கரூர் : மருத்துவக் கல்லூரிக்கு 24 மணிநேரமும் தங்கு தடையின்றி மின்சாரம் - அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கிவைப்பு
புதிய உயர் அழுத்த மின் பாதை அமைத்து தடையில்லா மும்முனை மின்சாரம் 24 மணிநேரம் கரூர் மருத்துவக் கல்லூரிக்கு கிடைக்கும் வகையில் துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார்.
நாடு முழுவதும் இரண்டாவது கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் தமிழகத்தில் முழு ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் நகராட்சி நிர்வாகம் இணைந்து கரூர் மாவட்டத்தில் நோய் தொற்று இல்லாத முதல் மாவட்டமாக உருவாக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் இதன் ஒரு பகுதியாக மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் தங்கு தடையின்றி மின்சாரம் வழங்க வேண்டும் என்ற உயரிய எண்ணத்தில் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் ஆலோசனைப்படி இன்று புதிதாக உயர்மின் அழுத்த பாதையை உருவாக்கி தங்குதடையின்றி மருத்துவமனைகளுக்கு மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுவரை கரூர் பாலம்மாபுரத்தில் உள்ள துணை மின் நிலையத்தில் இருந்து கரூர் அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரிக்கும் மற்றும் நுகர்வோர்களுக்கும் மின்னிணைப்பு வழங்கப்பட்டதால் அடிக்கடி பல பகுதியிலிருந்து வரும் மின்சாரம் மின் தடை ஏற்பட்டது. மின்தடை ஏற்படுவதால், அரசு மருத்துவமனையில் ஜெனரேட்டர் வசதிகளை பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வெள்ளாளப்பட்டி துணை மின்நிலையத்தில் 1.5 கோடி செலவில் புதிய உயர் அழுத்த மின் பாதை சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்கு செல்லும் வகையில் அமைத்து, தடையில்லா மும்முனை மின்சாரம் 24 மணிநேரமும் கரூர் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு கிடைக்கும் வகையில், துணை மின் நிலையத்தில் இருந்து கரூர் மாவட்ட ஆட்சியர் பிரசாத் வடநேரே தலைமையில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார். அதைத்தொடர்ந்து கரூர் மாவட்டத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நேரில் சென்று அமைச்சர் ஆய்வு செய்தார்.
அதைத்தொடர்ந்து கரூர் மாவட்டத்தில் இன்று 27 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வரும் தான்தோன்றிமலை, இனாம் கரூர், வெண்ணைமலை ஆகிய பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேரில் சென்று பொதுமக்களுடன் கொரோனா தடுப்பூசி குறித்து ஆலோசனை மற்றும் ஆய்வுக்குப் பின்னர் அமைச்சர் செய்தியாளர் சந்தித்தார்
.
அப்போது பேசிய தமிழக மின்சாரத்துறை அமைச்சர் வி செந்தில் பாலாஜி தமிழக முதலமைச்சர் உத்தரவுக்கு இணங்க கரூர் மாவட்டத்தில் படிப்படியாக ஆக்சிஜன் வசதியுடன் 1300 படுக்கை வசதி கொண்ட சிகிச்சை மைய பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், அதன் ஒரு பகுதியாக இன்று கூடுதலாக 180 ஆக்ஸிஜன் வசதி கூடிய கொரோனா சிகிச்சை மையம் கூடுதலாக செயல்பட்டு வருவதாக தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செய்தியாளரிடம் தெரிவித்தார். நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மருத்துவக்கல்லூரி முதல்வர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளும், திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.