காவிரி, வைகை, குண்டாறு இணைப்புத் திட்ட பணிகள் - தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு
ரூ. 171 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படும் காவிரி, வைகை, குண்டாறு இணைப்புத் திட்ட பணிகள் மற்றும் நீர்வளத் துறை பணிகளை, தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா ஆய்வு செய்தார்.
காவிரி, வைகை, குண்டாறு இணைப்புத் திட்ட பணி.
ரூ. 171 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படும் காவிரி, வைகை, குண்டாறு இணைப்புத் திட்ட பணிகள் உள்பட கரூர் மாவட்டத்தில் நீர்வளத் துறையில் மேற்கொள்ளப்படும் பல்வேறு பணிகளை, தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா ஆய்வு செய்தார்.
கரூர் மாவட்டம், நஞ்சை புகழூரில் காவிரி ஆற்றின் குறுக்கே ரூ.389 கோடி ரூபாய் மதிப்பில் புதிய கதவணை கட்டும் பணிகள் நடக்கிறது. இந்த கதவணை அமைப்பதால் 0.8 டி.எம்.சி. தண்ணீர் சேமிக்க முடியும். இதன் மூலம் கரூர் மாவட்டத்தில் காவிரி ஆற்றின் வலது புறம் உள்ள வாங்கல் வாய்க்கால் வழியில் 1,458 ஏக்கர் நிலங்களும், இடது புறம் அமைந்துள்ள மோகனுார் வாய்க்கால் வழியில் 2,583 ஏக்கர் நிலங்களும் பாசனம் பெறும். இப்பணிகள் 40 சதவீதத்துக்கும் மேல் முடிவடைந்துள்ளது.
கிருஷ்ணராயபுரம் அருகே மாயனூர் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டளை கதவணை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கதவணையின் மூலம் 1.05 டிஎம்சி தண்ணீர் சேமிக்க முடியும். மேலும் கதவணையின் கிளை வாய்க்கால்கள் மூலம் கரூர், திருச்சி, தஞ்சாவூர், மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களை சேர்ந்த 1.12 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெற்று வருகிறது.
மாயனுார் கதவணை புனரமைப்பு பணிகள், 185.26 கோடி ரூபாய் மதிப்பில் நடக்கிறது. இப்பணிகள் 55 சதவீதம் முடிவடைந்துள்ளது.
இதேபோல மாயனூரில் இருந்து காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்டப் பணிகள், 171 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்படுகிறது. இப்பணிகள் 58 சதவீதம் முடிவுற்றுள்ளது. இந்த பணிகளை, தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் (நீர்வளத் துறை) சந்தீப் சக்சேனா, நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பணிகளை முடிக்க வேண்டிய காலம், ஒவ்வொரு பணியும் தரகட்டுப்பாடுகளுடன் செய்யப்படுகிறதா? என்பதை சம்பந்தப்பட்டபொறியாளர்களிடம் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின்போது, கலெக்டர் பிரபுசங்கர், நீர்வள ஆதாரத்துறை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி கண்காணிப்பு பொறியாளர் சுப்பிரமணியன், செயற்பொறியாளர் சாரா, உதவி செயற்பொறியாளர் சரவணன் உள்பட பலர் உடனிருந்தனர்.