ஊராட்சி கவுன்சிலர்களை மிரட்டி பணிய வைக்க ஆளும் கட்சி முயற்சி - எம்.ஆர்.விஜயபாஸ்கர் குற்றச்சாட்டு
கரூர் மாவட்ட ஊராட்சி துணை தலைவர் தேர்தல் நடக்க உள்ள நிலையில் அதிமுகவை கவுன்சிலர் சிவானந்தத்தை போலீசார் கைது செய்ய முயற்சி. அதிமுக ஊராட்சி கவுன்சிலர்களை மிரட்டி பணிய வைக்க ஆளும் கட்சியினர் முயற்சி
கரூர் மாவட்ட ஊராட்சி துணை தலைவர் தேர்தல் நாளை நடக்க உள்ள நிலையில் அதிமுகவை சேர்ந்த மாவட்ட கவுன்சிலர் சிவானந்தத்தை போலீசார் கைது செய்ய முயற்சி செய்ததாகவும், அதிமுக மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்களை மிரட்டி பணிய வைக்க ஆளும் கட்சியினர் முயல்வதாகவும் அதிமுக முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
கரூர் மாவட்ட கவுன்சிலராக உள்ள சிவானந்தத்தின் உறவினர் பெண்மணி கடந்த ஓராண்டுக்கு முன்னர் சிவானந்தத்தின் மாயனூர் தோட்டத்து கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தார். இதுதொடர்பாக மாயனூர் போலீசார் சந்தேக மரணம் என வழக்கு பதிந்திருந்தனர்.
இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் எனக் கூறி காலை 2 காவல் ஆய்வாளர்கள் தலைமையில் ஏராளமான போலீசார் மாயனூர் உள்ள சிவானந்தத்தின் பெட்ரோல் பங்கில் குவிந்தனர்.
கரூர் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் தேர்தல் நடக்க உள்ள நிலையில் தன்னை போலீசார் கைது செய்ய திட்டமிட்டுள்ளனர் எனக் கூறி சம்மனை வாங்க சிவானந்தம் மறுத்தார். தகவலறிந்த அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் 200 க்கும் மேற்ப்பட்ட அதிமுகவினர் சிவானந்தத்தின் பெட்ரோல் பங்க் முன்பு குவிந்ததால் பரபரப்பு ஏற்ப்பட்டது.
கரூர் மாவட்ட ஊராட்சியில் மொத்தம் உள்ள 12 வார்டு உறுப்பினர்களில் அதிமுகவுக்கு 6 உறுப்பினர்களும், திமுகவுக்கு 6 உறுப்பினர்களும் உள்ளது குறிப்பிடத்தக்கது. இரண்டு மணி நேரம் போராட்டத்திற்கு பின்னர் காவல் துறையினர் நாளை மறுதினம் 9 ஆம் தேதி ஆஜராகும் படி கூறிச் சென்றனர். பின்னர் அதிமுகவினர் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
பின்னர், அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் தேர்தல் நடக்க உள்ள நிலையில், அதிமுக மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்களை மிரட்டி பணிய வைக்க ஆளும் கட்சியினர் முயல்கின்றனர். இரண்டு நாட்களுக்கு முன்னர் வசந்தா என்ற அதிமுக மாவட்ட ஊராட்சி உறுப்பினர் கணவர் பழனிசாமியை பொய் வழக்கில் கைது செய்துள்ளனர்.
இப்போது, மற்றொரு அதிமுக ஊராட்சி உறுப்பினரரான சிவானந்தத்தை கைது செய்ய முயற்சி செய்கின்றனர். கரூர் மாவட்ட காவல் துறை மீது மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிக்க உள்ளோம்” என்றார்.