கரூர் சோகம்! கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்டால் என்ன செய்யணும்? கூடாது? உயிர் காக்கும் வழிமுறைகள்!
ஒரு சதுர மீட்டருக்கு ஐந்து நபர்கள் வரை நின்றால் அது ஆபத்தான கூட்டமாக மாற வாய்ப்பு உள்ளது. எனவே உடனே கூட்ட நெரிசல் குறைவாக இடம் நோக்கி நகர்ந்து விட வேண்டும்.

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள், முதியோர் உட்பட 41 பேர் இறந்திருப்பதுடன் இன்னும் பலர் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் உள்ளனர். இந்த நிலையில் கூட்ட நெரிசலில் உயிர் காக்கும் வழிமுறைகள் & தவிர்க்க வேண்டியவை குறித்து மருத்துவர் ஃபரூக் அப்துல்லா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவு:
’’அரசியல் கட்சிக் கூட்டங்கள் தொடங்கி பெரிய திருமண வைபவங்கள், இசைக் கச்சேரிகள், சினிமாக்களின் முதல் நாள் ரசிகர் ஷோக்கள், கிரிக்கெட் வெற்றி விழாக் கொண்டாட்டங்கள், விமான சாகச ஷோக்கள் என்று மக்கள் கூட்டமாக கூடுவது என்பது வாடிக்கையாகி விட்டது.
நமது நாட்டைப் பொருத்தவரை நமது பலம் மற்றும் பலகீனம் இரண்டுமே நமது மக்கள் தொகை என்பேன். எப்போதும் நமது மற்றும் நம்மைச் சார்ந்தோரின் உயிர் பாதுகாப்பு அதிமுக்கியம் எனும் போது முதியோர், குழந்தைகளை இது போன்ற நிகழ்வுகளுக்கு அழைத்துச் செல்லவே கூடாது.
இந்தியாவின் எந்த நகரங்களிலும் நடக்கும் மக்கள் பெருந்திரளாகக் கூடும் நிகழ்வுகள் அனைத்துக்கும் இது பொருந்தும். இங்கு கூட்ட நெரிசல் என்பது தவிர்க்க இயலாதது.
இன்னும் கூட்டம் கட்டுப்பாட்டை மீறும் போது இது போன்ற துன்ப நிகழ்வுகள் நடக்க அனைத்து வாய்ப்புகளும் எல்லா இடங்களுக்கும் பொதுவாகவே உள்ளது.
கூட்ட நெரிசலில் சிக்கிக் கொண்டால் என்ன செய்ய வேண்டும்?
முதலில் நாம் அங்கம் வகிக்கும் கூட்டம் நெரிசலுக்கு உள்ளாகிறது என்பதை அறிய வேண்டும்.
நீங்கள் நிற்கும் இடத்தைச் சுற்றி நிற்பவர்கள் உங்களைத் தொடாமல் நிற்கிறார்கள் என்றால் ஒரு சதுர மீட்டருக்கு மூன்று பேர் என்ற நிலையில் இருக்கிறீர்கள். அது ஆரோக்கியமான கூட்டம்.
அதுவே சுற்றி நிற்பவர்கள் அவ்வப்போது உங்களை மோதுகிறார்கள் என்றால் ஒரு சதுர மீட்டருக்கு ஐந்து நபர்கள் வரை நிற்கிறீர்கள் என்று அர்த்தம். இது ஆபத்தான கூட்டமாக மாற வாய்ப்பு உள்ளது. எனவே உடனே கூட்ட நெரிசல் குறைவாக இடம் நோக்கி நகர்ந்து விட வேண்டும்.
உங்களால் ஒரு கூட்டத்தில் குனிந்து கால்களைத் தொட முடியவில்லை என்றால் அந்த கூட்டம் - நெருக்கடி நிலையை எட்ட உள்ளது என்று பொருள்.
இப்படி ஒரு கூட்டத்தில் நீங்கள் சிக்கிக் கொண்டால் எப்படி வெளியேறுவது?
உங்களுக்கு மிக அருகில் கூட்டம் செல்லும் திசை அன்றி பக்கவாட்டில் ஏதேனும் மேடான பகுதி / கார் / மரம் உள்ளிட்ட இடங்கள் இருப்பின் அதை நோக்கி மூலைவிட்டமாக (Diagonal direction) நகர்ந்து செல்லவேண்டும்.
இவ்வாறு செல்லும்போது கைகளை பாக்சிங் செய்வது போல நெஞ்சுக்கு முன்னால் பாதுகாப்பு தருவது போல வைத்துக் கொண்டு நகர வேண்டும்.
