‘இன்னுயிர் காப்போம் - நம்மை காக்கும் 48’.....முதல்வருக்கு முதியவர் கண்ணீர் மல்க நன்றி..!
இன்னுயிர் காப்போம் - நம்மை காக்கும் 48 திட்டத்தின் மூலம் சிகிச்சை அளித்து விலை மதிப்பில்லாத மனித உயிர்களை காப்பாற்றிய முதல்வருக்கு கரூர் மாவட்டத்தின் பயனடைந்த மக்கள் நெஞ்சார்ந்த நன்றி .
தமிழ்நாடு முதலமைச்சர் 18.12.2021 அன்று இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48 திட்டத்தினை தொடங்கி வைத்தார். திட்டம் மூலம் *நம்மைக்காக்கும் - 48* சாலை விபத்து ஏற்படுகிறவர்களுக்கு 48 மணி நேரம் கட்டணமில்லா சிகிச்சை அளிக்கும் வகையில் இத்திட்டம் செயல்பட்டு வருகிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் - பொதுமக்கள் சாலை விபத்துகளில் சிக்கி பாதிப்படையும் போது மருத்துவத்துறையில் தங்கமான நேரமாக கருதப்படும் முதல் 48 மணி நேரத்தில் பதட்டமில்லாமல் கையில் பணம் இல்லை, உடனடியாக தொகை தயார் செய்ய முடிவில்லை என்ற நிலையை போக்கும் விதமாக விலை மதிப்பற்ற உயிரிழப்புகளை தடுக்கும் விதமாக உருவாக்கப்பட்ட உன்னதமான திட்டம் தான் இன்னுயிர்க்காப்போம் - நம்மைக் காக்கும் 48 திட்டமாகும். இத்திட்டத்தில் 48 மணி நேரத்திற்கு ஆகும் சிகிச்சைக்கான செலவை அரசே ஏற்கும்.
மாவட்டத்தில் ஒரு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, குளித்தலை, மண்மங்கலம், வேலாயுதம்பாளையம் என 3 அரசு மருத்துவமனைகள், அமராவதி மருத்துவமனை, அப்பல்லோ மருத்துவமனை, ஜி.சி மருத்துவமனை, ஏ.பி.ஜே மருத்துவமனை, நாச்சிமுத்து மருத்துவமனை, ராஜ் ஆர்த்தோ மருத்துவமனை, அபிசேக் மருத்துவமனை ஆகிய 7 தனியார் மருத்துவமனைகள் மொத்தம் 11 மருத்துவமனைகளில் இத்திட்டம் நம் மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது . அந்த வகையில் இன்னுயிர்க் காப்போம் - நம்மைக் காக்கும் 48 திட்டத்தில் இதுவரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் விபத்துகளில் சிக்கி 2649 நபர்கள் சிகிச்சை பெற்று பயனடைந்துள்ளனர். இவர்களுக்கு ரூ.1,46,40,575 மதிப்பிலான சிகிச்சைக்காக செலவை அரசே ஏற்றுள்ளது. ஆபத்தில் உள்ளவர்களுக்கு உதவிகரம் நீட்டும் அரசாக தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது.
இதுகுறித்து சிகிச்சை பெற்று பயன்பெற்ற முருகன் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து கூறியதாவது.
நான் கட்டளை சாலையில் பயணம் செய்து கொண்டிருந்த போது தனியார் வாகனம் மூலம் விபத்து ஏற்பட்டு கரூர் ராஜ் ஆர்த்தோ மருத்துவமனையில் என்னை சிகிச்சைக்காக சேர்த்தார்கள். விபத்து, சிகிச்சை, பணம் என்ற உடன் என் குடும்பத்தார் கலங்கி விட்டனர். இந்த நிலையில் தான் மருத்துவமனை நிர்வாகம் பதட்டப்படாதீர்கள் இன்னுயிர்க் காப்போம்- நம்மைக் காக்கும் 48 திட்டத்தில் ஆகும் 48 மணி நேர செலவை அரசே ஏற்கும் என்றார்கள். பிறகு தான் எனக்கும் என் குடும்பத்தாருக்கும் நம்பிக்கை பிறந்தது. குடும்ப தலைவனான என்னையும் அதன் மூலம் என் குடும்பத்தாரையும் காப்பாற்றிய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.