"கல்வி இருந்தாலே அது ஒரு சிறந்த ஊராக மாறிவிடும்" - கிராம சபை கூட்டத்தில் கரூர் ஆட்சியர் பேச்சு
சுதந்திரம் அடைந்து 77 ஆண்டுகள் ஆகிவிட்டது நாம் மாறுவதற்கான மனநிலையை கொண்டு வர வேண்டும்.
நாட்டின் 77ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர் சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார்.
கரூர் மாவட்டத்தில் உள்ள 157 சுதந்திர தின விழாவை முன்னிட்டு கிராம சபை கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதையொட்டி தான்தோன்றி ஊராட்சி ஒன்றியம் அப்பிப்பாளையம் கிராம ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர் சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார். இக்கிராமசபை கூட்டத்திற்கு அப்பிபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் பிச்சையம்மாள் தலைமை வகித்தார்.
கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, தூய்மையான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்து விவாதித்தல், இணையவழி மனைப்பிரிவு மற்றும் கட்டட அனுமதி வழங்குதல், அயோடின் கலந்த உப்பை பயன்படுத்துதல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், ஜல் ஜீவன் இயக்கம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), பிரதம மந்திரி ஊரகக் குடியிருப்புத் திட்டம், மாற்றுத்திறனாளிகளுக்கான கணக்கெடுப்பு உரிமைகள் திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் ஆகியவை குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பாக கிராமசபைக் கூட்டத்தில் கூட்ட பொருள் விவாதிக்கப்பட்டது
மேலும் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது.
அனைவரும் நலமாக இருக்க வேண்டும் என்றால் சில விஷயங்களை கடைப்பிடிக்க வேண்டும் முதலாவதாக ஜாதி மத பேதமின்றி அனைவரும் ஒற்றுமையாக வாழ கற்றுக் கொள்ள வேண்டும் அடுத்ததாக குப்பைகளை பொது இடங்களில் கொட்டாமல் மக்கும் குப்பை மக்காத குப்பை என்று பிரித்து தூய்மை காவலர்களிடம் மட்டுமே வழங்க வேண்டும். அடுத்ததாக சுகாதார கழிப்பறையை பயன்படுத்த வேண்டும். மாவட்டம் முழுவதும் கழிவறை இல்லாத வீடுகளை கணக்கெடுத்து அவர்களுக்கு தனிநபர் இல்ல கழிப்பறை கட்டித் தருவதற்கான நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். அதற்கு முதலாவதாக திறந்த வெளியில் மலம் கழித்தல் அற்ற நிலையை உறுதி செய்ய வேண்டும். சுதந்திரம் அடைந்து 77 ஆண்டுகள் ஆகிவிட்டது நாம் மாறுவதற்கான மனநிலையை கொண்டு வர வேண்டும். அதேபோல் நமது வீட்டு கழிவுநீர்களை ரோட்டில் விடாமல் சிறு தோட்டங்கள் அமைத்து அதற்கு பயன்படுத்தலாம் அல்லது சிறு உறிஞ்சு குழிகள் அமைத்து பயன்படுத்த வேண்டும். அடுத்ததாக கல்வி என்பது மிக முக்கியமான அம்சமாகும் குறிப்பாக பெண் குழந்தைகளை அனைவரையும் படிக்க வைக்க வேண்டும் குறைந்தபட்சம் ஒரு பெண் குழந்தையை கல்லூரி படிப்பு வரையாவது படித்து இருக்க வேண்டும்.
அதற்காக நமது அரசாங்கம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது அதில் முக்கியமானது புதுமைப்பெண் திட்டம் இதில் அரசு பள்ளியில் படித்து கல்லூரி படிக்கும் பெண் குழந்தைகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கி வருகிறது தமிழக அரசு. அரசு பள்ளிகள் அனைத்தும் நமது பள்ளிகளாகும் அந்தப் பள்ளிகளுக்கு தேவையான அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களை தொடர்பு கொண்டு தேவைகளை நிறைவேற்றி பள்ளியை சிறப்பாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். நான் கூறிய இந்த குறைந்தபட்ச விஷயங்களை சரி செய்தாலே போதும் நாம் வாழும் இடம் சிறந்து விடும். நான் கூறிய ஒற்றுமை, சுத்தமான சுகாதாரமான கிராமம், கல்வி இவை வந்தாலே ஒரு ஊர் சிறந்த ஊராக மாறிவிடும். மேலும் நூலகங்களை பயன்படுத்தி வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
மேலும் இந்த கிராமத்திற்கு அத்தியாவசிய தேவை என்று கேட்ட சமுதாயக்கூடம் அமைப்பதற்கு உடனடியாக ஆணை பிறப்பிக்கப்படுகிறது. அடுத்ததாக தனியாக நியாய விலைக் கடை ஒன்று கேட்டிருக்கிறீர்கள் அது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் மேலும் மின் திறன் அதிகரித்து தர வேண்டும் என்று கேட்டுள்ளீர்கள் அது குறித்தும் ஆய்வுகள் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொண்டு இந்த அப்பிபாளையம் கிராம மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துக்களை சொல்லி வாழ்த்தி விடைபெறுகிறேன் என தெரிவித்தார்.
முன்னதாக பல்வேறு அரசுத்துறை அரங்குகளை அமைத்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியவை மாவட்ட ஆட்சித் தலைவர் பார்வையிட்டார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ம.கண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வாணிஸ்வரி, ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் சீனிவாசன், ஊராட்சிகளின் உதவி இயக்குனர் அன்புமணி, கரூர் வருவாய் கோட்டாட்சியர் ரூபினா, குளித்தலை வருவாய் கோட்டாச்சியர் சந்தியா, தாந்தோணி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வினோத்குமார், மண்மங்கலம் வட்டாட்சியர் குமரேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.