கரூர் : காத்திருந்த பொதுமக்களிடம் கையெடுத்து கும்பிட்டு மன்னிப்பு கேட்ட மாவட்ட ஆட்சியர்..!
நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்களிடம் கையெடுத்து கும்பிட்டு கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.
கரூர் மாவட்டத்தில் புதிய மாவட்ட ஆட்சித் தலைவராக பிரபுசங்கர் ஐ தலைமைச் செயலாளர் அறிவித்து அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் தனது பதவியை ஏற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபு சங்கர் பதவி ஏற்றவுடன் செய்தியாளரிடம் பேசிய அவர் மாவட்ட மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால் தமிழகத்தில் கொரோனா தொற்று இல்லாத கரூர் மாவட்டத்தை உருவாக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார்.
அதேபோல் தான் ஒரு மருத்துவர் என்ற அடிப்படையில் கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது நோய்த்தொற்று பாதித்தவர்களை நேரில் பேச வேண்டும் என நினைத்து அதற்கான கவச உடைகளை அணிந்து நோய்த்தொற்று பாதிக்கப்பட்ட ஏழாவது மாடியில் இருக்கும் நோயாளிகளும் சென்று நலம் விசாரித்து அவர்களுக்கு சரியான நேரத்தில் அனைத்து உதவிகளும் கிடைக்கிறதா என்று கேட்டறிந்தார். மருத்துவ கல்லூரி டீன் உள்ளிட்ட அதிகாரிகளிடம் ஆக்சிஜன் உற்பத்தி குறித்து கேட்டறிந்தார்.
சிறிது நேர ஓய்வுக்குப் பிறகு, மீண்டும் குளித்தலை அய்யர்மலை பகுதியில் இந்து அறநிலை துறை அமைச்சர் திடீர் ஆய்வு மேற்கொண்டு தகவல் அறிந்தவுடன் உடனே அங்கு சென்று அமைச்சருடன் அங்குள்ள ரோப்கார் அமைக்கும் பணியும் ஆய்வு மேற்கொண்டார். அலுவலகப் பணி மற்றும் அவரை சந்திக்க வரும் அனைவரையும் விரைவாக சந்தித்து வாழ்த்துபெற்று வருகிறார். அதைத் தொடர்ந்து இரண்டாவது நாளாக ஜவஹர் பஜாரில் உள்ள அண்ணாமலை தெரு நியாய விலை கடையில் தமிழக அரசு வழங்கி வரும் 14 பொருட்களுடன் ரூபாய் 2000 தொகை எவ்வாறு வழங்குகின்றனர் என்பதை ஆய்வுசெய்தார்
நியாய விலை கடையில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் காலை 09.30 மணி அளவில் பொதுமக்களுக்கு பொருட்களை வழங்க மாவட்ட ஆட்சித்தலைவர் வருகிறார் என்ற தகவலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் . அதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் 10.10 மணியளவில் நியாய விலை கடையில் வந்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது அதிகாரிகளிடம் தான் பொருட்கள் வழங்க வரவில்லை நியாய விலை கடையில் ஆய்வு மட்டுமே செய்ய வந்துள்ளதாக தகவல் தெரிவித்தார்.
பின்னர் நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்களிடம் தார்மீக மன்னிப்பு கேட்டுக்கொண்டார். நான் கால தாமதமாக வந்ததற்கு அதிகாரிகள் திடீர் என கூறியதால் இத்தகைய காலதாமதம் ஆகிவிட்டது எனக் கூறி கூடியிருந்த மக்களிடம் கையெடுத்து கும்பிட்டு மன்னிப்பு கேட்டுக்கொண்டார். அதைத் தொடர்ந்து பொதுமக்களிடம் கொண்டு தடுப்பூசி போட்டுக் கொண்டீர்களா ஏற்பாடுகள் எவ்வாறு உள்ளது எனவும், தடுப்பூசி கட்டாயம் போட்டுக்கொள்ள வேண்டும் என கூறினார்.
பின்னர் செய்தியாளர் சந்தித்த மாவட்ட ஆட்சித் தலைவர், நியாய விலை கடையில் குறிப்பிட்ட பொருட்கள் எடை குறைவாக வழங்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றன என கேள்வி எழுப்பியதற்கு, பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமத்தை விரிவாக நீக்கி பொருட்கள் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் , அதைத் தொடர்ந்து மற்றொரு கேள்விக்கு சத்துணவில் மாணவர்களுக்கு வழங்கும் முட்டை எண்ணிக்கை 10 இருக்கையில், 8 மட்டுமே தொடர்ந்து வழங்கி வருவதாக செய்தியாளர் தெரிவித்த நிலையில், இதுகுறித்து விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.
அப்பொழுது பிரத்யேகமாக எனது வாட்ஸப் நம்பரை மாவட்ட மக்களுக்கு அளிக்க இருப்பதாகவும், அந்த வாட்ஸ் அப் எண்ணில் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என தெரிவித்தார். அதைத்தொடர்ந்து கரூர் பஜாரில் உள்ள பசுபதீஸ்வரர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. அதில் கடந்த ஒரு வாரமாக சிறுசிறு சிக்கல்களில் இருந்து வந்த நிலையில் தற்போது அதை களையப்பட்டு காத்திருக்கும் பொதுமக்கள் டோக்கன் வழங்கி தடுப்பூசியை போட்டு வருகின்றனர். இந்நிலையில் புதிய மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபு சங்கர் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் பசுபதீஸ்வரர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு தடுப்பூசி போட்டுக்கொள்ள வருகை தரும் பொதுமக்களிடம் கலந்து பேசினார்.
கரூர் நகராட்சிக்குட்பட்ட தான்தோன்றி மலை பகுதியில் தொற்று தொடர்பாக கண்டறியும், பணியாளர்கள் வீடு, வீடாகச் சென்று கணக்கினை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் சந்தித்து ஆய்வு செய்தார். கரூர் நகராட்சி பகுதியில் உள்ள பழைய அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை ஏற்பாடு குறித்தும் வீட்டு வசதி குறித்து நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். கரூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் தடுப்பூசி முகாமையும் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அதன் பிறகு மாவட்ட ஆட்சித்தலைவர் வளாகத்தில் நடைபெற்ற நோய் தடுப்பு குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டத்தையும் மேற்கொண்டார்.
இந்த ஆய்வு கூட்டத்தில் கரூர் நகராட்சி ஆணையர் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் துறை ரீதியான அதிகாரிகள் கலந்து கொண்டு தங்களது ஆலோசனையை வழங்கினார். மக்கள் சிரமமின்றி குழந்தை தடுப்பூசி போட்டுக்கொள்ள சிறப்பான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என ஆய்வு கூட்டத்திற்கு பிறகு மாவட்ட ஆட்சித் தலைவர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
விரைவாக நடவடிக்கைகளை எடுத்துவரும் கரூர் மாவட்ட ஆட்சியருக்கு பொதுமக்கள் பாராட்டை தெரிவித்து வருகின்றனர்.