கல்வராயன்மலை: ஆரம்ப சுகாதார நிலையத்தில் தாய், சேய் உயிரிழப்பு - உறவினர்கள் போராட்டம்
பிறந்த குழந்தை எவ்வித அசைவும் இன்றி இருந்ததால் இறந்து பிறந்தது என்று சந்தேகத்தின் அடிப்படையில் முதலுதவி சிகிச்சை அளித்துள்ளனர்.
கல்வராயன்மலையில் உள்ள சேராப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண் மற்றும் பச்சிளம் குழந்தை உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் உள்ள ஆலனூர் கிராமத்தைச் சேர்ந்த பாக்கியராஜ் மனைவி மல்லிகா. நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு நேற்று மதியம் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அதையனையடுத்து மல்லிகாவை பிரசவத்திற்காக சேரப்பட்டில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அவரது உறவினர்கள் சிகிச்சைக்காக அனுமதித்தனர். நேற்று இரவு 8:30 மணி அளவில் அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
பிறந்த குழந்தை எவ்வித அசைவும் இன்றி இருந்ததால் இறந்து பிறந்தது என்று சந்தேகத்தின் அடிப்படையில் முதலுதவி சிகிச்சை அளித்துள்ளனர். அப்போது குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. குழந்தைக்கு மேல் சிகிச்சை அளிப்பதற்காக ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், ஒரு மணி நேரமாகியும் ஆம்புலன்ஸ் வராததால் குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இந்நிலையில் கருவிலேயே தொப்புள் கொடி அறுந்து விட்டதால் மல்லிகாவிற்கு தையல் போட்டு சிகிச்சையளிக்கப்பட்டது.
இந்த சிகிச்சையின் போது தொடர்ந்து ரத்தக்கசிவு ஏற்பட்டு ரத்தம் நிற்காமல் வெளியேறியதால் மயக்கம் அடைந்த தாய் மல்லிகாவும் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தாயும், சேயும் உயிரிழந்த சம்பவத்தை கேட்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் முறையான மருத்துவர்கள் இல்லாமலும், செவிலியர்கள் சிகிச்சை அளிக்கப்படாததுமே இந்த உயிரிழப்பிற்கு காரணம் என குற்றம் சாட்டினர். அத்துடன் மருத்துவர் இல்லாமலேயே செவிலியர்கள் தொலைபேசியில் மருத்துவரிடம் தொடர்பு கொண்டு சிகிச்சை அளித்ததாகவும் கூறி மருத்துவமனையை முற்றுகையிட்டும், சாலை மறியல் ஈடுபட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தாயும், சேயும் இறந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
என்ன செய்ய வேண்டும்?
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்