கரூரில் மாநில அளவிலான செஸ் போட்டி: அடிப்படை வசதி இல்லை - பெற்றோர்கள் குற்றச்சாட்டு
போட்டியில் பங்கேற்பதற்காக நுழைவு கட்டணமாக சில லட்சங்களை வசூல் செய்து விட்டு போதிய அடிப்படை வசதிகளை செய்து தரவில்லை என பெற்றோர்கள் குற்றம் சாட்டினர்.
கரூரில் நடைபெற்ற மாநில அளவிலான செஸ் போட்டியில் அடிப்படை வசதிகளை செய்து தரவில்லை என பெற்றோர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.
கரூர் அடுத்த ஈரோடு சாலையில் அமைந்துள்ள கரூர் பாலிடெக்னிக் கல்லூரியில் (தனியார்) சிறுவர் மற்றும் பெரியவர்களுக்கான மாநில அளவிலான செஸ் போட்டி நடைபெற்றது. கரூரை சேர்ந்த ஸ்மார்ட் செஸ் அகாடமியின் ஒருங்கிணைப்பில் பயிற்சியாளர் மணிகண்டன் தலைமையில் சுமார் 20 ஆர்பிட்டர்கள் போட்டியை கண்காணித்தனர். அந்த செஸ் போட்டியில் 9 வயது, 11 வயது, 13 வயது, 15 வயதுடைய ஆண்கள் மற்றும் பெண்கள் எனவும் அதற்கும் மேற்பட்ட வயதுடையவர்கள் என 9 பிரிவுகளாக போட்டி நடைபெற்றது. இதில் கரூர் மாவட்டம் மட்டுமல்லாமல் திருச்சி, சேலம், கோவை, சென்னை உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 700-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
போட்டியில் பங்கேற்கும் போட்டியாளர்களுக்கு நுழைவு கட்டணமாக 400 ரூபாயும் அரசு பள்ளி மாணவர்களுக்கு 300 ரூபாயும் மேலும் அகாடமி கட்டணமாக 150 ரூபாய் கரூர் மாவட்ட செஸ் அகாடமி நுழைவு கட்டணமாக கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டும் 75 ரூபாயும் என வசூலிக்கப்பட்டது. போட்டியில் பங்கேற்று வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுக்கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது.
இந்த நிலையில் போட்டியில் பங்கேற்பதற்காக நுழைவு கட்டணமாக சில லட்சங்களை வசூல் செய்து விட்டு போதிய அடிப்படை வசதிகளை செய்து தரவில்லை என பெற்றோர்கள் குற்றம் சாட்டினர். குறிப்பாக கல்லூரியில் உள்ள அறையின் கதவுகளை பூட்டி வைத்து விட்டு பெற்றோரும், மாணவர்களும் வெளியே தரையில் அமர வைக்கப்பட்டனர். போதிய இருக்கைகள் போடப்படாததால் சிலர் வளாகத்திற்கு வெளியே தரையில் அமர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. நுழைவு கட்டணமாக தலா ஒருவருக்கு 500 ரூபாய்க்கு மேல் வசூல் செய்து விட்டு சிற்றுண்டியும் வழங்கவில்லை, குடிநீர் வசதியும் முறையாக செய்து தரவில்லை என குற்றம் சாட்டினர்.