கரூரில் சாலையில் சரிந்த 30 அடி உயர வாகை மரம் - போக்குவரத்து மாற்றம்
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தாந்தோணிமலை அரசு கலைக்கல்லூரி வளாகத்திற்குள் சுற்றுச்சுவரை ஒட்டி அமைந்துள்ள சுமார் 20 வருடம் பழமையான பிரம்மாண்ட வாகை மரம் ஒன்று அடிப்பகுதியில் பட்டுப்போய் உள்ளது.
கரூரில் கனமழையின் காரணமாக அடிப்பகுதியில் பட்டுப்போன சுமார் 30 அடி உயர வாகை மரம் சாலையில் சரிந்ததால் போக்குவரத்து மாற்றிவிடப்பட்டது.
கரூர் மாநகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக கனமழை பெய்தது. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தாந்தோணிமலை அரசு கலைக்கல்லூரி வளாகத்திற்குள் சுற்றுச்சுவரை ஒட்டி அமைந்துள்ள சுமார் 20 வருடம் பழமையான பிரம்மாண்ட வாகை மரம் ஒன்று அடிப்பகுதியில் பட்டுப்போய் உள்ளது. குறிப்பாக மூன்று பிரிவுகளாக செல்லும் இந்த வாகை மரத்தின் அடிப்பகுதி பட்டு போய் உள்ளதால், சுற்றுச்சுவரை ஒட்டியுள்ள ஒரு பகுதி மட்டும் பெய்த மழையின் காரணமாக சரிந்து சாலையில் விழுந்துள்ளது.
சுமார் 30 அடி உயரம் கொண்ட மரத்தின் ஒரு பகுதி சாலையில் சரிந்து விழுந்துள்ளதால், அரசு கலைக்கல்லூரி வழியாக பொன் நகர் வரை செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இரு சக்கர வாகனங்கள் மட்டும் அருகில் அமைந்துள்ள மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளது. அதே நேரம் பெரிய கனரக வாகனங்கள் மற்றும் பேருந்துகள் சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரம் சுற்றிவரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சாலையில் மரம் சரிந்து விழுந்தது பற்றி கிடைத்த தகவலின் பெயரில், மாநகராட்சி ஊழியர்கள் மரத்தின் கிளைகளை வெட்டி அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
கரூர் மாநகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய பெய்த பரவலான மழையின் காரணமாக வெப்பம் தணிந்து, குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
வளிமண்டல கீழடுக்கு சுழற்றி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. கரூர் மாநகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மிதமான மழை மற்றும் கனமழை பெய்தது. குறிப்பாக கரூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகளவு இருந்தது.
100 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு மேல் சூரியன் சுட்டெரித்த நிலையில், கரூர் மாநகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான புலியூர், உப்பிடமங்கலம், வெள்ளியணை, மண்மங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்தது. இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. மழையின் காரணமாக வெப்பம் தணிந்து, குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.