட்ட அந்த சமூகத்தினர் கோவிலை பூட்டக்கூடாது எனவும், கோவிலுக்குள் தங்களை அனுமதிக்க வேண்டும் என பட்டியலின மக்களும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை அடுத்து இரு தரப்பினரிடமும் பேசிய அதிகாரிகள் இப் பிரச்சனையை சுமூகமாக பேசி தீர்த்துக் கொள்ளலாம் எனவும், அதுவரை கோவிலை தற்காலிகமாக பூட்டுவதாகவும் கூறி கோவில் திருவிழாவை நிறுத்தி கோவிலுக்கு பூட்டு போட்டனர்.
இந்த சம்பவம் காரணமாக காளியம்மன் கோவில் தற்காலிகமாக இழுத்து பூட்டப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து அதிகாரிகள் இரு தரப்பினருடையே பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்