கூட்ட நெரிசல் ஏற்படும்போது அதுவும் நீரின் ஓட்டம் போல அலை அலையாகச் செயல்படும். எனவே நீரின் ஓட்டத்தோடு செல்லக் கூடாது. நீரை எதிர்த்தும் செல்லக் கூடாது. அதே சமயம், இந்த மக்கள் கூட்டம் எனும் நீர் ஓட்டத்துக்கு மூலை விட்டமாகச் செல்ல வேண்டும். இதன் மூலம் எளிதில் கூட்டத்தை விட்டு வெளியேற வாய்ப்பு கிடைக்கும்.
மனக்கணக்கு அவசியம்
ஒரு கூட்டத்தில் பங்கெடுக்கும் போதே அங்குள்ள பல வெளியேறும் பாதைகள் , இரண்டு கட்டிடங்களுக்கு இடையில் இருக்கும் இடைவெளி, கதவுகள் மற்றும் திடீரென நெருக்கடி ஏற்பட்டால் எதன் மீது ஏறி தப்பிக்க வேண்டும். முதலில் எந்தப் பாதை நோக்கி ஓட வேண்டும் என்றெல்லாம் மனக்கணக்கு முன்னாடியே போட்டுக் கொள்ள வேண்டும்.
பெரிய கூட்டமே மந்தை மனப்பான்மையில் ஒரு குறிப்பிட்ட பாதையில் முண்டி அடித்துக்கொண்டிருக்கும். ஆனால் பல மாற்றுப் பாதைகள் ஆள் இல்லாமல் அல்லது குறைவாக இருக்கும். எனவே நமது முன்கூட்டிய மனக்கணக்குகள் நம்மைக் காக்கக் கூடும்.
எப்பவும் நாம் நகரும் திசையில் நம்மைத் தடுக்கும் சுவர் , தூண்கள் ஏதேனும் இருந்தால் அவற்றை விட்டு விலகி இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும் இவ்வாறு அசையாத, அசையமுடியாத இடத்தில் சிக்கிக் கொண்டால் நமது நெஞ்சுப் பகுதி சுற்றி இருக்கும் கூட்டத்தால் நெரிக்கப்பட்டு மூச்சு விட இயலாமல் இறக்கும் வாய்ப்பு அதிகம்.
எப்போதும் நமது கால்கள் தரையில் இருக்குமாறு ஊர்ந்து செல்ல வேண்டும்.
முடிந்த வரை கீழே விழாமல் இருக்க முயற்சி செய்ய வேண்டும்.
மீறி கீழே விழுந்தால் அடுக்கி வைத்த"டோமினோ"க்கள் ஒன்று மேல் ஒன்று விழுவது போல மக்கள் நம் மேல் விழும் வாய்ப்பு உண்டு
அவ்வாறு கீழே விழுந்து விட்டால் கருவுக்குள் சிசு எப்படி சுருண்டு படுத்துக் கொள்ளுமோ அது போல தலையை உள்நோக்கி வைத்து மடங்கி சுருண்டு படுத்துக் கொள்ள வேண்டும். இது நமது தலை மற்றும் நெஞ்சுப்பகுதியைக் காக்கும். கூட்டம் சற்று விலகியவுடன் மீண்டும் எழுந்து நடக்க ஆரம்பிக்க வேண்டும்.
இது போன்ற கூட்ட நெரிசலில் சிக்கியவர்கள் பத்து நொடிகளுக்கு மேல் மூச்சு விடாமலோ நாடித் துடிப்பு இல்லாமல் இருந்தால் உடனே சிபிஆர் ( இதயத்துடிப்பு மற்றும் மூச்சை மீட்டல்) முதலுதவியை ஆரம்பிக்க வேண்டும்.
எமனாகும் மூச்சுத் திணறல்
இத்தகைய கூட்ட நெரிசல் மரணங்களில் தலையாய காரணமாக இருப்பது "மூச்சுத் திணறல்" (SUFFOCATION).
எனவே மூச்சு நாடி நின்று நான்கு நிமிடங்களுக்குள் சிபிஆர் ஆரம்பிக்கப்பட வேண்டும். இயன்ற அளவு கூட்ட நெரிசல் ஏற்படும் என்று சந்தேகிக்கப்படும் கூட்டங்களில் பங்கேற்காமல் இருப்பது நல்லது.
குழந்தைகள், பெண்கள், முதியோர்கள் கண்டிப்பாக கூட்ட நெரிசல் ஜன நெருக்கடி அதிகம் உள்ள கூட்டங்களில் பங்கேற்பதை தவிர்க்க வேண்டும்’’.
இவ்வாறு மருத்துவர் ஃபரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.






















