(Source: ECI/ABP News/ABP Majha)
கரூரில் இன்னும் திறக்கப்படாத காமராஜர் தினசரி மார்க்கெட் - வியாபாரிகள் கவலை
கடந்த மாதம் தற்காலிக கடையை மேயர் கவிதா திறந்து வைத்தார். அப்போது, கடைகள் ஒதுக்கீடு தொடர்பாக வியாபாரிகள் இடையே சலசலப்பு ஏற்பட்டது.
கரூர் காமராஜர் மார்க்கெட் தற்காலிக கடைகள் ஒதுக்கீட்டில், ஆளும் கட்சி, வியாபாரிகள் இடையே மோதல் காரணமாக, கடைகள் மாற்றம் தாமதமாகி வருகிறது. கரூர் மாநகராட்சி காமராஜர் மார்க்கெட் பகுதியில், 6.75 கோடி ரூபாய் மதிப்பில், 174 கடைகள் கொண்ட வணிக வளாகம் கட்டுவதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி மே 17-ல் நடந்தது. இதை அடுத்து, பழைய காமராஜர் தினசரி மார்க்கெட்டில், பழைய கட்டடங்களை அப்புறப்படுத்தி விட்டு, புதிய கட்டிடம் கட்டும் பணி விரைவில் தொடங்க உள்ளது. இதனால், இரட்டை வாய்க்கால் பகுதியில் தற்காலிகமாக கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், ஒரு மாதம் கடந்தும் ஆளும் கட்சியினர், வியாபாரிகள் மோதல் காரணமாக, இன்னும் கடைகள் திறக்கப்படவில்லை.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது, இரட்டை வாய்க்கால் பகுதியில் தற்காலிகமாக அமைய உள்ள மார்க்கெட்டில், 85 கடைகளுக்கு, வாழைக்காய் மண்டிக்கு, 12 கடைகள் என மொத்தம், 97 கடைகளுக்கு, செட் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் தற்காலிக கடையை மேயர் கவிதா திறந்து வைத்தார். அப்போது, கடைகள் ஒதுக்கீடு தொடர்பாக வியாபாரிகள் இடையே சலசலப்பு ஏற்பட்டது.
அதன்பின், இடிக்கப்படும் பழைய காமராஜர் தினசரி மார்க்கெட்டில், 50க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வந்த நிலையில், அவர்கள் 85 கடைகள் வேண்டும் என்று கேட்டனர். அந்த வார்டு கவுன்சிலர், மாநகர செயலாளர் என ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள், எங்களுக்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் கடை ஒதுக்க வேண்டும் என கூறினர். இதனால், ஆளும் கட்சியினர், வியாபாரிகள் இடையே மோதல் ஏற்பட்டது. அதன் பின், மண்டல தலைவர்கள், வியாபாரிகள் சங்க பிரதிநிதிகள், மாநகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், சமூக முடிவு ஏற்பட்டுள்ளதாகவும், விரைவில் தற்காலிக கடைகளுக்கு மாறி விடுவோம் என்று வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.
தற்காலிக கடைகள் ஒரு மாதம் கடந்தும், இன்னும் இலை மார்க்கெட் தவிர மற்ற கடைகள் மாறவில்லை. தற்காலிக கடைகளுக்கு தினமும் தலா, 100 ரூபாய் என வாடகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் கடைகள் மாற்றப்பட்டு இருந்ததால், 2.50 லட்சம் ரூபாய் மாநகராட்சிக்கும் வருமானம் மட்டுமல்லாது, வணிக வளாகம் கட்டுமான பணி தாமதம் இன்றி தொடங்கி இருக்கும். இவ்வாறு அவர் கூறினார். இது குறித்து, மேயர் கவிதா விடம் கேட்டபோது, தற்காலிக கடைகள் ஒதுக்கீட்டில் எந்தவிதமான பிரச்சனையும் இல்லை. பழைய காமராஜர் மார்க்கெட்டில் இயங்கும் கடைகள், இங்கு விரைவில் மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்