செந்தில் பாலாஜியின் தம்பி வீட்டில் களமிறங்கிய அமலாக்கத்துறை.. புது பங்களாவில் புகுந்து அதிரடி சோதனை..!
கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் தம்பி அசோக் குமார் கட்டி வரும் பங்களா வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.

கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் தம்பி அசோக் குமார் கட்டி வரும் பங்களா வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.
கரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ராம் நகர் பகுதியில் அமைந்துள்ள அமைச்சர் செந்தில்பாலாஜியின் தம்பி அசோக்குமார் கட்டி வரும் பிரம்மாண்ட பங்களா வீட்டில் இரண்டு வாகனங்களில் வந்த அதிகாரிகள் துப்பாக்கி ஏந்திய மத்திய துணை ராணுவ படை வீரர்கள் பாதுகாப்புடன் சோதனையை தொடங்கியுள்ளனர். இந்த வீட்டில் கடந்த இரண்டு மாதத்துக்கு முன்பு வருமானவரித்துறை அதிகாரிகள் முதன்முறையாக சோதனையை தொடங்கினர். அப்போது கட்டுமான பணி நடைபெறும் சுற்றுச்சுவரின் கதவில் அசோக் குமார் நேரில் ஆஜராக கூறி முதன்முறையாக சம்மன் ஒட்டி இருந்தனர்.
சென்னை அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், தற்போது கரூரில் அமலாக்கத்துறை மீண்டும் சோதனையை தொடங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே கடந்த 3 மற்றும் 4 ஆகிய இரண்டு தேதிகளில் கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உதவியாளர் சங்கர் வீடு மற்றும் அலுவலகம், சின்ன ஆண்டாங்கோவில் பகுதியில் அமைந்துள்ள தனலட்சுமி மார்பிள்ஸ் என்ற டைல்ஸ் ஷோரூம் மற்றும் அதன் உரிமையாளர் பிரகாஷ் என்பவரின் வீடு ஆகிய இடங்களில் சோதனை நடத்திய அதிகாரிகள் முக்கிய ஆவணங்கள் சிலவற்றை கைப்பற்றி எடுத்துச் சென்றனர். தற்போது மீண்டும் அமலாக்கத்துறை சோதனை தொடங்கியுள்ளது.





















